- கி.சீலதாஸ், டிசம்பர் 3, 2018.
இன, சமய வேறுபாடுகளைத் நீக்கும் நோக்கத்தோடுதான் 21.12.1965- இல் ஐநா ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்தத் தீர்மானத்தை அனைத்துலக நாடுகள் அங்கீகரித்து கையொப்பமிட வேண்டும். இந்தத் தீர்மானத்தில் மலேசியா இன்னும் கையொப்பமிடவில்லை. பல இஸ்லாமிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்திடும் சாத்தியக் கூறுகள் தென்பட்ட நிலையில் மலாய் சமூகத்தின் உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் வகையில் சில தரப்பினர் நடந்துகொண்டனர். அவ்வாறு நடந்துகொண்டவர்கள் ஐநாவின் தீர்மானத்தைத் தெளிவாகப் புரிந்து கொண்டார்களா என்பது சந்தேகம்; அல்லது தெரிந்ததை வேண்டுமென்றே திரித்துக்கூறி மக்கள் மனதில் குழப்பத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தினார்களா என்ற சந்தேகமும் எழுகிறது.
சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணத்தால் ஐநா தீர்மானத்தை முழுக்கமுழுக்க இன, சமயப் பிரச்சினையாக மாற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதே சமயத்தில் இந்த ஐநா ஒப்பந்தத்தைப் பற்றி அரசு மக்களுக்கு முழுமையாக விளக்காமல் விட்டது பெரும் குறையாகும். இந்த நாடு இன, சமய பிரச்சினைகளை அமைதியாக ஆராய்ந்து பார்க்கும் தராத்தரத்தை இழந்துவிட்டதை நாம் அறியாதது அல்ல; எனவே, இந்த முக்கியமான மனித கவுரவத்திற்கு மதிப்பளிக்கும் தீர்மானமானது மனித குலம் கவுரவத்தையும் சம உரிமயையும் இயல்பாகவே கொண்டிருக்கிறது என்பதை வலியுறுத்துவதோடு, அப்படிப்பட்ட நல்ல அம்சங்களை மனிதன் தனது சுயநல விருப்பங்களின் காரணமாகக் கண்டு கொள்வதும் இல்லை, சமஉரிமைக்கு மதிப்பளிப்பதும் இல்லை. அதுதானே உண்மையான நிலவரம். அதை நிவர்த்தி செய்வதுதானே ஐநாவின் அடிப்படை நோக்கம்.
பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்சு நாட்டின் தத்துவஞானி ரூசோ மனித உரிமைகளைப் பற்றி குறிப்பிடுகையில் மனிதன் சுதந்திரமாகப் பிறக்கிறான், ஆனால் அவன் எங்கும் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளான் என்றார். இதன் பொருள் என்ன? நாகரிக நாடுகள் மனிதனின் பிறப்புரிமையை அடக்குவதிலும் மறுப்பதிலும்தான் முழுக் கவனம் செலுத்துகின்றனவேயன்றி அந்த பிறப்புரிமைக்கு மதிப்பளித்து எல்லோரும் அதை அனுபவிக்க வேண்டும் என்கின்ற நல்ல நோக்கத்தை கொண்டிருக்கவில்லை. பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் இன சமய வேறுபாடுகளை வளர்ப்பதில் காலனித்துவ ஆட்சிகள் ஆர்வத்தோடு செயல்பட்டனர் என்பது வரலாற்று உண்மையாகும்.
காலனித்துவ நாடுகளில் சமத்துவம் மறுக்கப்பட்டது மட்டுமல்ல, மனிதர்களை மனிதர்களாக நடத்தப்படாத சட்டங்கள் அமலாக்கப்பட்டன. அந்த காலனித்துவப் பிடியிலிருந்து விடுபட்டதாகச் சொல்லப்படும் நாடுகள் காலனித்துவவாதிகள் மேற்கொண்ட அடக்குமுறை கொள்கையை, சட்டத்தை நிராகரிக்காமல் தங்களின் சுயநலத்திற்காகப் பாதுகாத்தது சுதந்திரத்திற்குப் பிறகும் காணப்படுகின்ற உண்மைகளாகும்.
இரண்டாம் உலகப் போருக்குப்பின் பிறநாடுகளை ஆக்கிரமிப்பது சட்ட விரோதமாக்கப்பட்டது. காலனித்துவ நாடுகளுக்குச் சுதந்திரம் நல்க வேண்டுமென்ற தீர்மானமும் ஐநாவில் நிறைவேற்றப்பட்டது. நாடுமட்டும் சுதந்திரம் பெற்றால் போதுமா? ரூசோவின் வாக்கு நம்மை உறுத்தும்போது அடிமைச் சங்கிலியையும் அறுத்து எறிய வேண்டும் அல்லவா? மனிதன் இன, சமய விருப்புவெறுப்புகளுக்கு அடிமையாகி இன, சமய உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் தராதரத்தைப் பெற முயற்சிக்கவில்லை. சுதந்திர நாடுகளும் அந்த வெறுப்புணர்வை களையும் பொருட்டு தீவிர நடவடிக்கைகளில் இறங்காது வாளாவிருந்ததும் நாம் அறியாதது அல்லவே. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஐநாவின் தீர்மானம் மனிதனின், இன, சமய ஒற்றுமைக்கு முக்கியத்துவம் அளித்து, எல்லாரும் புரிந்துணர்வோடு வாழவேண்டும் என்பதை வலியுறுத்தியது. இந்த நாட்டில் இன சமய ஒற்றுமைக்கு உலை வைக்கும் மனநிலையோடு செயல்படுவோரை நாம் அடையாளம் காணத் தவறியது உண்மை. அதே சமயத்தில் பிறரை மதிப்பது, பிற சமயங்களை மதிப்பது, பொதுவாக பிற இனங்களையும், பிற சமயங்களையும் மதிப்பது போன்ற நற்பண்புகள் பள்ளிக்கூடங்களில் ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை. ஒரு சமயத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து பிற சமயங்களை ஒதுக்குவது, இழிவுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் அனைத்தும் நாட்டின் நலனைக் காக்கவும் இல்லை. பரஸ்பர நம்பிக்கையை வளர்க்க உதவவும் இல்லை. பிளவுபட்ட சமுதாய உணர்வுதான் வளர்ந்தது. அப்படிப்பட்ட பிளவு மனப்பான்மை வளர்வதைத் தடுப்பதுதான் ஐநாவின் 1965 ஆம் ஆண்டின் தீர்மானம். அதை நன்கு புரிந்து கொள்ளாமல், மக்களுக்கும் விளக்காமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டு உயரிய நோக்கத்தை, உயரிய நிலையை அடைய மலேசியா தவறிவிட்டது. ஐநாவின் தீர்மானத்தை விளக்காதது மட்டுமல்ல அது நமது அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது என்ற பொய்யுரையை மறுத்திருக்க வேண்டும். ஐநாவின் தீர்மானத்தில் கையொப்பமிட்டால் அது அரசமைப்புச் சட்டத்தில் 153-ஆம் பிரிவை நீக்கும் நிலைக்கு கொண்டுபோய் விடும் என்பது வெறும் புரட்டு. அரசியல் புரட்டு. இதையும் விளக்கும் வாய்ப்பை, முயற்சியை எடுக்க அரசு தவறியது மட்டுமல்ல, வேறு எவரும் இதைப்பற்றி விளக்காமல் இருந்துவிட்டது ஆச்சரியமே.
ஐநா ஒப்பந்தத்தில் கையொப்பத்தத்தைத் தவிர்த்தது அரசு தெருவழி போராட்டங்களுக்கு மதிப்பளித்துவிட்டது என்ற கருத்து நிலவுவதை உணரவேண்டும். இந்தத் தெரு போராட்டம் நடத்த உத்தேசித்தவர்களின் போக்கிற்கு அளிக்கப்பட்ட மரியாதை பல தவறான சமிக்ஞைகளைக் கொண்டிருக்கிறது என்பதையும் உணரவேண்டும். அரசு ஐநா ஒப்பந்தத்தில் கையொப்பம் இடாததற்கான காரணத்தை அலசிப்பார்த்தால் அதற்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியைத் தவிர்க்க எடுத்த முடிவாகும். இதை தவறாகப் புரிந்து கொள்ளும் சக்திகள் மேலும் பல தகாத நடவடிக்கைகளில் இறங்குவதை தடுக்க இயலுமா? இப்படிப்பட்டப் போக்கு பலதவறான எண்ணங்களுக்கும், முடிவுகளுக்கும், வழிகாட்டும் என்பதை ஒதுக்கிவிடமுடியுமா? சிந்தித்துப் பாருங்கள்.