மலேசிய நாம் தமிழர் இயக்கம் மற்றும் வள்ளலார் அன்பு நிலையம் இணை ஏற்பாட்டில், தமிழீழ மாவீரர் நினைவு நாள்

உலக தமிழர்களுக்கென நாடு வேண்டி போராடி, தமது தாயக மண்ணுக்காக மரணித்த தமிழீழ விடுதலைப் புலி மறவர்கள் நினைவாக கடந்த 27 நவம்பர் ஈப்போ, புந்தோங் வள்ளலார் அன்பு நிலையத்தில் மலேசிய நாம் தமிழர் இயக்கமும் வள்ளலார் அன்பு நிலையமும் இணைந்த ஏற்பாட்டில் எளிய முறையில் மாவீரர் நினைவு நாள் அனுசரிக்கப் பட்டது.

மலேசிய நாம் தமிழர் இயக்க தேசிய இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு செ. மாவேந்தன் நிகழ்ச்சி நெறியாளராக வழி நடத்த, முறையே விளக்கு ஏற்றப்பட்டு, தாயக விடுதலைப் போரில் உயிர்நீத்த பொது மக்களுக்கும், இனப் பற்றாளர்களுக்கும் அகவணக்கம் செலுத்திய பின் வீரவணக்கம் மற்றும் உறுதிமொழி ஆகியவை, இயக்க பந்திங் மண்டல ஒருங்கிணைப்பாளர் இரா. யுவராசன் அவர்கள் வாசிக்க, அனைவராலும் பின் தொடர்ந்து வாசிக்கப்பட்டது.

பின்னர் வள்ளலார் அன்பு நிலைய தலைவர்  திரு ஆதி. முனியாண்டி அவர்களின் வரவேற்புரையில், இனி தமிழீழ தாயக விடுதலை வளரும் இளைய தலைமுறை பிள்ளைகள் தோளுக்கு கடத்தப்பட்டுள்ளதாகவும் அதை அவர்கள் சிறந்த முறையில் வழி நடத்தி செல்ல வேண்டுமென வலியுறுத்தினர்.

தலைமையுரையாற்றிய மலேசிய நாம் தமிழர் இயக்க தேசிய வீயூக இயக்குநர் திரு வீ. பாலமுருகன் அவர்கள் தமதுரையில் தமிழீழ விடுதலைப் புலி மாவீரர்கள் கடந்து வந்த பாதை, அவர்கள் கொண்ட இலட்சிய உறுதி, புரிந்த மகத்தான தியாகம், ஊமையான ஐ.நா. மன்றம், சூழ்ச்சி செய்த சக நாடுகள், வேடிக்கை பார்த்த உலக நாடுகள், இந்திய வல்லாதிக்கம் செய்த பச்சை துரோகம், போர்க்களத்தில் சூழல், தற்போதைய ஈழ நிலமை, உலக தமிழர்களின் கடமை, மலேசிய தமிழர்களின் போக்கு மற்றும் ஈழ போராட்ட வரலாறு போன்றவற்றை தமக்கே உரிய பாணியில் விளக்கினார்.

அடுத்து சிறப்புரையாக நாம் தமிழர் இயக்க ஆலோசகரும் உலக தமிழர் பாதுகாப்பு செயலக பொறுப்பாளர் திரு பி.கே. குமார் அவர்கள் உரையாற்றுகையில் தமிழீழ அரசியல் உரிமை, தமிழக அரசியல் முன்னெடுப்பு, மலேசிய அரசியல் பரிமாணம், உலக அரசியல் தன்மை மற்றும் தமிழருக்கான பொருளாதாரம் மேன்மை போன்றவை விவரித்ததுடன் உலக தமிழர்கள் தேசம் அடைய முதலில் அறிவியலையும் பொருளாதாரத்தையும் தமது கைவச வல்லமை பெற வேண்டுமென அறிவுறுத்தினார்.

மற்றொரு சிறப்புரையாக ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் முனைவர் உயர்திரு மோகன் குமார் அவர்கள் தம்முடைய தமிழ்க் கல்வி, தமிழ்ப் பள்ளி அவசியத்தையும் அடையாளத்தையும் அதன் பாதுகாப்பையும் விளக்கினார். மேலும் பல தமிழ்ப் பள்ளிகளில் அடுத்தாண்டு முதல் வகுப்பில் மிக குறைந்த மாணவர்களே பதிவு செய்துள்ளனர் என்று வேதனையோடு தெரிவித்தார்.

இறுதியாக மலேசிய நாம் தமிழர் இயக்க ஆலோசகரும் வள்ளலார் அன்பு நிலைய அறங்காவலருமான திரு க. கலையரசு அவர்கள் தனது நன்றியுரையில் மலேசிய நாம் தமிழர் இயக்கம் கடந்து வந்த பாதை, செய்த போராட்டங்கள், இதுவரை எடுத்த முன்னெடுப்புகள், தமிழ்க் கல்வி ஒன்றியம், தமிழ்ச் சமயம் கட்டமைப்பு மற்றும் நாடு தழுவிய அளவில் தாம் தலைமையில் நடத்தப்படும் தமிழர் தேசிய பட்டறை போன்ற  தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அங்கு அமைக்கப்பட்ட மேடையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் போராளி லெப். சங்கர், முதல் பெண் போராளி லெப். மாலதி, இந்திய அமைதிப்படை என்ற போர்வையில் ஈழத்தில் தமிழர்களை, சிங்கள இனவெறி இராணுவத்திற்கு உதவியாக சிதைத்த, இந்திய இராணுவத்தை வெளியேற வலியுறுத்தி 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த போராளி லெப். கேணல். திலீபன் ஒளிப்படமும் மற்றும் தமிழீழ மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க சாவை தழுவிய 50 ஆயிரம் விடுதலைப் புலி மாவீரர்கள் ஒளிப்பட விபரத்துடன் தாங்கிய புத்தகத்தின் மீதும் வருகையாளர்கள் மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

இந்நிகழ்வுக்கு கிள்ளான், ரவாங், பெர்ச்சாம், சுங்கை சிப்புட் மண்டல ஒருங்கிணைப்பாளர்களான திரு ப. செல்வக்குமாரன், திரு க. இராவணன், திரு. வ. நம்பி, இரா. நவீன் மற்றும் நாம் தமிழர் இயக்க உறவுகள் சுற்றுவட்டார தமிழர்கள் இனமான உணர்வோடு கலந்து கொண்டனர்.