சுங்கை சிப்புட் தாமான் துன் சம்பந்தன் எனும் குடியிருப்பில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக முடங்கி கிடந்த பாலர் பள்ளியை, மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் தத்தெடுத்து சீரமைப்பு செய்து வருகின்றனர்.
10 ஆண்டுகளுக்கு முன்னர் பாலர் பள்ளி மற்றும் தேவார வகுப்புகள் நடந்து வந்த இக்கட்டிடம், தற்போது கறையான் அரைத்து, காடு மண்டி பழுதடைந்த நிலையில் பாம்புகள் கூடாரமாக இருந்ததை, முன்னாள் மாணவர் சங்க தலைவரும் மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினருமான உயர்திரு க. பாலகிருசுணன் அவர்கள் தலைமையில் சீரமைப்பு பணி தொடங்கியது.
அன்று ஆட்சி பொறுப்பில் இருந்தவர்கள் கண்டு கொள்ளாத நிலையில், முன்னாள் மாணவர் சங்கம் குழுவினர் முறையே விண்ணப்பித்து அனுமதிபெற்று, அக்கட்டிடத்தை புதுப்பொலிவுடன் புத்துயிர் பெற பணியாற்றி வருகின்றனர்.
இத்திட்டத்திற்கு ஆதரவாக ஒற்றுமை இலாகா அமைச்சரவை துணையாகவும் வட்டார ருக்குன் தெதாங்க அமைப்பு கூட்டுப்பணிக்கு பேருதவியாகவும் இருந்தன.
இக்கட்டத்தில் பாலர் பள்ளி, வசதி குறைந்த மாணவர்களுக்கு இலவச சிறப்பு வகுப்பு மற்றும் பொதுநல தமிழிய நிகழ்வுகள் போன்ற நற்பணிகளுக்கு பயன்படுத்துதலே முதன்மை நோக்கமாகும்.
இச்சீரமைப்பு பணிகளுக்கு கிட்டத்தட்ட ரிம 50 ஆயிரம் வரை, வரையறைக்கப் பட்ட நிலையில் அதை திரட்டும் முனைப்பிலும் இறங்கி உள்ளனர். மேலும் அமைச்சர் வேதமூர்த்தி தலைமையிலான அமைச்சுக்கும் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மனு அளிக்கபட உள்ளது.
இதன் ஒருங்கிணைப்பு குழுவில் முன்னாள் மாணவர் சங்க தலைவர் உயர்திரு பாலகிருசுணன், துணை தலைவர் திரு பாலமுருகன், பொருளாளர் திரு லெட்சுமணன் செயலவை உறுப்பினர் திரு அலகுசுந்தரம் மற்றும் சங்க ஆலோசகர் திரு ஏகாம்பரம் மற்றும் வட்டார ருக்குன் தெதாங்க அமைப்பு செயலாளர் திரு ஆறுமுகம் ஆகியோர் இருப்பது குறிப்பிடத்தக்கது.