அரசியல் வேட்டைக்காக  தமிழினத்தை, சினிமா அடிமையாக்குவதா ? – மலேசிய நாம் தமிழர் இயக்கம் கண்டனம்

போட்டிக்சனில் நடைப்பெறவிருக்கும் இடைத்தேர்தலில் பி.கே.ஆர் கட்சியின்  தலைவர் டத்தோ சிறி அன்வார் இப்ராகிம் போட்டியிடுவதை அடிப்படையாக கொண்டு இலவச திரைப்பட சீட்டுக்களை வழங்குவது ஒரு தவறான அரசியல் நகர்வு என்று மலேசிய நாம் தமிழர் இயக்க சிலாங்கூர் மாநில செயற்குழு பொறுப்பாளர் திரு ஆதிரன் கண்டனத்தை பதிவு செய்தார் .

இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் டத்தோ சிறி அன்வார் இப்ராகிமின் நிலைப்பாட்டையோ அவரது உரிமையோ விமர்சனம் செய்வதற்கு ஒன்றுமில்லை, ஆனால் கடந்த 30 ஆண்டுக்கால எந்த அரசியல் நகர்வுகளையும் அரசியல்கள் கலாச்சாரங்களை வெறுத்தோமோ, மீண்டும் அதே அரசியல் கலாச்சாரங்களைதான் இன்றைய புதிய ஆட்சியில் பழைய அரசியல்வாதிகள் செய்வதாக தாம் நம்புவதாக திரு. ஆதிரன் தெரிவித்தார் .

கடந்த காலங்களில் தமிழர்களை அரசியல் கூட்டத்திற்காக, சினிமாக்களையும் ஆட்டம் பாட்டம் போன்ற கேளிக்கை கூத்துக்களை வழியே திரட்டினார்கள். அதுப்போக இலவசம் என்ற ஒன்றை சொல்லி வழக்கப்படுத்தி தமிழர்களையே அடிமையாக வைத்திருந்ததை நாம் மறுக்க முடியாது .

அதே கலாச்சாரத்தை தமிழர்களின் வாக்குகளை ஈர்க்கவே இந்த 400 இலவச திரைப்பட கலை நிகழ்ச்சியின் பற்று சீட்டுக்களை வழங்குவதும் தமிழர்களை அடிமையாக்குவதாகவும், இப்படி சினிமா, ஆட்டம் பாட்டம் என்றால்தான் தமிழர்கள் திரள்வார்கள் என்ற சிந்தனையை உருவாக்குவதாக வேதனையுடன் திரு. ஆதிரன் தெரிவித்தார் .

இந்த நாட்டில் தமிழர்களுக்கு தேவை இலவசமோ , கலைநிகழ்வுகளோ , சலுகைகளோ அல்ல..! நமக்கு வேண்டியது தமிழருக்கான அடிப்படை அரசியல் உரிமை..!

மதிப்புக்குரிய டத்தோ சிறி அன்வார் இப்ராகிம் அவர்கள் இதுபோன்ற சினிமா, இலவச பற்றுசீட்டுகள் போன்ற செயல்களுக்கு ஊக்கமளிப்பதை தவிர்த்து கொண்டு, போர்ட்டிக்சன்  தமிழர்களுக்கு தேவையான ஒன்றை உணர்ந்து செயல்பட்டால், சமூக இயக்கங்கள் வர வேற்பார்கள். முன்பு போல  நான் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி என்ற அரசியல் வித்தையை கொண்டு தமிழர்களை ஈர்க்கலாம் என்ற எண்ணங்களை அரசியல்வாதிகள் கைவிட்டு, தூய்மையான அரசியல் அதாவது மக்களின் தேவையை அறிந்து செயல்படுவது சிறப்பு என்று நாம் தமிழர் இயக்கத்தின் சிலாங்கூர்  மாநில செயற்குழு பொறுப்பாளர் திரு ஆதிரன் தெரிவித்து கொண்டார்.