மலேசியா மற்றும் தமிழக தமிழனுக்கு அரசியல் ஆதிக்க அறிவு இல்லை..!
கூட்டிக்கொடுத்தும் காட்டிக் கொடுத்தும் வாழும் நாடோடித்தனம் மாற வேண்டும்.
தமிழ் மண்ணை தமிழன் தான் ஆள வேண்டும் என்ற உரிமைத்தெரியாது இவனை ஆட்டு மந்தைகள் போல் வளர்த்து விட்டது யார்?
.
நம் ஆசை எதுவாயினும் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் நம் வாழ்த்துக்களை கூறிக் கொள்வோம். அவர்கள் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி, தாங்கள் பெற்ற வெற்றிக்கு புகழ் சேர்ப்பார்கள் என நம்புவோம்.
இனி, தொடர் பணியில் தமிழர்கள் நாம். முதலில் திருந்த வேண்டியது நம் கடமை. தமிழர்களை தமிழர்களே மதிக்க வேண்டும். தமிழராய் பிறந்தவர்களை தமிழரே கொண்டாடுவதில்லையே என்ற கவலை. அதுவே நம்மிடையே வளர்ந்துவிட்ட பெருங்குறை. தமிழ் நிலத்தின் வித்துக்களை விதைத்தால் தானே இங்கே தமிழ்ப் பயிர் விளையும். ஆனால் இங்கே விதைக்கப்படுவதெல்லாம் அயல் மொழிக் களைகளே. அதனால், இன்று, இடைச் செறுகல்களாக வந்தவர்களே மாமனிதர்கள். தலைவர்கள். புகழாளர்கள்? கவிஞர்கள், கலைஞர்கள், பெரும் பொருள் ஈட்டுவோர்கள், முதலாளிகள், உயர்ந்தவர்களாக எண்ணப் படுவோர்கள். உயரத்திலும் இருப்போர்கள்.
உலகியலை யெல்லாம் போதித்த நம் முன்னோர்களின் பெயர் எதுவும் நம் இளம் தலை முறையினருக்கு தெரியவில்லை. திருவள்ளுவரும் இன்ன பிறரும் கூட இன்னமும் சில காலத்திற்கே தாக்கு பிடிப்பார்கள். அவர்களையும் கூட நாம் மறந்துவிடும் காலம் வந்துவிடும் என்ற அச்சம் நம் மனதில் தோன்றியுள்ளது. பட்டினத்தாரை தெரியாது. பகுத்தறிவு பேசிய வள்ளலாரை தெரியாது. தமிழ்ச் செம்மொழி என்ற பரிதிமாற் கலைஞரை தெரியாது. ஆங்கில மேடை பேச்சு முறையை தமிழில் பேசி பெருக்கெடுக்க வைத்த தமிழ்த் தென்றல் திரு வி க அவர்களை தெரியாது. இந்தி எதிர்ப்புப் போரில் உயிர்நீத்த தமிழர்களை தெரியாது. இந்திய விடுதலை போரில் களம் புகுந்த தமிழினத்தின் தோன்றல்களை தெரியாது. இனம் மொழியென எழுந்த கவிஞர்கள் புலவர்களைத் தெரியாது. மொழிவழி மாநிலங்கள் அமைந்த போது.. அதற்காக போராடிய சிலம்புச் செல்வரை போன்ற பெருமக்களை தெரியாது. திரைப்படங்களில் வாரி கொடுத்ததாக நடித்தவர்களையும் நாலு வார்த்தை முறுக்காக எழுதி விட்டுப் போனவர்களையும் தெரியும் அதையே பெரிதெனவும் பேசுகின்றனர.
நம் புலவர்களும் அறிஞர்களும் எழுதிய நூல்களை படிப்பதற்கு கல்வியே இல்லாத நிலை. நம் திருக்கோயில்கள் எல்லாம் சமக்கிருதச் மயமாக்கியவர்களுக்கு முன்னால் நாம் மண்டியிட்டுக் கிடக்கிறோம். தமிழ் இசை இல்லை. அதனை பேசுவாரும் இல்லை. எல்லாம் பிறர் புகழ் பாடலாய் தமிழர் நாடு. சென்னை கபாலீசுவரர் திருக்கோயிலில் அறுபத்து மூவர் விழா! என சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன் நோக்கம் என்ன என்பதே நமக்கு தெரிவதில்லை. இறைவனை தேன் சொட்டும் தமிழால் பாடித் தொழுது மகிழ்வித்த அடியார் பெரு மக்களுக் கென்றே இறைவரால் எடுக்கப்படுகின்ற விழா அது. ஆனால் அங்கும் மெல்ல மெல்லத் திணித்த சமக்கிருதத்தில் வழிபாடு. எந்த இறைவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார். நம் துறவிகள் எல்லோரும் தெரியாமல் மறக்கடிக்கப் படுகின்றனர். இங்கு வந்தவர்களுக்கு அங்கும் எங்கும் மடங்களும் முதன்மையும். முழுமையும்?!
புதிதாக எழுந்த பகுத்தறிவுகள் தமிழருக்கு மதமில்லை என சொல்ல நம் வழிபாட்டையும் தெய்வீகத்தையும் இழக்கும் நிலைக்கு வந்து விட்டோம். நாம் கட்டிய கோயில்கள் நம்மிடம் இல்லை. நம் ஆன்மீகமும் பிறர் வயமானது. தமிழும் தமிழருமே சிவனியத்தையும் திருமாலியத்தையும் போற்றி, வாழ்த்தி படைத்தளித்ததை மறந்தே போனோம். தமிழ்க்கடவுள் முருகனையும் பிள்ளையாரையும் வழிபடும் பாடல்கள் பலப்பல இருக்க.. அவற்றை பாடாமல் இங்கே பிற மொழிகளின் ஆட்சி. இங்கே வந்தவர்களால் வீழ்த்தப் பட்டு, புகுத்தபட்ட மொழிகளால் நாம் அடிமை பட்டுக் கிடக்கிறோம். தமிழரால் வழிபாடு செய்யப்படும் மாரி, காளி அம்மன் திருக் கோயில்களிலும் கிராம கோயில் பூசாரிகள் என இணைத்து வைக்கப்பட்டு அவர்களும் இல்லாத வழி முறைகளால் வளைக்கப் பட்டுள்ளோம். எதிலும் நம் தலைமை இல்லை.
காரணம் வேறென்றுமில்லை. நம்மை நாம் ஆண்டு, ஆட்சி செய்து பலகாலமாகிப் போனது. மெல்ல மெல்ல அந்த உணர்வுகளை நாம் இழந்து வரும் படியான சூழல்கள் விதைக்கப்பட்டு வருகின்றன. கழுதையின் மேல் வைத்திருக்கும் சுமையை மறக்கடிக்க வாழை பழத்தை அதன் முன்னால் தொங்க விட்டவாறு தானும் கழுதையின் மேல் அமர்ந்து கொண்டு, அதனை வேலை வாங்குவதும் குறிப்பிட்ட இடத்தை அடைந்த பின்னால்.. அந்த வாழைப்பழத்தை கழுதைக்கு கொடுக்காமல் ஏமாற்றுவதை கதையாக சொல்வதைப்போல தமிழினத்தை காக்க வந்ததாக கூறி தமிழினத்தின் ஆட்சியை, நிலங்களை எல்லாம் பறித்துக் கொண்டவர்களே இன்றளவும் நமக்கு வாழை பழக் கதைபோல போக்கு காட்ட காட்ட, சாதியாக பிரிந்தோம். வீரப்போர் கலைகளை மறந்தோம். திருக்கோயில்களை இழந்தோம். தமிழ் சித்த மருவத்தை இழக்கும் நிலையில் நிற்கிறோம்.
ஏதோ நமக்கு இந்திய ஆட்சியாளர்கள் போடும் பிச்சையிலும் தமிழ்நாட்டை ஆளும் திராவிடத்தின் கொடையாலும் நாம் வாழுவதாக நினைக்கும் நினைப்பிற்கு ஒரு பெரிய கும்பிடு போட்டு எழுந்து நிற்க! நடக்க, வெல்ல, வெற்றி கொள்ள வழி செய்குவோம்! தமிழ்நிலம். தமிழர் வளம் தமிழ் மொழியென முழக்கமிடுவோம்.தலை நிமிர தமிழ்த்தேசிய அரசியலை நம் போன்றோர் முன்னெடுப்போம்! முன்னைந்து நிற்போம். ஊழலை ஒழிப்போம். ஒப்பில்லாத தமிழை வாழ வைப்போம்.
உலகம் மதம் என்ற பண்பாட்டில் கட்டில் போட்டு உறங்குகிறது. நாம் நம்முடைய பண்பாட்டுச் செல்வங்களை இகழ்ந்து களிப்பவர்களை முன்வைத்து அவலப்படுகிறோம். நோக்கற்ற இணைப்புகளை கைவிட்டு ஆளுமை செய்வோம்! அரசியலை கைக்கொள்வோம். உலகம் வியக்க வாழ்ந்த தமிழினத்தின் புகழை மீட்டெடுக்க உழைப்போம்!
ஆனால் தைதரியம் பிடிச்சவனெல்லாம் ஒதுங்கி சுய அடுப்ப பாருங்கப்ப!
– Pon Rangan
[email protected]