உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

வணக்கம். உலகத் தமிழ் ஆய்வு மன்றம் (IATR) தொடங்கப்பட்ட 1964-ஆம் ஆண்டு முதல் இதுவரை ஒன்பது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன. நடைபெற்ற மாநாடுகளில் பெரும்பாலானவை அரசியல் தொடர்போடும் அரசாங்கத் துணையோடும் நடத்தப்பட்டன. மன்றத்தின் முதன்மையான நோக்கமான தமிழ் ஆய்வுக்கு முதலிடம் கொடுத்து அடுத்துவரும் 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிகாகோவில், 2019 ஆம் ஆண்டு, சூலைத் திங்கள் 3 முதல் 7-ஆம் நாள் வரை நடைபெற உள்ளது. இந்த மாநாடு அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் துணையோடு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA), சிகாகோ தமிழ்ச் சங்கத்துடன் (CTS) இணைந்து நடைத்த உள்ளது.

உலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் முதன்மையான நோக்கம்:
“பொதுவாகத் திராவிடம் பற்றியும் சிறப்பாகத் தமிழ் பற்றியும் செய்யப்படும் ஆய்வுகள் பல்வேறு துறைகளில் அறிவியல் முறையில் செய்வதற்கான ஊக்குவித்தலும், இவற்றோடு தொடர்புடைய பிற துறைகளில் ஆய்வுகள் செய்து வரும் அறிஞர் பெருமக்களோடும், உலக நிறுவனங்களோடும் நெருங்கிப் பங்கு கொள்ளலும் ஆகும்.”

இம்மன்றத்தின் தலையாய நோக்கமே 10-ஆம் உலகத் தமிழ் மாநாட்டின் அடிப்படை நோக்கமாக அமைந்துள்ளது: “தமிழினம், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மை, தற்கால இலக்கியம், தமிழ்க் கணிமை ஆகியன குறித்து புது வரலாற்றியல் நோக்கிலும், அறிவியல் அடிப்படையிலும், ஒப்பியல் முறையிலும் ஆய்வு செய்தல்.” இவை பற்றிய உண்மைகளை உலகம் அறிதல் வேண்டும் என்பது இம் மாநாட்டின் தலையாயக் குறிக்கோள். ஆய்வுக் கட்டுரையின் தலைப்புகளும் அதனின் கட்டுரைச் சுருக்கத்தையும் (Abstract), முழுக்கட்டுரையையும் (Full Research paper), அனுப்ப வேண்டிய முறைகளும், இம்மடலுடனும், மாநாடு பற்றிய கணினி அறிவிப்பிலும் கண்டுகொள்ள வேண்டுகிறோம். அறிஞர்கள் சிறந்த ஆராய்ச்சிகளைச் செய்து முடிக்க விழைகின்றோம்.

நீங்கள் இந்த ஆய்வுகளைச் சிறப்பாகச் செய்யவும், உங்களை மாநாட்டில் காணவும் அன்புடன் அழைக்கிறோம்.

அன்புடன்,

புலவர், முனைவர் பிரான்சிசு ச. முத்து
பொதுச் செயலாளர், அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம்
தலைவர், ஆய்வுக் குழு
10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

பேராசிரியர் முனைவர் ப.மருதநாயகம்
ஒருங்கிணைப்பாளர், அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம்
இணைத்தலைவர், ஆய்வுக் குழு
10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

ஆய்வுகள் அறிவுரைக்குழு

முனைவர் டான் மாரிமுத்து
தலைவர், அனைத்துலகத் தமிழாய்வு மன்றம்

முனைவர் மு.பொன்னவைக்கோ
உதவித் தலைவர், அனைத்துலகத் தமிழாய்வு மன்றம்

முனைவர் உலகநாயகி பழனி
செயலாளர், அனைத்துலகத் தமிழாய்வு மன்றம்

முனைவர் ஆஷர்
எடின்பர்க் பல்கலைக் கழகம், இங்கிலாந்து

முனைவர் அலக்சாண்டர் டுபின்ஸ்கி
மாஸ்கோ பல்கலைக் கழகம், உருசியா

முனைவர் ஜார்ஜ் ஹார்ட்
பெர்க்லி பல்கலைக் கழகம், அமெரிக்கா

முனைவர் ஜி. ஜான் சாமுவேல்,
தலைவர், ஆசியவியல் கழகம், சென்னை, இந்தியா

முனைவர் சாச்சா எப்ளிங்
சிகாகோ பல்கலைக்கழகம், அமெரிக்கா

முனைவர் உல்ரிக் நிக்லஸ்
கலோன் பல்கலைக் கழகம், ஜெர்மனி

முனைவர் வாசு அரங்கநாதன்
பென்சில்வேனியா பல்கலைக்கழகம், அமெரிக்கா.

https://www.icsts10.org/topics/
2019-ஆம் ஆண்டு, சூலைத் திங்கள் சிகாகோவில் நடைபெற உள்ள உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் சிறப்பு நோக்கங்கள்; தமிழில் உள்ள செவ்விலக்கியங்களை உலகிற்கு அறிமுகப் படுத்துதல்; தமிழர், தமிழ் மொழி, இலக்கியங்கள், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் பழமையும், தனிச்ச்சிறப்பையும் ஆய்வு செய்தல் ஆகியவை ஆகும். அத்துடன் தமிழ் அறிஞர் பெருமக்கள் தற்கால தமிழ் உரைநடை, பாடல்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்ய வேண்டும் என இந்த மாநாடு ஊக்குவிக்கின்றது. இந்நோக்கங்கள் சிறப்புற, வெற்றிபெற, கீழ்கண்ட தலைப்புகளில் ஆழ்ந்த ஆய்வோடு அழகுற எழுதப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள், இம்மாநாட்டில் இடம்பெற வரவேற்கப்படுகின்றன.

ஆராய்ச்சிப் பிரிவுகள்

செவ்விலக்கியங்கள் (சங்க இலக்கியங்கள்)
தமிழரின் பழங்கால நாகரிகம்
தொல்காப்பியம்
திருக்குறள்
அறிஞர் பெருமக்களைப் பற்றிய ஆய்வு
தமிழ் இசையும் கலைகளும்
தற்காலத் தமிழ் இலக்கியங்கள்
தமிழ் மொழியும் மொழியியலும்
தலைப்புகள்

செவ்விலக்கியங்கள் (சங்க இலக்கியங்கள்)
தமிழ்ச் செவ்விலக்கியங்களும் பிறமொழிச் செவ்விலக்கியங்களும்: ஒரு ஒப்பீடு.
சங்க இலக்கியங்கள் தமிழ்ப் பண்பாட்டின் கருவூலம்
சங்க இலக்கியங்கள் காட்டும் தமிழக வரலாறு
தமிழரின் பழங்கால நாகரிகம்
மரபியல் (Genetics), மரபியல் வழிமுறை (Genographics) அடிப்படையில் தமிழர் தோற்றமும் பரவலும்
தமிழ் நாகரிகத்தின் பழைமையை வரலாறு, அகழ்வாய்வு, நிலவியல் ஆகியவைக் காட்டும் ஆதாரங்களோடு ஆய்வு செய்தல்
சிந்துவெளி நாகரிகம் பற்றிய புதிய கண்டுபிடுப்புகள். சிந்துவெளியோடு தமிழ் நாகரிகம் ஆகிய பிற நாகரிகங்களை ஒப்பிடுதல்
தென்னிந்தியாவில் உள்ள ஆதிச்சநல்லூர், பொருந்தல், கீழடி ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அகழ்வாய்வுச் சான்றுகளும் பழங்கால தமிழர் நாகரிகமும்
தமிழரின் பழங்கால நாகரிகம் பற்றிக் கல்வெட்டுகள், மாந்தஇயல் ஆதாரங்கள்
தொல்காப்பியம்
தொல்காப்பியமும் பிறமொழி இலக்கியங்களும்: ஒரு ஒப்பாய்வு
ஐந்திணைக் கருத்துக்களும் அகப்பொருள் மரபும்
தொல்காப்பியத்தில் இடைச்செருகல்
தொல்காப்பியக் காலம்
திருக்குறள்
திருவள்ளுவர், “உலக மக்களின் அறநூல் புலவன்.” (“The Bard of Universal man“ Dr. G.U. Pope)
திருக்குறள் பண்டைத்தமிழர்தம் பண்பாட்டு நாகரிகக் கருவூலம்
திருக்குறள் தற்கால வாழ்க்கைக்கும் வழிகாட்டும் அறநூல்
திருக்குறளும் பிறமொழியில் உள்ள அறநூல்களும்; ஒரு ஒப்பாய்வு
பிற நாடுகளில் திருக்குறளுக்கு வரவேற்பு
அறிஞர் பெருமக்களைப் பற்றிய ஆய்வு
அறிஞர் பெருமக்கள் பழங்கால, இடைக்கால, மற்றும் தற்காலத் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகிய இவற்றின் ஆய்வுகளுக்குத் தந்த பெரும் பங்களிப்பு
தமிழ் இசையும் கலைகளும்
தமிழ் இசை, கலைகள்; இவற்றின் பழமை
கருநாடக இசையில் தமிழ் இசையின் தாக்கம்
பழங்காலத்தில் வழங்கிய தமிழ் இசைக் கருவிகள்
தற்காலத் திரைப்படப் பாடல்களில் சங்க இலக்கியப் பாடல்களின் தாக்கம்
தற்காலத் தமிழ் இலக்கியங்கள்
தமிழ் உரைநடை, செய்யுட்கள் (பாடல்கள்); இவற்றின் தற்கால போக்கு
தற்கால நாவல்களும் சிறுகதைகைளும்; இவற்றின் புதிய போக்கு
தமிழ்க்கல்விக்கும் ஆய்வுக்கும் கணினி பயன்படும் வகைகள்: ஒர் ஆய்வு
தமிழ் மொழியும் மொழியியலும்
தொல்காப்பியம்: அதில் பொதிந்துள்ள மொழியியல் நுணுக்கங்களும் இலக்கியக் கோட்பாடுகளும்.
https://www.icsts10.org/guidance/
ஆராய்ச்சிக் கட்டுரை எங்கும் இதுவரை வெளியிடப்படாத முழுமுதல் ஆராய்ச்சிக் கருத்துக்கள் கொண்டதாக இருத்தல் வேண்டும்.
ஆராய்ச்சியாளர்கள் “ஆராய்ச்சி விரிவுக் கட்டுரையை” அனுப்பும் முன்னர் அதன் சுருக்கத்தினை முதலில் அனுப்ப வேண்டும். இந்தச் சுருக்கம் “மைக்ரோசாப்ட்” சொல் செயலியில் (Microsoft Word) இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் “யுனிகோடு” முறையில் (unicode format) இருத்தல் வேண்டும்.
ஆராய்ச்சிச் சுருக்கம் நவம்பர் 30, 2018 ஆம் தேதிக்குள் பின்வரும் மின்னஞ்சல் வழியாக அனுப்புதல் வேண்டும். மின்னஞ்சல் முகவரி “[email protected]”. பெறப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைச் சுருக்கங்கள் ஆய்வறிஞர் குழுவினரால் (academic committee) சீராய்வு செய்யப்பட்டு அந்த கட்டுரைச் சுருக்கம் ஏற்புடையதா இல்லையா என்ற முடிவுகள் டிசம்பர் 31, 2018 தேதிக்குள் அறிவிக்கப்படும்.
ஏற்கப்பட்ட ஆராய்ச்சிச் சுருக்கத்தின் ஆசிரியர்கள் தங்களது ஆராய்ச்சி விரிவுக் கட்டுரையை மார்ச் 31, 2019 ஆம் தேதிக்குள் அனுப்புதல் வேண்டும். இந்தக் கட்டுரை “மைக்ரோசாப்ட்” சொல் செயலியில் (Microsoft Word) முப்பது பக்கங்களுக்கு மிகாமல், “யுனிகோடு” முறையில் (unicode format), எழுத்தளவு 12-ஆக இருத்தல் வேண்டும். ஆராய்ச்சிக் கட்டுரைச் சுருக்கம், ஆராய்ச்சி விரிவுக் கட்டுரை ஆகிய இரண்டும் தமிழிலோ ஆங்கிலத்திலோ இருத்தல் வேண்டும்.
ஆராய்ச்சியாளர்கள் தங்களது வாழ்க்கைக் குறிப்பினை (biodata/resume), 200 சொற்களுக்கு மிகாமல் ஆராய்ச்சிக் கட்டுரையின் சுருக்கத்தோடு இணைத்து அனுப்புதல் வேண்டும்.
ஆய்வரங்கில் படைக்கப்படுகின்ற கட்டுரைகளின் எண்ணிக்கை, ஆராய்ச்சியாளர்கள் விவரங்கள் ஏப்ரல் 30, 2019 ஆம் தேதிக்குள் தெரியப்படுத்தப்படும். கட்டுரையாளரின் அனுமதிக் கட்டணம், தங்கும் செலவு, உணவுச் செலவு, மாநாட்டின் போது ஏற்படுகின்ற உள்ளூர் போக்குவரத்து செலவு ஆகியவற்றை விழாக் குழுவினர் ஏற்றுக்கொள்வர்.
ஆய்வரங்கில் பங்கேற்கும் ஆராய்ச்சியாளர்கள் தங்களது சொந்த செலவிலோ அல்லது அரசு, கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் முதலியன தரும் பொருள் உதவியால் தங்களது பயணச் செலவிற்கான ஏற்பாடுகள் செய்து கொள்வதை வரவேற்கின்றோம். பயணம் பற்றிய மற்ற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
ஆராய்ச்சியாளர்கள் தங்களது கடவுச் சீட்டினை (Passport) ஏப்ரல் 30, 2019 ஆம் தேதிக்குள் பெற்று வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் குறித்த நேரத்தில் அமெரிக்காவின் நுழைவுச்சான்றினைப் (Visa) பெற உதவியாக இருக்கும்.
ஆராய்ச்சியாளர்கள், மாநாட்டின் போது தேவைப்படும் எதிர்பாராது வரக்கூடிய மருத்துவச் செலவிற்குத் தேவைப்படும் விதமாக, தங்களுக்கான மருத்துவக் காப்பீட்டினை (Insurance) முன்னரே வாங்கி வைத்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் மாநாட்டின் இணையத் தளத்தில் வெளியிடப்படும். ஆய்வரங்கில் படைக்கப்படுகின்ற கட்டுரைகள் மட்டும் மாநாட்டு மலரில் இடம் பெறும்.
http://www.iatrnew.org/