பெரியாரால் பறிபோன தனித் தமிழ்நாடு! வலிக்கும் வரலாறு!!

#பெரியார்தனித்தமிழ்நாடுகேட்டாரா? ஆம் கேட்டார் என்பது தான் சரியான பதில் ஆனால் யாரிடம் எப்படி கேட்டார் , அதற்காக என்ன வேலை செய்தார் என்பது முக்கியம்.

“திராவிடர் கழகம் “தொடங்கி எல்லா முற்போக்கு இயக்கங்களும் “தமிழ்நாடு தமிழருக்கு “என்று பெரியார் பேசினார்,தமிழ்நாடு தமிழருக்கு என்றும், தமிழ்நாடு தனிநாடு ஆகவேண்டும் என்றும் சொன்னார் என்றும் அதனால் “தமிழ்த்தேசிய தந்தையாகவும்”,தமிழர்களின் தலைவராகவும் பெரியார்தான் இருக்கவேண்டும் என்று பேசியும்,எழுதியும் பரப்பி வருகின்றனர்.

இந்திய விடுதலை குறித்தும் அதிகாரம் மாற்றம்(transfer of power) குறித்தும் பேசுவதற்கும்,அரசியல் சிக்கல்களை தீர்ப்பதற்கும் சர்.ஸ்டார்ஃப்போர்டு கிரிப்ஸ் தலைமையில் பிரிட்டிஷ் மந்திரி சபை ‘தூதுக்குழு ‘ஒன்று இந்தியா க்கு 1942 ல் வந்தது.வந்த குழு இந்தியாவில் அதிகார மாற்றம் கேட்டு போராடிய மொழிவழி,மதவழி இயக்கங்களுடன் மற்றும் மகாராஜாக்களிடமும் கோரிக்கை மனு கேட்டது. மேலும் தனிநாடு கேட்பவர்கள் தங்களின் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என்று அறிவித்தது.

இந்தியாவில் பல்வேறு வகையான தரப்பினர் மொழி,மத அடிப்படையில் தனிநாடு வேண்டும் என்று அந்த தூதுக்குழுவிடம் மனு கொடுத்தனர்.

அந்த குழுவை சந்திப்பதற்கு முன்பு பம்பாயில் முகமது அலி ஜின்னா, அம்பேத்கர், வீரசாவர்கர் ஒரு குழுவாகவும் பெரியார், அம்பேத்கர், ஜின்னா இம்மூவரும் இன்னொரு குழுவாகவும் விவாதித்தனர். அதன் அடிப்படையில் அவரவர்கள் அதிகார மாற்றம் கேட்டு தனிநாடு கேட்பது என முடிவும் செய்யப்பட்டது. அந்த கோரிக்கையில் தன் மக்களுக்கு இறுதி வரை உறதியாகவும், உண்மையாகவும் நின்றவர் ஜின்னா மட்டுமே. பிரிட்டிஷ் இந்திய அமைச்சரவையில் தனக்கு “தொழிலாளர் துறை அமைச்சர் “பதவி கிடைத்தவுடன் அம்பேத்கர் தன் “இந்துஸ்தான் “தனிநாடு கோரிக்கையை கைவிட்டார். வீரசாவர்கரின் அகண்டபாரத கோரிக்கையும் நீர்த்துப்போனது.

தமிழ்நாடு தமிழருக்கு, தமிழ்நாடு தனிநாடு என்று 1938ல் இருந்து பேசி,எழுதி வந்த பெரியார் அதற்காக சென்னை மாகாணத்தில் பிரச்சாரம் செய்தார். மேலும் 30.03.1942 அன்று மேற்கண்ட அமைச்சரவை குழுவை (British cabinet mission) பெரியார் தலைமையில் ஊ.பு.அ.சௌவுந்தபாண்டியன், என்.ஆர்.சாமியப்பா, எம்.ஏ.முத்தையா ஆகிய நான்கு பேரும் சந்தித்து “திராவிட நாடு “வேண்டும் என்று கோரிக்கை மனு ஒன்றை வைத்தனர்.

கோரிக்கை மனுவினை பரிசீலனை செய்த அமைச்சரவை குழு பெரியார் தலைமையில் வந்த குழு வைத்த கோரிக்கையில் அடிப்படையில் நீங்கள் தெலுங்கு,மலையாள, கன்னட பகுதிகளில் பிரதிநிதிகள் இல்லை, நீங்கள் வெறும் தமிழ்பேசுகிற பகுதி பிரதிகள் மட்டுமே, மேலும் நீங்கள் கேட்கிற திராவிட நாட்டிற்கு ஹைதராபாத் நிஜாம் பகுதியிலோ, மைசூர் மாகாணத்திலோ, திருவாங்கூர், நீலம்பூர் சமஸ்தானம் போன்ற தெலுங்கு, மலையாள, கன்னட மக்களிடமோ ஆதரவு இல்லை என்று கோரிக்கையினை நிராகரித்து திருப்பி அனுப்பியது. மேலும் தாங்கள் தமிழ்பேசுகிற பகுதிகளுக்கு தனிநாடு கேட்டால் அது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் திருப்பி அனுப்பியது.

வந்த பெரியார் தலைமையிலான குழு தன் திராவிட நாடு கோரிக்கையை தனித்தமிழ்நாடு என்று மாற்றாது, இல்லை திராவிட நாடு கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசும் மக்களிடம் சென்று இயக்கம் கட்டி பிரச்சாரம் செய்யாமலும் சென்னை மாகாணத்தில் தமிழர் பகுதிகளில் மட்டும் “தமிழ்நாடு தமிழருக்கு “என்று இரண்டு மூன்று கூட்டங்கள் நடத்தியது.

பெரியாரின் இந்த செயல்களில் முரண்பட்ட பண்ணீர் செல்வம் அவர்கள் தனித்தமிழ்நாடு கேட்டு இங்கிலாந்து போகிற வழியில் இறந்துபோனார் என்பது தனிவரலாறு.

01.07.1947-ஐ வெள்ளைக்காரனை எதிர்த்து பாக்கிஸ்தான் ‘கோரிக்கை நாள் ‘(Demands Day) கொண்டாடினார் ஜின்னா.அதே நாளை தமிழ்நாட்டில் ‘திராவிட நாடு பிரிவினை நாள்’ என்று கொண்டாடினார் பெரியார். அந்த கோரிக்கைக்கு கேரளாவிலோ, கர்நாடகத்திலோ, ஆந்திராவிலோ துளியளவும் ஆதரவோ ,வரவேற்போ இல்லை என்பதுதான் உண்மை.

தமிழ்பேசுகிற மக்களிடம் மட்டும்தான் பெரியார் தலைமையில் சென்ற குழுவுக்கு ஆதரவு இருக்கிறது என்று பிரிட்டிஷ் அமைச்சரவை குழு சொல்லியும் விடாப்பிடியாக தன் கோரிக்கையை தனித்தமிழ்நாடு என்று மாற்றாது, அதற்கு இயக்கம் நடத்தாது .திராவிட நாடு தான் வேண்டும் என்று பிரிட்டிஷ் அமைச்சரவையிடம் மனுக்கொடுத்தது தமிழ்மொழி பேசுகிற மக்களுக்கு பெரியார் செய்த ‘பச்சை துரோகம் ‘ஆகும்.

வெறும் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதவர் எங்கிற பார்வையாளும், தமிழ்நாட்டில் வாழ்ந்த 15 விழுக்காடு பிறமொழிக்காரர்களுக்காகவும் ‘தனித்தமிழ்நாடு ‘என்கிற கோரிக்கையை அடியோடு சாகடித்தவர் பெரியார்.

கிடைத்த வரலாற்று வாய்ப்பில் இங்கிலாந்து அரசிடம் ‘மேல்முறையீடு மனு ‘செய்து தமிழ்நாடு தனிநாடு என்று கேட்காமல் வந்த பிரிட்டிஷ்காரனை விட்டுவிட்டு பொதுமக்களிடம் மட்டும் மேடைபோட்டு ‘தமிழ்நாடு தமிழருக்கு’ என்று பேசியது எந்த வகையில் நியாயமாக இருக்கும்.

பெரியார் வாழ்ந்த காலத்தில் சாதி,மத, பார்ப்பன ஆதிக்க சக்திகளுக்கு எதிராக போராடியவர்களில் முதன்மையானவர் மட்டுமின்றி தவிர்க்க முடியாதவரும் கூட.

அந்த கழகக்காரரே ‘தமிழரின் தந்தை’ என்றும், ஒட்டுமொத்த தமிழர்களின் ஒரே முகம் என்று சித்தரிக்கப்படுவது தமிழ்த்தேசிய இனத்திற்கு செய்கிற துரோகமே.

வழக்கறிஞர்
Rajivgandhi Radhakrishnan .