விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் அனைத்து வகையிலும் தொடர்பு உள்ளவர்கள் ஒட்டுமொத்த உலக தமிழர்கள் – மலேசிய நாம் தமிழர் இயக்கம் அறிவிப்பு

தமிழர் வீரத்தை உலகிற்கு உணர்த்திய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் அனைத்து வகையிலும் தொடர்பு உள்ளவர்கள் உலக தமிழர்கள். விடுதலைப் புலிகள் தமிழீழ மக்களின் சுதந்திரத்திற்கு மட்டுமல்ல, உலக தமிழர்களுக்கென இருந்த, இழந்த தமது நாட்டை மீட்கவே போரிட்ட வீரமானமறவர்கள். தமிழீழ மக்கள்தான் விடுதலைப் புலிகள்,  விடுதலைப் புலிகள்தான் உலக தமிழர்கள். விடுதலைப் புலிகளை தமிழர்களிடமிருந்து பிரிப்பது, உடலை விட்டு உயிரை பிரிப்பது போன்றதாகும். அந்த வரிசையில் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் சற்று அதிக தொடர்பு உள்ளவர்கள் தமிழர் தேசியவாதிகள் என்று மலேசிய நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு கலைமுகிலன் அர்சுனன் கூறினார்.

132 நாடுகள் வரிசையில் 32 நாடுகள் மட்டுமே தவறான புரிதலை கொண்டுள்ளதை போல் விடுதலைப் புலிகள் இயக்கம்  தீவிரவாத இயக்கம் அல்ல. அது உலக தமிழர்களின் உன்னத கனவை சுமந்து, அவைகளை நனவாக்க அறத்தின் வழி நின்று தமது தாயக  விடுதலைக்காக போராட உருவாக்கப்பட்ட ஒரு புனித மக்கள் பேரியக்கம். சாவையும் சவாலாக சயினட் குப்பியில் அடக்கி, உலக தமிழர்கள் கொண்ட இலட்சிய கனவை அடைய 60 ஆண்டுகளாக போராடி, கண்ணீர் சிந்தி, இரத்தம் சிந்தி, வீட்டை இழந்து, நாட்டை இழந்து, உடல் உறுப்புகளை சிதைய கொடுத்து, இறுதியில் உயிரையே கொடையாய் கொடுத்து இன்று உலக அரங்கில் நிலைநிறுத்தப்பட்ட தமிழீழ தேசத்தை உருவாக்க அடித்தளம் இட்ட தமிழர்கள் உயிரில் கலந்த மாபெரும் வழிகாட்டி இயக்கம். இதை பின்னாளில் உணர்ந்த சில ஐரோப்பிய நாடுகள் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை அகற்றி, சுதந்திரமாக செயல்பட அங்கிகாரம் வழங்கி வருவது வரவேற்கத்தக்கது. இதை இன்னும் உணராத மலேசியா போன்ற சில நாடுகள் சிங்கள இனவெறி இலங்கை அரசுக்கு ஆதரவளித்து வருகிறது. இதை தட்டி கேட்டால் எங்களை கைது செய்கிறது. இந்த இயக்கத்தை குறை கூற, தனது தாயக மண்ணுக்காக மரணித்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விடுதலைப் புலி மறவர்களை தவிர வேரெவருக்கும் எந்த அருகதையும் கிடையாது என்றார் இயக்க தேசிய வீயூக இயக்குநர் திரு பாலமுருகன் வீராசாமி.

உலகில் எந்த தீவிரவாத இயக்கம் மருத்துவமனை, சட்ட கல்லூரி, ஆதரவற்ற இல்லம், தொழில் பயிற்சி மையம், கடல்ப்படை, தரைப்படை, வான்ப்படை, கல்வித்துறை, கலைத்துறை, காவல்த்துறை, நிதித்துறை, நீதித்துறை போன்ற எத்தனையோ எண்ணற்ற துறைகளை வைத்திருக்கிறது. அப்படி வைத்திருக்கும் இயக்கம் எப்படி தீவிரவாத இயக்கமாக இருக்க முடியும் ? ஒரு நாட்டிற்கான அத்தனை துறைகளும் நிர்வாகங்களும் கடந்த 35 ஆண்டுகாலம் விடுதலைப் புலிகள் இயக்கம் வழி நடத்தியது உலகம் அறிந்த செய்தியாகும். உலக அரங்கில் தமிழீழ கொடி மட்டுமே பறக்க வில்லை. ஆனாலும் உலகமே வியக்கும் வகையில் ஒரு பிச்சைக்காரர் கூட இல்லாத, ஒரு நாட்டிற்கான அத்தனை விடயங்களையும் திறன்பட நிறுவாகித்தது விடுதலைப் புலிகள் இயக்கம் என்றார் இயக்க தேசிய இளைஞர் பாசறை பொறுப்பாளர் திரு மாவேந்தன் செயரத்தினம்.

ஆகவே தற்போது பினாங்கு மாநில துணை முதல்வர் டாக்டர் பி. இராமசாமி அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு உள்ளவரா என்ற விசாரணையை, ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி, “ஆம் நான் விடுதலைப் புலிகளின் தொடர்பாளன்” என்று உலக தமிழர்களின் அடையாளமான விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உன்னத இலட்சிய நோக்கத்தை புரிய வைத்து அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்பதை நிருபிக்க வேண்டும். மாறாக அவர்களுக்கும் எனக்கும் அறவே தொடர்பேதும் இல்லையென கூறி உலக தமிழர்களையும் மலேசிய தமிழர்களையும் அவமானப்படுத்திவிட வேண்டாம். அன்று நீங்கள் எதிர்கட்சி இன்று நீங்கள்தான் ஆளுங்கட்சியின் தமிழர்களின் பிரதிநிதி.

ஆதலால் அரசுக்கு அஞ்சாது அரச மலேசிய காவல்துறை உயர் தலைமை அதிகாரிகளிடம் வட்டமேசையில் அமர்ந்து பேசி விளக்குங்கள். விடுதலைப் புலிகள் இயக்கம் உத்தம இயக்கம் என்று பதிய வையுங்கள் என்றார் இயக்க ரவாங் மண்டல பொறுப்பாளர் திரு இராவணன் கன்னியப்பன்.

இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி மலேசியர்களுக்கு உணர்த்தும் வகையில் எப்படி தங்கள் நேச நாடான பாலசுதீன விடுதலைக்காக போராளி “யாசர் அரபாட்” தலைமையில் ‘வத்தா’ மற்றும் ‘அமாசு’ போன்ற இயக்கங்கள் போரடியதோ.? அதேபோல் எங்கள் “தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன்” அவர்களின் தலையில் தமிழீழ விடுதலைக்காக  விடுதலைப் புலிகள் இயக்கம் போராடியது. எப்படி இசுரேலிய இராணுவம் பாலசுதீன அப்பாவி மக்கள் மீது அடக்குமுறை கொண்டு அழித்ததோ.? அதைவிட சிங்கள இனவெறி இலங்கை இராணுவம் தமிழர்கள் எங்கள் தொப்புள் கொடி உறவுகள் மீது சொல்ல முடியாத அளவிற்கு வன்கொடுமைகள் கோரக்கொலைகள் என இலட்சக்கணக்கில் இன்றும் செய்து வருகிறது. எப்படி மலேசிய உள்ளிட்ட உலக மக்கள் பாலசுதீனத்தை ஆதரித்தார்களோ உதவி பொருட்கள் மற்றும் மருத்துவ குழு அனுப்பினார்களோ.! அதேபோல் மலேசிய தமிழர்கள் உட்பட உலக தமிழர்களும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரிக்கிறார்கள். அனைத்து உதவிகளையும் செய்கிறார்கள். எப்படி மலேசிய அரசு பாலஸ்தீன மக்களுக்கு  உதவியது மற்றும் அவர்களுக்கு ஆதரவாக மலேசிய கடப்பிதழில் இசுரேல் போக அனுமதி மறுப்பு தவரில்லையோ. .? அப்படி விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதும் ஆதரிப்பதும் தவரில்லை என்றார் இயக்க பெத்தாலிங் செயா மண்டல பொறுப்பாளர் திரு தமிழ்வாணன் முத்தையா.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரவாதிகள் என்று குறிப்பிட்டால்,  இதுவரை விடுதலைப் பெற்ற நாடுகளான மலேசியா உள்ளிட்ட அனைத்தும்  சுதந்திரத்திற்காக போராடிய போது இவர்களும் தீவிரவாதிகள்தான் என்று சொன்னால் ஏற்க முடியுமா.? அன்று தென்னாப்பிரிக்கா விடுதலைப் போராளி “நென்சன் மண்டெலா” அவர்களை தீவிரவாதி என்ற அதே நாட்டின் பாராளுமன்றத்தில் அவருக்கு உருவச்சிலை எழுப்பப்பட்டது எப்படி.? மாற்று இனங்கள் அல்லது நாடுகள் நம்மை புரிந்து கொள்ளாததைக் கூட ஏற்கலாம். ஆனால் சக இனமான தமிழ் முசுலிம்களும் சிலர் அவர்களுடன் இணைந்து விடுதலைப் புலிகளை எதிர்ப்பதும், தூற்றுவதும் உண்மை விளங்காமல் எதிராக போராடுவதும் நமக்கு வேதனை அளிக்கிறது. தான் தழுவிய மதத்தை முதன்மையாக கொண்டு தான் வந்த இனத்தை பின்தள்ளி பழிப்பது ஆராத வடுவாக எரிகிறது.

உண்மையில் அவர்கள்தான் விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாதிகள் அல்ல என இந்நாட்டு சக தோழர்களிடம் பறைசாற்றியிருக்க வேண்டும். நிலைமை இங்கு வேறு. எது எப்படியாயினும் அனைத்து தரப்புக்கும் விளக்க வேண்டிய கால கடமை தேவை எங்களுக்கு இருக்கிறது.

மலேசிய தமிழர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இறுதிவரை உறுதியுடன் என்றும் எல்லா வகையிலும்  ஆதரவாகவும், அரவணைப்பாகவும் அவர்களை எதிர்ப்பவர்களுக்கு பதில் அளிக்கவும் தயராக இருக்கிறோம் என்றார் மலேசிய நாம் தமிழர் இயக்க பந்திங் மண்டல பொறுப்பாளர் யுவராசன் இராசராம்.