மலேசிய தமிழ் இந்திய வாடகை வாகன ஓட்டுனர்கள் குழு (ITG) சார்பில் சுங்கை சிப்புட் விக்னேசுவரன் அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி

நோய்வாய்ப்பட்டு வறுமையில் அவதியுற்று தனது வாழ்நாளை கடத்தி வரும் சுங்கை சிப்புட் வட்டாரத்தை சேர்ந்த திரு விக்னேசுவரன் தமிழ்ச் செல்வி தம்பதியருக்கு மலேசிய தமிழ் இந்திய வாடகை வாகன ஓட்டுனர்கள் ஒன்றிணைந்து தங்களால் இயன்ற உதவி நிதியை வழங்கியதாக அதன் பேராக் மாநில தமிழ் இந்திய வாடகை வாகன ஓட்டுனர்கள் சங்க துணை செயலாளர் திரு பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.

சிறு வயதிலிருந்தே தனது கிட்னி செயலிழந்ததை தொடர்ந்து இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை செய்து இதுநாள்வரை அவதியுறும் திரு விக்னேசுவரன் அவர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள எங்களால் இயன்ற உதவி நிதியை வழங்கிய வேளையில் மலேசிய தமிழர்களும் உதவ முன் வரவேண்டும் என பேராக் மாநில தமிழ் இந்திய வாடகை வாகன ஓட்டுனர்கள் சங்க தலைவர் திரு செயபிரகாசு அவர்கள் கூறினார்.

சமீபத்தில் சமுக வலைதளத்தில் வெளிவந்த இவர்களின் காணோளியை கண்டு வருந்திய நாங்கள் உதவ முன்வந்தது போல், இதேபோன்று அல்லல்படும் தமது தாய்த்தமிழ் உறவுகளுக்கு அனைவரும் இயன்ற உதவிகளை செய்யுமாறு கேட்டு கொள்வதாக சங்க செயலாளர் திரு சுப்பிரமணியம் தெரிவித்துக் கொண்டார்.

பேராக் மாநில தமிழ் இந்திய வாடகை வாகன ஓட்டுனர்கள் சங்கத்திற்கு விக்னேசுவரன் தமிழ்ச் செல்வி தம்பதியர் நன்றி தெரிவித்ததுடன், பொருளாளர் திரு இரசினி மற்றும் செயலவை உறுப்பினர் திரு எட்மன் அவர்களும் நிதி வழங்கிய போது உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.