மலேசிய தமிழ்ச் சமய பேரவை ஏற்பாட்டில் தமிழியம் அறிவோம் வரலாற்று சுற்றுப்பயணம் எனும் கருபொருளில் தமிழ்ச்சமய பேரவை உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் புலிக்கொடி நாட்டி உலகை வளம் வந்த சோழ மன்னன் இராசேந்திர சோழன் கால் பதித்த கடாரத்தில் அமைந்துள்ள லெம்பா பூசாங் பள்ளத்தாக்கிற்கு சென்று கண்டதுடன் நமது வரலாற்றுப் பெருமைகளை மேலும் விரிவாக அறிந்து கொண்டனர்.
முதல் கட்டமாக பினாங்கில் அண்மையில் திறக்கப்பட்ட இந்தியர் அருங்காட்சியகத்திற்குச் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த தமிழர் நாகரிக கலை பண்பாட்டு பொருட்களைக் கண்டு வியந்து, அதன் அறங்காவலர்களை வாழ்த்தியதோடு அங்கு பொறிக்கப்பட்ட எழுத்துகளில் தமிழ் பயன்பாடு குறைவு என்பதையும் வருத்தத்துடன் சுட்டிக் காட்டி கண்டிப்பாக தமிழ் மொழியிலும் விளக்கங்கள் இடம் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அந்த அருங்காட்சியகம் அண்மையில் தொடங்கப்பட்டதால் விரைவில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்படும் என்று அதன் அறங்காவலர்கள் தெரிவித்தது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. காரணம் உலகின் தொல்குடி இனமான தமிழர்கள் பொக்கிசங்கள் வரலாற்று குறிப்புகள் தமிழ் மொழியிலும் பறைசாற்றப்பட வேண்டும்.
மறுநாள், கங்கை கொண்டு கடாரத்தை வென்றவரும் உலகின் அதிக நிலப்பரப்பையும், கடல் பரப்பையும் கட்டி ஆண்டவரான தமிழர் பெரும் பாட்டன் இராசேந்திர சோழன் கால் பதித்துக் கட்டியெழுப்பிய லெம்பா பூசாங் பள்ளத்தாக்கிற்குச் சென்று, அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட தமிழர் வரலாற்று சண்டி கோவில்கள் தடயங்கள், கல்வெட்டுகள், சிலைகள் மற்றும் பயன்பாட்டு பொருட்களை கண்டனர்.
அங்கேயும் தமிழ்மொழி எழுத்து மறுக்கப்பட்டதுடன் ஏற்கெனவே இருந்த தடயங்கள், ஆவணங்கள் மறைக்கப்பட்டதையும் உணர்ந்தனர். எனவே தற்போது அமைச்சரவையில் இருக்கும் நமது பிரதிநிதிகள் தம்முடைய வரலாற்று இடங்களையும் தடயங்களையும் அன்னியர்கள் அழிக்காமல் இருக்கவும் அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு எடுத்துச் செல்லவும் உரிய நிரந்தர பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மேலும் அவ்விடத்தின் வரலாறு திரியாமல் இருக்க தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர்கள் என்று பலரும் அங்குள்ள தடயங்கள் ஆவணங்கள் கொண்டு உண்மை வரலாற்றுக் கட்டுரைகள், ஆய்வு புத்தகங்கள் மற்றும் தரவு குறிப்புகள் போன்றவற்றை எழுதி வெளியிட வேண்டும். அது அனைவரிடத்திலும் போய்சேர வேண்டும் என்பதோடு இந்த இரு இடத்திற்கும் மலேசிய தமிழர்கள் தவறாது வந்து பார்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
மலேசிய தமிழ்ச் சமய பேரவை முன்னெடுக்கும் பணிகளானது:
1)தமிழில் வழிபாடு.
2)தமிழ்ச் சமய கோவில்கள் ஒருங்கிணைப்பு.
3)தமிழ்ச் சமய கட்டமைப்பு.
4)தமிழ்ச்சமய அறிஞர்கள் ஒருங்கிணைப்பு.
5)பிறப்பு முதல் இறப்பு வரை திருமணம், பிறந்த நாள், புதுமனை புகுவிழா உள்ளிட்ட எல்லா சடங்கு நிகழ்வுகளும் தமிழர் நெறிப்படி நடத்த வழியமைப்பது, ஊக்குவிப்பது.
6)தமிழியப் பட்டறைகள் வழி தமிழ்ச் சமய நெறி மீட்புப் பணிகள், பரப்புரைகள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இச்சுற்றுலாவில் தமிழ்ச் சமய பேரவை முக்கிய தளபதிகளான திரு. ஆனந்ததமிழன், திரு. துரைமுருகன், திரு. பாலமுருகன், திரு. இராவணன், திரு. சத்தியா, திரு. முருகையா, திரு. கோபால், திரு. சரவணன், திரு. தனசீலன், திரு ராசேசு, திரு அரசேந்திரன், நவீன், முருகன் மற்றும் ஏனைய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
வாழ்த்துகள். தங்களின் முன்னெடுப்பு மகிழ்ந்து வரவேற்கத்தக்கது. ஓர் அன்பான வேண்டுகோள். தாய் மொழியான நம் தமிழ் மொழியை எங்கும் எதிலும் எப்போதும் பிழையின்றி ப் பயன்படுத்த உறுதி மொழி எடுத்துக்கொள்வோம்.
நன்றி.