அம்னோ – பாஸ் கூட்டணி, ஒற்றுமைக்கு உலை  வைக்கும்! முன்னேற்றத்தை முட்டுக்கட்டையாக்கும்! –  கி.சீலதாஸ்

அம்னோ – பாஸ் கூட்டணி வழி மலாய்க்காரர்களை  மட்டுமே வைத்து ஆட்சி  நடத்த  முற்படுவது  நாட்டின்   ஒற்றுமைக்கு  உலை  வைக்கும் என்றும், சுதந்திரத்திற்கு  முன்பு  பேசப்பட்டு  உறுதி  அளிக்கப்பட்ட  மதச்  சார்பற்ற  நாடு  என்பதுபோன்ற நோக்கங்களை புறக்கணிப்பது நாட்டின் முன்னேற்றதிற்கு முட்டுக்கட்டையாக அமையும் என்றும் விவரிக்கிறார் கட்டுரையாளர்- ஆர்.

மலேசிய  சீனர்  சங்கமும் (மசீச),  மலேசிய  இந்தியர்     காங்கிரஸும் (மஇகா)  தேசிய  முன்னணியிலிருந்து  விலகத்  தீர்மானித்துவிட்டதாக தெரிகிறது.  மசீசவும்,  மஇகாவும்  அம்னோவோடு  உறவு  கொண்டு  பல  பத்து  ஆண்டுகளாகிவிட்டன. அம்னோ,  மலாயாவில்  முதல்  மலாய்க்கார  கட்சியாக  உருவெடுத்தது.

ஆரம்ப அரசியல் 

இரண்டாம்  உலகப்  போருக்குப்  பிறகு  சிங்கப்பூரைத்  தவிர  மற்ற  பிரதேசங்களை  மலாயன்  யூனியனில்  இணைத்து  ஒரு கூட்டரசைக்  காண  நினைத்த  பிரிட்டிஷ்  அரசின்  முடிவுக்கு  பலத்த  எதிர்ப்பு  ஏற்பட்டது.

அம்னோ  அரசியல்  கட்சியாக  ஆரம்பித்தபோது  மசீச  அமைக்கப்படவில்லை.  மலாயா  இந்தியர்  காங்கிரஸ்  அமைக்கப்பட்டு  இயங்கத்  தொடங்கியது.

மலாயன்  யூனியனுக்கு  எதிர்ப்பு  நடவடிக்கைகளில்  அம்னோ  இறங்கிய  வேளை  சீன  இந்திய  சமுதாயங்களுக்கு   மலாயன்  யூனியன்  சாதகமானதாக  இருந்தபோதிலும்  அதை  முழுமையாக  ஆதரிக்கவில்லை  என்பது  குறிப்பிடத்தக்கது.

ஆனால்  மஇகா  பகிரங்கமாகவே  மலாய்க்காரரின்  மலாயன்  எதிர்ப்பு  நிலையை  ஆதரித்தது. (காண்க:  பார்பரா  வட்சன்  அண்டயா – லியோனர்ட்  (அண்டயா –  மலேசிய  வரலாறு)

அப்பொழுது  நிலவிய  வரலாற்று  உண்மையை  நினைவில்  கொள்வது  முக்கியம்.  பிரிட்டிஷ்  அரசு  மலாயாவுக்கு  சுதந்திரம்  தருவதை  கொள்கை  அளவில்  ஏற்றுக்கொண்ட  போதிலும்  அது  புதிதாக  அமைக்கப்பட்ட  மலாய்க்கார  அரசியல்  இயக்கமான  அம்னோவுடன்  நெருங்கிய  உறவை  விரும்பியது.

டத்தோ  ஓன்  சுல்தான்களின்  மற்றும்  மலாய்க்காரர்களின்  உரிமைகள்,  சலுகைகள்  பற்றி  கவனமாக  இருந்தாரே  அன்றி  மலாய்க்காரர்  அல்லாதாரின்  நிலையைப்  பற்றி  கருத்தில்  கொண்டிருக்கவில்லை.  ஆனால்  பிரிட்டிஷ்  அரசு  சுதந்திர  மலாயா  கூட்டரசில்  மலாய்க்காரர்  அல்லாதாரின்  நலனையும்  கருத்தில்  கொண்டிருக்கவேண்டும்  என்ற  நிலையை  உறுதிப்படுத்தியது.

டத்தோ ஓனின் மகத்துவம் 

இதை  கருத்தில்கொண்டுதான்  அம்னோ  மலாய்க்காரர்களின்   அங்கத்துவம்  மட்டும்  கொண்டிராமல்  மலாய்க்காரர்,  சீனர்,  இந்தியர்  ஆகிய  மூன்று  இனங்களையும்  கொண்ட  “மலாயன்”  அரசியல்  இயக்கமாக  மாறவேண்டும்  என்று  டத்தோ  ஓன்  வலியுறுத்தியதை,  துங்கு  அப்துல்  ரஹ்மானும்  மற்றவர்களும்  ஏற்க  மறுத்தனர்.

டத்தோ  ஓன்  அம்னோவை   விட்டு  வெளியேறி  எல்லா  இனங்களை  கொண்ட  அரசியல்  அமைப்பை  கண்டார்.  வெற்றிபெறவில்லை.  காரணம்  துங்கு  அப்துல்  ரஹ்மானும்  அவரின்  அம்னோ  சகாக்களும்  மலாய்க்காரர்களின்  உரிமைகளிலும்  அதிகாரத்திலும்தான்  கவனமாக  இருந்தனர்.  மலாயாவுக்கு  சுதந்திரம்  எனும்போது  அது  மலாய்க்காரர்களின்  உரிமை.  எனவே,  அவர்களே  அதைப்  பெறவேண்டும்  என்ற  கருத்து நிலவியதைக்  காணமுடிகிறது.

பிரிட்டிஷ்  அரசியல்  தலையீடு  இல்லாமல்  போயிருந்தால்  நிலைமை  எப்படி  இருந்திருக்கும்  என்று  யூகிக்க  முடியவில்லை.  இன்று  மசீசவும்  மஇகாவும்   தேசிய  முன்னணியை  விட்டு  விலகும்  முடிவைக்  குறித்து  டத்தோஸ்ரீ  நஸ்ரியின்  கருத்தை  ஒப்பிடும்போது  ஆட்சி  மலாய்க்காரர்களிடம்  மட்டும்தான்  இருக்கவேண்டும்   என்ற  நிலையை  வலியுறுத்துவதுபோல்  இருக்கிறது.

நாற்பதுகளின்  இறுதி  கட்டத்தில்  மசீச  அமைக்கப்பட்டது.  நகராட்சித்  தேர்தல்  மூலம்  நாட்டில்  ஜனநாயக  முறையை  அறிமுகப்படுத்தி  நாட்டைச்  சுதந்திரத்திற்கு  தயார்  படுத்த  வேண்டும்  என்ற  நோக்கோடு  செயல்பட்டது.   பிரிட்டிஷ்   காலணித்துவ  ஆட்சி,

அந்தக்  காலட்டத்தில்  பல்லின  மக்களைப்  பிரதிநிதித்த  அம்னோ,  மசீச,  மஇகா  ஆகியவை  எந்த  அரசியல்  உடன்பாடும்  கொண்டிருக்கவில்லை.  கோலாலம்பூரில்  நடந்த  நகராட்சித்  தேர்தலில்  அம்னோவும்  மசீசவும்  உடன்பாடு  கண்டு  தேர்தல்  களத்தில்  இறங்கி  வெற்றி  கண்டன.

இந்த  கூட்டு  முயற்சியில்  அவ்விரு  கட்சி  இடையிலான  உறவைப்  பலப்படுத்தியது  எனலாம்.  அதே  சமயத்தில்  மஇகா  டத்தோ  ஓனின்  மீது  நம்பிக்கை  வைத்து  செயல்பட்டதால்  அது  அம்னோ,  மசீசவுடன்  தொடர்பு  கொள்ளாமல்  இருந்தது.  மஇகா  மட்டுமல்ல  மசீசவும்  டத்தோ  ஓனோடு  தொடர்பு  ஏற்படுத்திக்  கொள்ளும்  முயற்சியில்  இறங்கியதும்  வரலாற்று  உண்மையாகும்.

டத்தோ  ஓனின்  எல்லா  இனத்தவர்களையும்  கொண்ட  இயக்கமாக  உதித்தபோது  பல  பொதுநல  வாதிகள்,  தொழிற்சங்கவாதிகள்  அவரோடு  இணைந்து  செயல்படத்  தயாராயினர்.  அவர்களில்  தொழிற்சங்கவாதியான  பி.பி.நாரயணன்,  வழக்குரைஞர்கள்  ஆர்.ரமணி,  கிளவ்  துரைசிங்கம்  போன்றோர்  அடங்குவர்.  ஆனால்  தேர்தலில்  ஓனின்  அமைப்பு  வெற்றியைக்  காண  முடியவில்லை.

1954 ஆம்  ஆண்டு  கூட்டரசு  மன்றத்திற்கான  தேர்தல்  அறிவிக்கப்பட்டபோது   அம்னோவும்  மசீசவும்  தேர்தல்  உடன்பாடு  கண்டனர்.  அதுவரையில்  எந்த  ஒரு  முடிவு  எடுக்காதிருந்த  மஇகாவில்   தலைமைத்துவ  மாற்றம்  ஏற்பட்டது  அதன்  நிலையிலும்  மாற்றம்  காணப்பட்டது.

மஇகா-வின் நிலை   

வீ.தி.சம்பந்தன், (பின்னர்  துன்  சம்பந்தன்)  மஇகாவுக்குத்  தலைமை  ஏற்றார்.  அவர்  அம்னோ,  மசீச  அமைத்த  கூட்டணியில்  மஇகாவும்  இணையும்  என்று  அறிவித்தார்.  ஆனால்  இது  குறித்து   சில  ஆய்வுகளை   மேற்கொண்டபோது  சம்பந்தனுக்கு  முன்பு  மஇகாவின்  தலைவராக  இருந்த   KL தேவாசர்   கூட்டணியில்  இணைந்து  செயல்பட  மஇகா  முடிவெடுத்துவிட்டதானத்  தகவல்  ஏனோ  வெளிவரவில்லை.   வி.எல்.காந்தன்  அவர்களோடு   நடந்த  ஒரு  கலந்துரையாடலின்போது  இந்த  உண்மை  அறிந்து  கொள்ள  முடிந்தது.

அம்னோ  தலைமையிலான  கூட்டணி  1954ஆம்  தேர்தலில்  வெற்றி  கண்டது.  நாட்டுக்கான   சுதந்திர    பேச்சுவார்த்தை  ஆரம்பமானது.  பலவிதமான  கருத்து  முன்வைக்கப்பட்டு  ஆலோசிக்கப்பட்டன.  விவாதிக்கப்பட்டன.

ஆனால்  சமாதானம்,  சமரசப்  போக்கு  என்ற  அடிப்படையில்  அம்னோவின்  கைதான்  ஓங்கியிருந்தது  என்பதை  வரலாறு  கூறும்  உண்மையாகும்.  மசீச,  மஇகா  பிரதிநிதிகளை  இணைத்து  பேச்சுவார்த்தை  நடத்தப்பட்டதா  அல்லது  தனித்தனியே  பேசி  முடிவு  காணப்பட்டதா  என்பது  இன்றும் கேள்வி  குறியாகவே  இருக்கிறது.

அரசியல் அதிகாரம்

எது  எப்படி  இருந்தாலும்  ஒரு  உண்மை  மட்டும்  பளிச்சிடுகிறது.  அம்னோ  ஆரம்ப  காலத்திலிருந்தே  தனது  அதிகாரத்தை  பயன்படுத்த  தயங்கவில்லை.  பிற  இனங்களை  கட்டுப்படுத்துவதில்தான்  அதன்  கவனம்  எல்லாம்.

1946ஆம்  ஆண்டில்  உதித்த  அம்னோவை  1988ஆம்  ஆண்டில்  நீதிவழியாக  மூடுவிழா  நிறைவேற்றப்பட்டது.  இப்பொழுது  இயங்குவது  புது  அம்னோ.  அதன்  கொள்கை   இன்றுவரை  மாறவே  இல்லை.  தமது   அதிகாரத்திற்கும்,  கட்டளைக்கும்  உட்பட்டு  பங்காளிக்  கட்சிகள்  செயல்பட  வேண்டும்  என்பது  அதன்  தலையாய  கொள்கை.

செமினி  இடைத்தேர்தலில்  அம்னோ  உறுப்பினர்  தேசிய  முன்னணி  வேட்பாளராகப்  போட்டியிட்டு  வெற்றிபெற்றார்.  தேர்தல்  பிரச்சாரத்தின்போது  டத்தோஸ்ரீ  நஸ்ரியின்  இன, சமயத்  துவேஷப்பேச்சுகள்  சீன,  இந்தியர்  சமுதாயத்தினர்களை  கேவலப்படுத்தியது  மட்டுமல்ல,  அவர்கள்  பொறுப்பு  மிகுந்த  பதிவிகளில்  அமர்வதை  கடுமையாகத்  தாக்கியிருப்பது  அம்னோவின்   சுயரூபத்தை  வெளிப்படுத்திவிட்டது.

இன்றைய  அரசு  என்ன  செய்யப்போகிறது?  இப்படிப்பட்ட  பேச்சுக்களின்  மூலம்  வெற்றிகண்டவர்கள்  இஸ்லாம்  கட்சியுடன்  உடன்பட்டு  செயல்படப்போவதாக  அறிவிப்பும்  வந்துவிட்டது.  தேசிய  முன்னணி  அமைக்கப்பட்டபோது  பாஸ்  கட்சியும்  சேர்ந்திருந்ததை  மறந்துவிடக்கூடாது.  பின்னர்  அது  தேசிய  முன்னணியிலிருந்து  விலகியதும்  வரலாறு.

சுதந்திரத்திற்கு  முன்பு  பேசப்பட்டு  உறுதி  அளிக்கப்பட்ட  மதச்  சார்பற்ற  நாடு  என்பதுபோன்ற  உயரிய  நோக்கங்களுக்கு  இறங்கற்பா  நிறை  செய்த  பெருமை   அம்னோவைச்  சாரும்.

மலாய்க்காரர்களை  மட்டும்  வைத்து  ஆட்சி  நடத்த  முற்படுவது  நாட்டின்   ஒற்றுமைக்கு  உலை  வைக்கும்  தரத்தைக்  கொண்டிருப்பதை  உணராமல்  செயல்படுவது  ஆபத்தாகும்.

நம்பிக்கை வேண்டும்  

மலேசியர்கள்  நாட்டின்  எதிர்காலத்தை  நிர்ணயிப்பதில்  கவனம்  செலுத்த  வேண்டிய  காலம்  நெருங்கிவிட்டது  என்பதை  உணரவேண்டும்.  இன்றைய  அரசின்  பொறுப்பு  என்ன?  எல்லா  இனத்தவர்களுக்கும்  இந்த  நாட்டில்  உரிமையுண்டு  என்பதை  மக்களுக்கு,  குறிப்பாக  கிராமப்புறத்து  மலாய்க்காரர்களுக்கு  உணர்த்தும்  பொறுப்பை கொண்டிருக்கிறது.

ஆட்சியில்  மாற்றம்  ஏற்பட்டதே  அன்றி  வாக்குறுதிகள்  இன்னும்  நிறைவேற்றப்படவில்லை  என்ற  குறைபாடு   இருக்கிறது.

அதே  சமயத்தில்  நம்பிக்கை  கூட்டணியில்  இருப்போர்  இன,  சமய  அரசியலுக்கு  இடந்தராமல்  நடந்துகொள்கின்றனரா  என்ற  சந்தேகம்  எழாமல்  பார்த்துக்கொண்டால்தான்  அம்னோ-பாஸ்  கட்சிகளின்  ஆபத்தான  போக்கை  கட்டுப்படுத்த  முடியும்.