சீபில்டு மாரியம்மன் திருகோவிலில் அத்துமீறி அராசகம் புரிந்த செயலைக் கண்டித்து ஒரே இரவில் ஒன்றுதிரண்ட பல ஆயிரம் தமிழர்களுக்கு –  மலேசிய தமிழ்ச் சமய பேரவையின் வாழ்த்து

நேற்று நள்ளிரவில் சீபில்டு மாரியம்மன் திருக்கோவிலில் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த தமிழர்களை தாக்கியதுடன் கோவிலையும் சேதப்படுத்திய அந்நிய குண்டர் கும்பலை கண்டித்து தமது உடமையை காக்க, அன்று இரவே பல்லாயிரம் கணக்கான  தமிழர்கள் ஒன்றுதிரண்ட ஒற்றுமையை, மலேசிய தமிழ்ச் சமய பேரவை குழுவின் பேராக் மாநில ஒருங்கிணைப்பாளரும் சுங்கை சிப்புட் நாம் தமிழர் இயக்க பொறுப்பாளர் நவீன் இராமன் தெரிவித்தார்.

தென்னகத்திலிருந்து சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிசு அரசாங்கத்தால் இங்கு கொண்டு வரப்பட்ட பெரும்பாலான தமிழர்கள் வழி உருவாக்கப்பட்டதே பல பழமை வரலாறு கொண்ட தமிழர் திருக்கோவில்கள்.

அவ்வரிசையில் தாய் வழிபாடாக இருந்து கொற்றவை வழிபாடாக வளர்ந்து மாரியம்மன் திருகோவிலாக அமைத்து தமிழர்கள் வழிப்பட்டு வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நீண்ட வரலாறு வாழ்வியலை கொண்ட நாம் தமது இனம், மொழி, சமயம், உரிமை, உடமை மற்றும் உணர்வு சம்பந்தப்பட்ட விடயங்களில் சிக்கல் வரும் போது, இதேபோன்ற உடனுக்குடன் ஒற்றுமையுடன் ஒன்றினைந்து, அதை களைய வேண்டுமாய் பேரவை அன்பு வேண்டுகோள் விடுப்பதாக இரா. நவீன்  கூறினார்.

மேலும் சீபில்டு மாரியம்மன் திருக்கோவில் சிக்கலுக்கு முறையாக தீர்வு கிடைக்கும் வரை கோவில் உடைப்பாடாது என்ற பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி அவர்களுக்கும், இச்சிக்கலை பிரதமர் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்ற மனித வளத்துறை அமைச்சர் எம். குலசேகரன் அவர்களுக்கும் மற்றும் வன்செயல்களில் ஈடுப்பட்டவர்களும் அவர்கள் பின்னணியில் இருப்பவர்கள் தப்ப முடியாது என்ற பிரதமர் துன் டாக்டர் மகாதீர் அவர்களுக்கும் தமது நன்றியினை தெரிவித்தார்.

பின்னர் கடமைக்கு வந்த தீயணைப்பு பணியாளர்களுக்கு இடையூறாக நம்மவர்கள் இருந்தது மற்றுமின்றி அவ்வண்டியையும் சேதப்படுத்தியது மிகவும் வேதனைக்குள்ளான கண்டிக்கத்தக்கது. இது போன்ற தவறான செயல்களில் இனி ஒருபோதும் தமிழர்கள்  ஈடுபடக்கூடாது. அதேவேளையில் தீயணைப்பு வண்டியால் மோதப்பட்ட தீயணைப்பு வீரர் ஒருவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற இரக்கமான காட்சி தாம் நெஞ்சை நெகிழ செய்தது என்றார்.

இந்நாட்டில் பல கோவில்கள் இதேபோன்ற சிக்கல்களிலில்தான்  எதிர்நோக்கி வந்துக்கொண்டிருக்கிற  தொடர்கதையாக இருக்கிறது.

ஆகையால், நாட்டிலுள்ள அனைத்து கோவில்களையும் தாங்கி நிற்கிற தனியார் அல்லது அரசு நிலங்கள் விற்கப்படும் போது, கோவில்களை இடம்மாற்றாது பாதுகாப்பாக இருக்க சட்டம் வரையறுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் மலேசிய தமிழ்ச் சமய பேரவை குழு சார்பில் ஆலோசனையாகவும் இது போன்ற தமிழர் திருக்கோவில்களில் சிக்கல்களை களைய துணை நிற்க தயாராக இருப்பதாகவும் அதன் பேராக் மாநில ஒருங்கிணைப்பாளரும் சுங்கை சிப்புட் நாம் தமிழர் இயக்க பொறுப்பாளருமான நவீன் இராமன் தெரிவித்துக் கொண்டார்.