மலேசிய தமிழர்களை மடைமாற்றம் செய்ய முனையும் மலேசிய இந்து சங்கத்திற்கும்,  இந்து தர்ம மாமன்றத்திற்கும் மலேசிய தமிழர் தேசிய இயக்கங்களின் கண்டனம்

அண்மைய காலமாக மலேசியாவில் இயங்கும் இந்து மத இயக்கங்கள் தங்கள் மதச் செயல்பாட்டினை பயணிப்பதிலிருந்து தடம் புரண்டு தமிழர் இன, வரலாறு பற்றியங்களில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு தானும் குழம்பியதுடன் அல்லாமல்  தமிழர்களையும் குழப்பி வருகின்றனர்.

இந்து தர்ம மாமன்றம் இனம், வரலாறு சார்ந்த பற்றியங்களில் மூக்கை நுழைத்து குழப்பங்களை விளைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.அவ்வப்போது வரலாறு கருத்தரங்கு ஏற்பாடு செய்வது அதில் மதச் சாயம் பூசுவது, சித்திரை புத்தாண்டை கையில் எடுப்பது அதை தமிழ் புத்தாண்டு என்று பறைச்சாற்றுவது போன்ற  செயல்பாடுகளை கைவிட வேண்டும். தமிழ்ப்பள்ளிகள் மதங்கள் கடந்தது, அங்கே சமய வகுப்பை வழிய புகுத்துவது தமிழர் இனத்தினிடையே மத அளவிலான பிளவை தான் ஏற்படுத்தும்.சமயம் சார்ந்த செயல்பாடுகளை சமயம் சார்ந்த கோவிலில் ஏற்பாடு செய்வதே சிறப்பு.இந்து மத இயக்கமான இந்து தர்ம மாமன்றம் இன, வரலாறு பற்றியங்களில் மூக்கை நுழைக்காமல் இருக்க வேண்டும்.இந்து சங்கமமும் தமிழர்களை பிளவுப்படுத்தும் செயலில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே மத அளவிளான விடுமுறை தீபாவளிக்கும், தைப்பூசத்திற்கும் உண்டு மீண்டும் ஏன் சித்திரைக்கு விடுமுறை? இந்திய கூட்டுக்குள் உள்ள எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும், இனங்களும் கொண்டாட கூடிய தை 1க்கு தான் பொதுவிடுமுறை தேவை. இனம் சாந்த பற்றியங்களில் இவ்விரு மத இயக்கங்கள் தலையிடுவது கண்டிக்கத்தக்கது என மலேசியத் தமிழர் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முபெவே தமிழகரன் அவர்களும், மலேசிய புதிய தமிழ்த் தலைமுறை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.தமிழ்த்திறன் அவர்களும், மலேசிய செந்தமிழர் பேரவையின் துணை ஒருங்கிணைப்பாளர் திரு. ருகேந்திரன் அவர்களும் தெரிவித்தனர்.

ஏற்கனவே மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் திரு.மோகன் சான் தன்னை தமிழினத் தலைவரென பிரகடனப்படுத்தி தமிழர்களின் கடும் கன்னடத்திற்கு ஆளானது போதாதென தற்போது இந்துக்கள் அனைவரும் தமிழர்கள் என்ற அறிவிலித்தனமான செய்தியை வெளியிட்டுள்ளாா். இனத்திற்கும் மதத்திற்கும் வேறுபாடு தெரியாதவரா இவர்? தெரிந்தும் ஏன் இப்படிப்பட்ட கருத்தை வெளியிடுகிறார் என்பதை நாம் ஆய்வுக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். இவரின் கருத்துகளுக்கு தமிழர்களைக் காட்டிலும் இங்கு வாழும் தெலுங்கு மலையாளச் சங்கங்களே முதலில் எதிா்ப்பும் மறுப்பும் தொிவித்திருக்க வேண்டும். காரணம் மோகன் சானின் கூற்று தெலுங்கு மலையாள இன அடையாளத்தையும் பண்பாட்டுக் கூறுகளையும் முடக்கும் செயல் என்பது வெள்ளிடைமலை. ஆனால் அவ்வாறு எதிா்ப்புச் செய்திகள் வெளிவராதது, இவர்களும் மோகன் சானின் கருத்தியலுக்கு உடன்படுவதாகவே கருதக்கூடிய நிலையை உண்டாக்கிவிட்டனர். இது போதாதென்று இந்து மாமன்றம் தமிழறிஞர்களின் கூற்றுக்கு எதிராக சித்திரையைத் தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்திருப்பது தமிழர்களை மேலும் குழப்புவதாகவே உள்ளது. இவர்களின் இந்தச் செயல் தமிழினத்தின் மரபுவழக்கையும் தமிழினச் சான்றோர்களின் கருத்துகளையும் அவமதிக்கும் செயலாகும். இந்து மத அடிப்படையில் இயங்கும் இந்து சங்கமோ சித்திரையை இந்துப் புத்தாண்டாக அறிவித்திருக்க இந்து மாமன்றத்தின் முரணான செயல்பாடே இவர்களின் முகத்திரையை கிழித்தெறிகிறது. மதத்தின் கடைபிடிப்பை அல்லது கொள்கைகளை இனத்தின் அடையாளமாக காட்டத் துடிப்பது மதவெறியாக இருக்கக் கூடும். மத இன வேறுபாட்டை எத்தனையோ சான்றோர்கள் எவ்வளவோ தெளிவுகளைக் கொடுத்திருந்தாலும் அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு இவர்களுக்குத் தோன்றியது எல்லாம் சரி என்று பரப்புரை செய்வது திட்டமிட்டே செய்யும் செயல். இவர்களின் பேச்சின் பின்னால், தமிழினத்தை மேலும் அடிமை நிலையிலே வைக்க எண்ணம் கொண்டுள்ளதாக தென்படுகின்றது. மேலும், தமிழ் இனத்தின் அடையாளங்களையும் பண்பாடுகளையும் முடிவு செய்ய இவர்கள் யார்? இனத்தின் முடிவுகளை ஒரு தனி மதம் முடிவு செய்வது எந்த வகையில் ஏற்றுக் கொள்வது? மதத்தின் செயல்பாடுகளை மட்டும்தான் முடிவு செய்ய  இவர்களுக்கு உரிமை உண்டே தவிர தனி ஓர் இனத்தின் முடிவுகளில் இவர்கள் தலையிடுவது கண்டிக்கத்தக்கது. தமிழ் இனத்தின் முடிவைத் தமிழ்ச்சான்றோர், தமிழ் நூல்கள், தமிழ மரபு நிலையில் எடுக்கப் பல தமிழ் அமைப்புகள் இங்கே மலேசியாவிலே உள்ளன என்பதை இவர்கள் அறிய வேண்டும். சுறுங்கச் சொன்னால் இந்து மதம் தமிழினத்திற்குத் தலைமை இல்லை. தேவையும் இல்லை. மேலும், தமிழினத்தின் முடிவுகளை மட்டுமே இவர்கள் கையில் எடுப்பார்களே தவிர மற்ற மலையாளமோ, அல்லது தெலுங்கு இன முடிவுகளையோ இவர்கள் எடுத்ததாக செய்திகள் உண்டா? நாம் கேட்டது உண்டா? இல்லவே இல்லை. இதிலிருந்து தெறிகிறதே இவர்களின் சூழ்ச்சி.

தொடர்ந்து தமிழ்ப்பள்ளிகளில் இந்துதர்மத்தை கற்பிற்கும் நடவடிக்கை தமிழர் வாழ்வியலுக்கே எதிரானது. இந்துதர்மம் என்பது வேத- மனு நூலின் அடிப்படையில் நால்வர்ணக் கோட்பாட்டின் வழி பிறப்பால் வேற்றுமையை உணர்த்தும். ஆனால் தமிழர் மறையோ அறத்தின் வழி பிறப்பு ஒக்கும் எல்லா உயிா்க்கும் என மனிதத்தை கடந்து உயிர்கள் வரை நேசிக்கும் தன்மையுடையதாகும். மத அமைப்புகள் மதம் சாா்ந்த பணியை கோவில்களிலும், பணிமனைகளிலும் முன்னெடுக்காமல் தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளையும் தமிழ்ப்பள்ளிகளையும் தம்வயப்படுத்தும் செயலைத் தொடர்ந்து மேற்கொண்டிருக்கும் மலேசிய இந்து சங்கத்தையும் மலேசிய இந்து மாமன்றத்தையும் வன்மையாக கண்டிப்பதாக கம்பாா் தமிழர் விழிப்புணர்வு இயக்கத்தின் தலைமைப் பொறுப்பாளர் திரு.தமிழரண் அவர்களும், மகாகவி முத்தமிழ்க் கழகம்,

சொகூரின் ஒருங்கிணைப்பாளர் திரு.தமிழ்த்திரு அவர்களும், தமிழர் ஒற்றுமை இயக்கத் தலைவர் திரு.மகாதேவன் அவர்களும், மலேசியத் தங்கத் தமிழர் இயக்கத்தின் தலைவர் திரு.தங்கராசா அவர்களும் தொிவித்தனர்.

மலேசிய மக்களும் மலேசிய இந்து சங்கம் மற்றும் இந்து தர்ம மாமன்றமும் ஒன்றைத் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். “தமிழர்கள் தமிழ்ச் சமய மரபு வழி வந்தவர்கள்”, ஆங்கிலேயர் வருகைக்கு பின் இந்து, இந்தியா, இந்தியர்கள் என பெயர் வைப்பதற்கு முன்பே சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு  மூத்த வரலாற்று பெருமை கொண்ட தமிழர் தேசிய இன மக்கள் நாங்கள்.

எங்களுக்கென தேசம், மொழி, இனம், பண்பாடு, சமயம், பெருநாட்கள், நாகரீகம், மரபு, வாழ்வியல் மற்றும் வழிமுறைகளைக் கொண்டு உலகத்தின் தொல்குடிமக்களாக வாழ்ந்து வருபவர் நாங்கள்.

தமிழர்கள் நாங்கள் பல சமயத்தைப் பின்பற்றி வந்தவர்கள். இடையில் தோன்றிய மதங்கள் எங்கள் அடையாளமாக தலைமை தாங்க முடியாது.

அதிலும் ஆரிய பிராமணர்கள் வழி தென்னகத்திற்குள் நுழைந்த வைதீக மதம் நால்வகை சாதி பாகுபாடு கொண்டு, இழி சித்தாந்த புராணங்களை ஏற்று, உயிர்க்கொலை யாகங்களை நடத்திப் பின்னாளில் இந்து மதம் என பெயர் பெற்றதுடன் அது தமிழர்கள் மீது திணிக்கப்பட்டது என்பதே வரலாற்று உண்மை.

உங்களின் சித்தாந்த சூழ்ச்சிகள் எங்களிடத்தில் எடுபடாததால், எங்களின் தாய்மொழி தமிழ்ப் பள்ளிகளில் “இந்து தர்ம கல்வி” என உள்ளே நுழைய முனையும் இந்து மாமன்றத்தின் சித்து வேளைகள் இனி தமிழர்கள் இடத்தில் பழிக்காது.

ஆகையால் “நாம் மதத்தால் இந்துக்கள், இனத்தால் தமிழர்கள்” என்று அடிப்படையற்ற செய்தியை டத்தோ மோகன் சாண் மற்றும் இந்து மாமன்றம் தலைவர் போன்றோர்கள் உலறிக்கொண்டிருக்கக் கூடாது என மலேசிய நாம் தமிழர் இயக்கத்தின் தேசிய வீயூக இயக்குநர் திரு பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.

மதத்தின் பெருநாட்களை இனத்தின் பெருநாட்களாக சித்தரிப்பது ஏற்க முடியாத கூற்று. எப்படி தெலுங்கர்களுக்கென உகாதி என்றும், மலையாளிகளுக்கென விசு என்றும், தமிழர்களுக்கென “தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு” என்றும் தங்களது இனப் புத்தாண்டுகள் கொண்டாடப் படுகின்றனவோ அதேபோலத்தான் சீனர், சீக்கியர், குசராத்தியர் மற்றும் ஆங்கிலேயர் போன்ற எத்தனையோ தேசிய இனத்தவர்கள் தங்கள் இனப் புத்தாண்டாக அவரவரும் ஒவ்வொரு நாளைக் கொண்டாடி வருகின்றனர்.

இதில் மதப் பெருநாட்களை இனத்தின் புத்தாண்டாக  மாற்றுவது முற்றிலும் தவறானது.

இப்படியிருக்க தமிழர்கள் தங்களுக்கென்று நடைமுறையில் வகுத்து வைத்திருக்கிற தை முதல் நாளை மட்டும் ஏற்காமல் இன்னும் சித்திரையை தமிழ் புத்தாண்டு என்று சொல்வதேன்..?

சித்திரை பெருநாள் என கூறிக் கொண்டாடுவோம். நாம் கேட்கப்போவதில்லை. மாறாக தமிழ் புத்தாண்டு என சொல்லாதீர்கள். அந்த இனத்தின் மகன்கள் தமிழர்கள் நாங்கள் இருக்கிறோம். எங்கள் பெருநாளை அல்லது புத்தாண்டை தமிழர் அல்லாதவர்கள் நிர்ணயிக்கக் கூடாது. அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

எங்கள் இனத்தின் முன்னவர்கள், வழிகாட்டிகள், பேரறிஞர்கள் எங்களது புத்தாண்டையும் பெருநாட்களையும் துல்லியமாக வகுத்து வைத்துள்ளனர். அதில் மற்றவர்கள் வந்து மூக்கை நுழைக்கக் கூடாது என கடுமையாக எச்சரிப்பதாக தமிழ்ச் சமய பேரவை பொறுப்பாளர் திரு ஆனந்த தமிழன் வலியுறுத்தினார்.

குறிப்பு : இவ்வறிக்கை  நாளிதழ்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டது