மலேசிய நாணயம் – நோட்டுகளில் தமிழ் மற்றும் சீனம் மொழி எழுத்துக்களும் பொறிக்கப்பட வேண்டும் மலேசிய நாம் தமிழர் இயக்கம் பரிந்துரை

மலேசிய திருநாட்டின் நாணயம் மற்றும் நோட்டுக்கள் மாற்றி அமைக்கப்பட்டால், அதில் தமிழ், சீனம் மொழி எழுத்துக்களும் பொறிக்கப்பட வேண்டும் என மலேசிய நாம் தமிழர் இயக்கம் வேண்டுகோள் விடுப்பதாக அதன் தேசிய வீயூக இயக்குநர் திரு. பாலமுருகன் வீராசாமி கேட்டுக் கொண்டார்.

இந்நாட்டில் பெரும்பான்மையாக வாழும் மூவினத்தின் தாய்மொழியை, நாட்டின் அடையாளமாகவும் அத்தியாவசியமாகவும் இருக்கும் நாணய – நோட்டுகளில் இடம்பெற செய்வது சக இனங்களை சமமாக மதித்து பெருமைப் படுத்துவதோடு இனங்களுக்கிடையே சகோதரத்துவம் வளர்ப்பதர்க்கான மாபெரும் வரலாற்று செய்தியாகும் என்றார்.

உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மை மொழியான தமிழர்களின் தாய்மொழியை சிங்கப்பூர், இந்தியா, இலங்கை மற்றும் மொரீசியசு போன்ற நாடுகள் தங்கள் நாட்டின் நாணய – நோட்டுகளில் சேர்த்து தன் நாட்டு தமிழர்களுக்கு பெருமைமிகு அடையாளத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அதிலும் சிங்கப்பூர் அரசு தமிழ் மொழியை ஆட்சி மொழியாகவும் அரியணை ஏற்றி, 13 கோடி உலக தமிழர்களின் இதயங்களில் குடியிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சமூக ஊடக தளங்களில் பரவலாக பரவி வரும் மலேசியாவின் புதிய நோட்டு மாற்றம் உண்மையானால் அல்லது அமைந்துள்ள புதிய அரசு எண்ணம் கொண்டிருந்தால், இம்மூவினத் தாய்மொழியான மலாய், தமிழ், சீன எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நோட்டு – நாணயங்களை வெளியீட்டு, அழியா புகழ் கொண்ட வரலாற்று சாதனையை படைக்க வேண்டும் என்றார்.

மலேசியப் பல்லின மக்களின் தனித்துவத்தை உலக அரங்கில் பறைசாற்ற மலேசிய நாட்டின் நாணய – நோட்டில் தமிழ், சீன மொழி எழுத்துக்களையும் இணைத்து சக பெரும்பான்மை இனத்திற்கு பெருமை சேர்க்க, அமைந்திருக்கும் பாகாத்தான் அரப்பான் புதிய அரசுக்கு மலேசிய நாம் தமிழர் இயக்கம் கடிதம் வாயிலாக பரிந்துரைப்பதாக இயக்க தேசிய வீயூக இயக்குநர் திரு. பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.