யாழ். கோட்டைக்குள் மீண்டும் குடியேறும் சிறிலங்கா இராணுவம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஒல்லாந்தர் கோட்டையில் சிறிலங்கா இராணுவத்தினர் மீண்டும் நிரந்தரமான தளத்தை அமைக்கவுள்ளனர்.

ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட யாழ்ப்பாணம் கோட்டையின் பல பகுதிகள் போர்க்காலத்தில் சிதைவடைந்த போதும், போர் முடிவுக்கு வந்த பின்னர், நெதர்லாந்து அரசின் நிதியுதவியுடன், புனரமைக்கப்பட்டது.

சிறிலங்காவின் தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, பாரம்பரிய மரபுரிமைச் சொத்துக்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட, இந்த கோட்டையில் சிறிலங்கா இராணுவம் தளத்தை அமைக்கவுள்ளது.

யாழ். கோட்டையில் சிறிலங்கா இராணுவத்தினர் தளம் அமைப்பதற்கு, இடத்தைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக வட மாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே முன்னர் கூறிவந்தார்.

எனினும், வடக்கு மாகாணசபையும், யாழ். மாநகர சபையும் இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்தன.

இந்த நிலையில், யாழ்ப்பாணம் கோட்டைக்குள்- வடக்குப் பகுதியில்  உள்ள இரண்டு கொத்தளங்களுக்கு நடுவே – 6 ஏக்கர் காணி சிறிலங்கா இராணுவத்துக்கு தொல்பொருள் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் காணியில் தளம் அமைக்கும் பணிகளை சிறிலங்கா இராணுவத்தினர் ஆரம்பிக்கவுள்ளனர்.

அதேவேளை, யாழ்ப்ப்பாணம், கோட்டையில் மீண்டும் சிறிலங்கா இராணுவத்தினர் தளம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று பிற்பகல் 2 மணியளவில் கோட்டை நுழைவாயிலுக்கு முன்பாக, போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

TAGS: