தங்களின் பிள்ளைகள் பண்புள்ளவர்களாக, நாவடக்கமுள்ளவர்களாக, ஒழுக்கமுள்ளவர்களாக வளர்க்கும் பொறுப்பு பெற்றோருக்கும் பிள்ளைகளின் பாதுகாவலர்களுக்கும் உண்டு. இந்த நல்ல பழக்கவழக்கங்கள் நடைமுறையில் செயல்படுகின்றனவா என்று சிந்தித்துப் பார்த்தால் அதிர்ச்சிமிகு அனுபவங்கள் வெளிப்படும். பிள்ளைகளைத் தவறான வழிகளில் போவதைத் தடுப்பதைவிட அவர்களை அந்தப் பாதையில் பயணிக்கச் செய்யும் பெற்றோர்களும் இருக்கிறார்கள் என்பது கவலைக்குறிய பழக்கமாகும். உதாரணத்திற்கு, கணவன், மனைவி ஆகிய இருவருக்கும் தகராறு கட்டுக்கடங்காது மணமுறிவுக்கு எட்டிவிடும்போது அவர்களின் பிள்ளைகள் பலவிதமான சங்கடங்களுக்கு உட்படுத்தப்படுவது சர்வசாதரணமாகிவிட்டது. பெற்றோர்கள் தங்களின் பிரச்சினைகளை, தகராறுகளைத் தங்களிடையே வைத்துக் கொள்ளாமல் பிள்ளைகளை அவற்றில் ஈடுபடுத்தி அவர்களின் மனநிலையை குழப்பிவிடுவார்கள். இது கூடாத பழக்கம்.
மணவிலக்கை நோக்கி நடைபோடும் கணவனும் மனைவியும் பிள்ளைகளின் அன்பை பெறவும், அவர்களைத் தங்களின் பக்கம் இழுக்கவும், பலவித யூகங்களைப் பயன்படுத்துவார்கள். அவற்றில் ஒன்று தாய் தந்தையைப்பற்றியும், தந்தை தாயைப்பற்றியும் இல்லாததை, பொல்லாததைச் சொல்லி பிள்ளைகளின் மனதில் பெரும் குழப்பத்தையே ஏற்படுத்திவிடுவார்கள். பிள்ளைகளின் பரிதாப நிலையை என்னவென்பது? அந்த பிஞ்சு வயதிலேயே போலி அன்பைக் காட்ட தயங்கமாட்டார்கள்.
இந்த கணவன் – மனைவி போராட்டத்தில் சில சமயங்களில் தாத்தாமார்களையும் உட்படுத்திவிடுவார்கள். பேரப்பிள்ளைகளோடு தகாத பாலியல் முறையில் நடந்து கொண்டதாகப் புகார் எழும். அப்படிப்பட்ட அக்கிரமான புகார் செய்யும் பெற்றோர்களும் உண்டு. அவ்வாறு புகார் செய்யும்போது பிஞ்சு மனதில் பொய்களை ஊட்டி கக்க வைப்பார்கள். ஆபத்தான சூழலில் பிள்ளைகள் வளர்கிறார்கள் என்றால் மிகையாகாது.
பிள்ளகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் பொருட்டு சட்டம் இருக்கிறது. அது பிள்ளைகளுக்கு உடல் காயம், போதுமான பாதுகாப்பு கிடையாது என்பன போன்ற பிரச்சினைகளை கவனிக்கிறது.
ஆனால் பிள்ளைகளைத் தவறான பழக்கவழக்கங்களுக்கு உட்படுத்துவது, அவர்களை பொய்யுரைக்கும்படி உற்சாகம் ஊட்டுவது போன்ற செயல்களுக்கு யாதொரு நடவடிக்கையும் எடுக்க இதுவரை சட்டம் அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நியாயமானதாகத் தெரியவில்லை.
ஒரு பிள்ளைக்குத் தவறான கருத்தைக் கற்பித்து அதன்படி நடக்கச் சொல்வது குற்றம் என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில், பிள்ளை வளர்ப்பு எனும்போது அது நல்லொழுக்கத்தையும் கொண்டிருக்கவேண்டும். பிள்ளைகள் தவறான வழிக்குப் போகக் கூடாது, தவறான வழிக்குப் பிள்ளைகள் செல்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் பெற்றோர்கள்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குழந்தை பாதுகாப்புச் சட்டத்தை வியாக்கியானம் செய்யும் நீதிபதிகள் சமுதாயத்தில் நிகழும் கேடுகளை மனதில் கொண்டு நீதிபரிபாலனத்தை மேற்கொள்ளவேண்டும் என்பது தவிர்க்கக் கூடாத பொறுப்பாகும்.
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு தங்குவதற்கான வசதி, உணவு, உடை போன்ற தேவைகளை மட்டும் வழங்குவதை முக்கியமாகக் கொண்டிருப்பது காலத்துக்கேற்ற அணுகுமுறையாகக் கருத இயலாது. பிள்ளைகள் நல்ல பழக்க வழக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும். அந்தப் பொறுப்பு பெற்றோர்களிடம் இருக்க வேண்டும்..
குழந்தைகளின் பாதுகாப்புச் சட்டத்தை அலசிப்பார்த்தால், அது உடலுக்கு ஊறு விளைவிக்கும், காயத்தை ஏற்படுத்தும் குற்றங்களை மட்டும் கவனத்தில் கொண்டிருக்கவில்லை என்பது புலப்படும். மனதில் ஏற்படுத்தும் காயங்களையும் அது கவனத்தில் கொண்டிருப்பதைக் கவனிக்க வேண்டும். ஒரு குழந்தை முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறது, பேசுகிறது என்றால் அவ்வாறு நடந்து கொள்ளும் பிள்ளையின் குடும்பச் சூழலை விசாரிக்கவேண்டும். அந்தக் குழந்தையின் தவறான நடவடிக்கைக்குப் பெற்றோர்தான் காரணம் என்றால் அவர்களுக்கு பிள்ளை வளர்ப்பு ஆலோசனை நல்கலாம். மேலும் அந்த தகாத வளர்ப்பு முறை நீடிக்குமானால் அவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும். பால்மனம் கொண்ட பிள்ளைகளின் மனதில் விஷஞானத்தை ஊட்டிய அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம். குழந்தையின் பெற்றோர் அந்த குழந்தையைப் பராமரிக்கத் தகுதியற்றவர்கள் என்று சமூக நலனபிவருத்தி இலாகா நடவடிக்கை மேற்கொள்ளலாம், அப்படி செய்யத் துணிந்தால் நன்று. சமுதாயத்தில் களங்கமிகு பழக்கத்தைப் பரப்பும் வழிமுறைகளக் கட்டுப்படுத்தலாம்.
சமீபத்தில், முன்னாள் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமது ஹமீடி மீது நீதிமன்றத்தில் பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அவை விசாரணைக்கு வரும். நீதி தேவதையின் தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டும். அதற்கு இடையில் அவருடைய பேத்தி என்று சொல்லப்படும் ஒன்பது வயது சிறுமி ஒருவர் முகநூலில் ஒளிப்பதிவு செய்திருக்கும் செய்தியானது, அவர் தம் பெற்றோர்கள் அல்லது எவரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் பழிவாங்கும் எண்ணத்தை வெளிப்படுத்தி உள்ளார். ஒன்பது வயது சிறுமியை பேச வைத்து ஒளிபரப்பியது தவறாகும். அந்தச் சிறுமியின் பெற்றோருக்கு இதில் பங்கு இருக்குமானால், அது பெரும் தவறு. அவர்களுக்குப் பிள்ளைப் பராமரிப்பில், பொறுப்பில் தெளிவில்லை என்று தெரிகிறது.
நேர்ந்தத் தவறைத் தேடிப்போய் அதைத் தடுக்கும் பொறுப்பு அமலாக்கத் துறைகளுக்கு உண்டு. புகார் செய்தால்தான் நடவடிக்கை என்ற பழைய பல்லவி இந்த நாகரிக உலகில் எடுபடாத போக்கு – ஊசிப்போன பதார்த்தம். பொறுப்பற்றவர்களின் நடத்தை என்றால் பொருந்தும். அந்த ஒன்பது வயது சிறுமியை தவறாகப் பயன்படுத்தும் பெற்றோர் மீது நடவடிக்கை தேவை. அவர்களுக்கு ஆலோசனை நல்கலாம். புத்திமதி சொல்லலாம். தவறு தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கலாம். அந்தக் குழந்தையை தவறானப் பாதையில் இட்டுச் செல்லும் பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து நீக்கி காப்பாற்றவேண்டும். வாழ்க்கையில் எத்தனை எத்தனை நெருக்கடிகள், எத்தனை எத்தனை எதிர்பாராத திருப்பங்கள், அவை எல்லாம் இளஞ்சிறுசுகள் பங்குபெறும் பிராயம் அடைந்திராத பொழுது அவர்களுக்குப் பழிவாங்கும் குணத்தை வளர்ப்பதில் நாட்டங்காட்டும் பெற்றோர் பிள்ளைகளின் எதிர்கால நலனில் பக்குவம் கொண்ட மனநிலையைப் பெற்றிருக்கிறார்கள் எனச் சொல்ல தயக்கம் ஏற்படும். சட்டத்துறையினர் மற்றும் சமுதாய நலனபிவிருத்தித் துறையினர் சிந்தித்து நடவடிக்கை எடுப்பார்களா? எடுக்கவேண்டும். விவரம் அறியாத பிள்ளைகளைப் பகடைக்காயாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும். அதுதான் முக்கியம்.
குறிப்பு:
தமிழ் மலர் ஞாயிறு பொறுப்பாசிரியர் திரு.சின்னராசு சொன்ன கருத்து: (சிந்தனை செய் மனமே தொடர் 131 வது படைப்பு –பிள்ளையை பகடக்காயாக பயன்படுத்தலாமா?) பிரிக்பீல்ட் பகுதியில் தாய் தனது பிள்ளையை பிச்சையெடுக்க வைத்த சம்பவம் எனக்கு பளிச்சென உதித்தது. இக்கட்டுரை பிள்ளைகளை எவ்வாரெல்லாம் பகடக்காயாக பயன்படுத்துகிறார்கள் எண்ணி மனம் நெருடியது. (இது தொலைபேசி உரையாடல் 25.10.2018 மாலை 6.00க்கு).