மலேசிய நாம் தமிழர் இயக்க ஏற்பாட்டில் தமிழ்ச் சமய மீட்பு அறிஞர்கள் காவலர்கள் கட்டமைப்பு கூட்டம்

கடந்த 4-ஆகசுடு தலைநகர் விஸ்மா துன்   சம்பந்தன் கட்டிடத்தில் மலேசிய நாம் தமிழர் இயக்கம் ஏற்பாட்டில் மலேசிய வீரத்தமிழர் முன்னணி, கோலாலும்பூர் இலக்கியக் கழகம், சைவ சமய நற்பணி இயக்கம் போன்ற சில அமைப்புகளின் ஒத்துழைப்பில் மலேசிய தமிழ்ச்சமய மீட்பு அறிஞர்கள் காவலர்கள் கட்டமைப்புக் கூட்டம் மிக சிறப்பாக நடந்தேறியது.

கூட்ட நெறியாளர் ஆசிரியர் திரு. துரைமுருகன் வழிநடத்த, முறையே குத்து விளக்கு ஏற்றி, தமிழ் வாழ்த்து, இறை வாழ்த்து, மற்றும் நாட்டின் தேசிய பாடலுடன் கூட்டம் தொடங்கியது.

மலேசிய நாம் தமிழர் இயக்க தேசிய வீயூக இயக்குநர் திரு பாலமுருகன் வீராசாமி அவர்கள் தனது வரவேற்புரையில்,

தமிழ், தமிழர், தமிழ்ச் சமயம் என்பவற்றால் நமது முன்னோர்கள் உலக இயற்கையையும் அறிவியலையும் உணர்ந்து, எடுத்து, வகுத்து, அமைத்து வைத்த உயர்ந்த வாழ்வில் வளங்கள் தமக்கே உரிய மரபுகளை மறந்து மாற்றான் சிந்தனையில் சிதைந்து , பிற சமய திணிப்பு வழியில் மயங்கி, தமது இன மொழி சமய அடையாளங்களை தொலைத்து மதியிழந்த சமூதாயமாக நமக்கே தெரியாது வாழ்ந்து வருவதையும், நமது இனமும் மொழியும் கொண்ட வரலாற்று வழிதட பெருமைகளை பகிர்ந்த வேளையில் உலக மாந்தர்களுக்கே அறிவிலையும் நாகரீகத்தையும், அறத்தையும், வீரத்தையும், மானத்தையும் கற்பித்த இனம் தமிழர் தேசிய பேரினம் என்றார்.

அவ்வரிசையில் அறிவில் சிறந்த, இயற்கையில் இணைந்த, மெய்யறிவு பரந்த, இறைஞானம் நிறைந்த சமயம் நமது போற்றதலுக்குறிய தமிழ்ச் சமயம் என பிரகடனம் செய்தார்.

இப்படிப்பட்ட தலை சிறந்த தமிழர் இனம் நமது மொழி திரிந்து, முகம் தொலைத்து, முகவரியற்ற கால பரிமாண வளர்ச்சியில் பலவற்றை இழந்து வருவதை எண்ணி, வீழ்ந்த இடத்தில் மீண்டும் எழுந்து புதிய புரட்சியாக தமிழ்ச் சமய எழுச்சியை உருவாக்க வேண்டிய காலக் கடமை தமிழர்கள் நமக்கு உள்ளதை உணர்ந்து, தமது மரபு வழி வரும் தமிழ்ச் சமயம் உயர்வானது, சிறப்பானது, செம்மையானது என தமிழர்களுக்கு புரியவைத்து,

தமிழ்ச் சமயத்தை மீட்டெடுப்பதன் வழி தமிழர் இனம் மேம்படும், நம்மிடையே ஒற்றுமை வலுப்பெறும், புரிந்துணர்வு அதிகரிக்கும் என்றார்.

மேலும் நமது இன மொழி சமய உரிமை உடமையை அயலான் அபகரிக்க, மாற்றான் மாசுபடுத்த ஒருபோதும் விடக்கூடாது எனவும்,

நம் விரலைக் கொண்டு நம் கண்ணை குத்த நினைக்கும் ஆரிய திராவிட வடுக கூட்டத்தினர் சதிசெயல்களையும் முறியடிக்க வேண்டும் என்பதோடு, தமிழ்ச் சமயத்தை மீட்டெடுக்கும் உன்னத அரும்பெரும் பணியில் ஒற்றை சிந்தனையில், ஒருமித்த கருத்துடன், ஒரே பாதையில் பயணிக்க, ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் வேண்டும் என வருகையாளர்களிடம் கேட்டு கொண்டார்.

அதனையடுத்து தமிழ்ச் சமய ஆய்வாளர் திரு. இலக்கியவாணன் தமது உரையில் தமிழ்ச்சமய மீட்டெடுப்புக் பணியாக முதலில் திருக்கோயில் எங்கும் தமிழில் ஓதுதல் வேண்டும் என்று முதன் முதலில் முன்னெடுத்தவர்கள் அன்றைய தமிழ் தேசிய சிந்தனையாளர்களான அப்பரும் திருஞானசம்பந்தரும் ஆவர் என்ற ஆதாரபூர்வமான வரலாற்றுச் சான்றை பதிவு செய்தார். தமிழர்கள் திருக்கோயிலில் தமிழில் அர்சனை என்ற ஒன்று புதுயது அல்ல எனவும் இனி முதல் கட்டமாக எந்த வழிபாடாக இருந்தாலும்  அதை தமிழில் செய்தால் பின்னாளில் தமிழ்ச் சமய வழிபாடு தானாகவே வளர்ந்து விடும் என தமது உரையில் பதிவு செய்தார்.

அதன்பின் உரயையாற்றிய மலேசிய தமிழர் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஐயா திரு. பொன்ரங்கன் தன்னுடைய உரையில் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் நாம் பரவி வாழ்ந்தாலும் அந்த நாட்டின் குடியுரிமை (Citizen) என்பது  நமது அடையாளம் அல்ல என்பதை ஒவ்வொரு தமிழர்களும் மனதில் நினைவில் கொள்ளுங்கள். தமிழ், தமிழர், தமிழ்ச்சமயம்தான் நமது உலக குடியுரிமை அடையாளம் என்றார்.

புலம்பெயர்ந்து நாம் பல நாடுகளில் இன்று வாழ்ந்தாலும் நமது உரிமைமிக்க பூர்விகத் தாய் மண் தமிழ்நாடு மற்றும் தமிழீழமும் மட்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

அதுபோல் உலக தமிழர்களுக்கு தமிழ் மொழி மற்றும் தமிழ்ச் சமயமே உன்னத அடையாளம் என்றார்.

திட்டமிட்டு மறைக்கப்பட்ட தமது தமிழ்ச் சமயத்தை மீட்டெடுத்து கட்டக்கட்டமாக உலகுக்கு பரப்ப வேண்டிய கடப்பாடு தமிழர்கள் தமக்கு இருக்கிறது .

இனி மலேசியாவில் பிறக்கும் தமிழ் குழந்தைகளின் பிறப்பு பாரத்தில் “Agama” எனும் இடத்தில் தமிழ், தமிழியம் அல்லது தமிழ்ச் சமயம் என எழுதுவதே சரியாக இருக்கும்.

தான் வந்த வரலாறு தெரியாது இடையில் வந்த சமயத்தை எல்லாம் தூக்கி சுமக்கிற நிலை மாற வேண்டும். தமிழர்கள் தனது இனத்தின் அடையாளத்திற்குள் தங்கள் வாழ்வியல் நெறிகளுக்குள் ஓர்மைகொண்டு பயணிக்க வேண்டும்.

இயற்கையோடு நாம் தமிழனாக தமிழ்ச்சமயத்தோடு ஒன்றிணைந்து வாழ்ந்தால் மட்டுமே இந்த பூமியில்  நாம் நமது உண்மையான பிறவிப்பயனை அடைவோம் என கூறினார்.

தாகம் தீர்க்க தண்ணீரும், உண்ணுவதற்கு உணவும் , இருக்க நிம்மதியான இடமும் உலகில் அனைத்து உயிர்களுக்கும் கிடைக்கவேண்டும் உயிர்நேயம் கொண்ட தமிழர் மாண்பு தமிழ்ச் சமயம் இதனையே வலியுறுத்துகின்றது.

உயிர்நேயம் மிக்க உலகின் மூத்த குடி தமிழர்கள் நாம் என்பதை உறுதிசெய்வோம் .

நமது இனத்தின் சமய அடையாளத்தை மீட்டால் மட்டுமே நமது இயற்கையோடு ஒன்றிய வழிபாட்டையும் வாழ்வியலையும் ஓங்கி ஒலிக்க முடியும் !!!

இந்த உலகில் யாரும் தாழ்ந்தவர் இல்லை எல்லோரும் சமமானவர்களே எந்த ஒரு இனத்தையும் அடிமைபடுத்தி ஆள்வதை ஒருபொழுதும் தமிழினம் அனுமதிக்காது.

தமிழ்ச்சமயத்தோடு விழித்தெழு தமிழா என  கூறி, அரசியல் பார்வையில் தனது உரையை நிறைவு செய்தார்.

அவரைத் தொடர்ந்து தமிழிய ஆய்வாளர் ஐயா திரு. அறிவன் அவர்கள் தமிழர் கோவில்களில் ஒரே அடையாளமாக “ஓம்” எனும் அடையாளத்தைக் கொண்டிருத்தல் வேண்டும். பன்னெடுங்காலமாக இந்த அடையாளம் நமது வழிபாட்டுத்தலங்களில் இருந்து வருகிறது. சில கோவில்களில் ஓம் என்பது வட எழுத்து (ॐ) என்று எழுதப்படுகிறது. தமிழர் திருத்தலங்கள் அனைத்தும் தமிழின் அடையாளத்தை முன்னெடுத்து “ஓம்” எனும் தமிழ் எழுத்து வடிவத்தையே கொண்டிருக்க வேண்டும். இது தமிழ்க் கோவில்களில் ஒரே சீரான கோவில் அடையாளங்கள் அமைய வேண்டும். இதை ஒருங்கிணைக்க நடவடிக்கையை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

தமிழர்கள் தங்களின் தனித்துவத்தை நிலைநாட்ட மொழி, இனம், சமயம் எனும் மூன்று நிலையிலும் முன்னெடுத்தல் வேண்டும். இதில் நமக்கு மொழி, இனம் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் சமயம் எனும்போது மட்டும் “இந்து மதம்” எனும் அடையாளத்தைச் சூட்டிக் கொள்கிறோம். இந்து என்பது ஆங்கிலேயர் அவர்தம் வசதிக்காக நமக்குச் சூட்டியப் பெயராகும். இந்து எனும்போது தொன்மையான நம் மொழி வழிபாட்டு இடங்களில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

நமது பாரம்பரிய இலக்கியங்களில் பெரும்பாலும் மதச்சார்பற்ற தன்மை தெரிகிறது. சில படைப்புகள் பத்துப்பாட்டு, பரிபாடல் போன்ற இலக்கியங்களில் திருமால், சிவன், முருகன் ஆகிய தெய்வங்கள் பற்றிய குறிப்புகளும் உண்டு. வடநாட்டிலிருந்து சமணம், பௌத்தம், வைதீக மதங்கள் வந்து தமிழரிடையே கலந்தபின் நமது வழிபாடுகள், நம்பிக்கைகள், சடங்குகள், தமிழ்க்கலை, சமயக்கலை தமிழ் நாகரிகம் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டு ஆரிய மயமாகி போனது. இந்நிலையை தடுக்க பக்தி இயக்கங்கள் தோன்றின. காலப்போக்கில் அதன் தொடர்ச்சி இல்லாததால் தனித்துவமாக விளங்கி வந்த நமது கோவில் வழிபாடு என்பது தமிழர்க்கு ஆதியில் இருந்து வந்தது எனும் நிலை மறைக்கப்படுகிறது.

தமிழ்ச்சமயம் இன்று முற்றும் முழுவதுமாக அதன் தனித்துவம் மறைக்கப்பட்டு வருவதை நாம் காண்கிறோம். இந்நிலை நீடித்தால் மொழி இன தனித்தன்மை பாதிக்கப்படும்.

தமிழ்ச்சமயம் என்பது உலகப் பொது நெறியாகும். ஆதியில் இருந்து தமிழில் இருந்த நம் கோவில் வழிபாடு இப்போது உள்ள சமற்கிருத வழிபாட்டில் இருந்து விடுபட்டு தமிழிலேயே மீண்டும் நடத்தப்பட வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதன் தனித்துவம் காக்கப்பட வேண்டும்.

வீட்டிலும் கோவில்களிலும் நடைபெறும்  சமய காரியங்கள் அனைத்தும் தமிழில் நடைபெற வேண்டும் என  தமதுரையில் அவர் கூறினார்.

அடுத்ததாக உரையாற்றிய  தமிழ் இலக்கிய கழகத்தைச் சார்ந்த ஆய்வாளரான ஐயா திரு. பழனிபாரதி அவர்கள்  தமிழ் இலக்கிய கழகம் தமிழ்ச்சமயம் சார்பான சந்திப்பு கூட்டத்தில் பங்களித்தது வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை என சொன்னார்.  தமிழ்ச்சமயம் பற்றிய பல சங்ககால இலக்கிய சான்றுகளும் உள்ளது  எனவும், இனி தாங்கள்  முன்னெடுக்கும் அனைத்து தமிழ்ச் சமய மீட்பு பணிகளுக்கு தமது இயக்கம் உறுதுணையாக இருக்கும் என உறுதியளித்து தனது உரையை நிறைவு செய்தார்.

சிறப்புரையாற்றிய மலேசிய சைவ சமய நற்பணி மன்றத் தலைவர் திருமறைச் செம்மல் ஐயா தமிழ்திரு. தர்மலிங்கம் அவர்கள், தமிழ்ச்சமயத்தில் இடையில்  புகுந்த  தமிழர் அல்லாதவர்கள் இச்சமய வழிபாட்டு முறைகளில் அறிவிற்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத பல வழிப்பாட்டு முறைகளை உள்ளே திணித்து அறிவியல் மற்றும் அறிவுப்பூர்வமான இச்சமயத்தினை காலங்காலமாக  இருட்டடிப்பு செய்துவருகின்றனர் என்றார்.

ஆகையினால், தற்போது உள்ள நம் தமிழ் சமுதாயத்தின் பின்தங்கிய சூழ்நிலைக்கு இவ்வாறான  சமய மீட்பு பணிகள் காலத்தின் கட்டாயமாக கருதப்படுகிறது எனவும், தமது  மன்ற சார்பில் நாடு முழுவதும் தமிழ் வழிபாடு பட்டறைகள், கருத்தரங்குகள் மற்றும் விளக்க கூட்டங்கள் நடத்தி வருவதாக குறிப்பிட்டார்.

தமிழர்கள் தங்களது வீட்டில் நடக்கும் நல்லது கெட்டது என அனைத்து காரியங்களையும் தமிழ் முறைப்படி நடப்பதையே உறுதி செய்யவேண்டுமென கேட்டு கொண்டார்.

கோவிலுக்கு செல்லும்  தமிழர்கள் குருக்களிடம் தமிழ் மந்திரங்கள் ஓத வலியுறுத்த வேண்டும் எனவும் ஓத தெரியாத குருக்களை மலர் மட்டும் போட சொல்லி நீங்களே தமிழ் இறை பாடல்களை பாடுங்கள் என்றார்.

அதற்கு முன் தமிழர்கள் தங்களை தயார் படுத்தும் விதமாக தங்கள் முன்னோர்கள் சமய வழிகாட்டிகள் வகுத்து வைத்த மந்திரங்கள் மற்றும் இறை பாடல்களை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும் என்றும் ஏற்பாட்டு குழுவினருக்கு என்றும் உதவிகரமாக இருப்பதாக கூறி விடைப்பெற்றார்.

அதன் பிறகு நாம் தமிழர் இயக்க கிள்ளான் மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு. செல்வகுமாரன் மற்றும் பினாங்கு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். சக்திசிவம் தலைமையில் தமிழ்ச் சமய மீட்பு கட்டமைப்பு வழிநடத்தலுடன் சிங்கை ஒருங்கிணைப்பாளர் தோழர்.  அனந்த தமிழன் நன்றியுரை வழங்கி, தோழர். மைத்ரேயர் முத்துராமலிங்கம் உறுதி மொழி வாசிக்க,  வந்திருந்த அனைவரும் உறுதி ஏற்று, கூட்டம் வரலாற்று பதிவுடன் இனிதே நிறைவுற்றது.