தமிழ் சீன ஆரம்பப் பள்ளிகளுக்கு எதற்கு சாவி  (காட் காலிகிராப்பிக்) எனும் ஓவிய எழுத்து..? கடும் கோபத்தில் தமிழர் அமைப்புகள்

அடுத்தாண்டு முதல் தமிழ் சீன ஆரம்பப் பள்ளிகளில் 4ஆம் வகுப்பு தேசிய மொழி பாடத்திட்டத்தில் சாவி  ஓவிய எழுத்து (காட் காலிகிராப்பிக்) வலுக்கட்டாயமாக திணிக்க முயலும் கல்வியமைச்சின் நடவடிக்கையை கடுமையாக கண்டிப்பதாக உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகத்தின் செயல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் திரு பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்

பல்லின மக்கள் வாழும் மலேசிய திருநாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில், ஒரு இன மத முன்னுரிமை கோட்பாட்டில் மற்ற இன மக்களை குறுக்கு வழியில் கொண்டு வர எதிர்கால திட்டமே இந்த தமிழ் சீனப் பள்ளிகளில் அறிமுகப்படுத்த இருக்கும் பிற இன சமய (சாவி) எழுத்து என்றார்

இத்திட்டத்தைப் பற்றி அமைச்சரவையில் விவாதிக்கப் பட்டதா.? கல்விமான்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என அனைத்து பொது தரப்பினரிடமும் கலந்தோசிக்கப் பட்டதா.? அதனுடைய திட்ட வரைவு வெளிப்படை அறிக்கை என்ன.?

இடைநிலை பள்ளிகளில் தமிழ் மாணவர்களுக்கு தமிழ் மொழி பாடத்தை கட்டாய பாடமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றாத அன்று இருந்த தற்போது இருக்கிற அரசுகள், தமிழர்களுக்கு  விரோத செயலையே தொடர்ந்து கல்வி துறையில் செய்து வருகிறது

உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியான தமிழ்மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் தமிழர்கள் நாங்கள். எங்களது இனம் மொழி சமயம் பண்பாட்டு உரிமை உடமை போன்ற விடயங்களில் விளையாடுவது ஏற்றுக் கொள்ள முடியாது.

பிற இன மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கல்வி அமைச்சு இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்  என திரு வீ. பாலமுருகன் கோரிக்கை விடுத்தார்.

ஏற்கனவே பிபிஎசமாய், டிஎல்பி, பன்மை வகுப்பு மற்றும் மெட்ரிகுலேசன் வாய்ப்பு திருப்தி இல்லை போன்ற பற்பல சிக்கல்களால் வதைத்தது மட்டுமின்றி, அதே வரிசையில் தற்போது காட் காலிகிராப்பிக்  எழுத்தை நமது தாய் மொழி பள்ளியில் வலிய புகுத்த நினைப்பது வன்மையாக கண்டனத்துக்குறியது என தமிழ்க் கல்வி ஒன்றியத்தின் பொறுப்பாளர் திரு மாவேந்தன் செயரத்தினம் கூறினார்

எந்த அரசு வந்தாலும் தமது இனத்தின் கல்வி உரிமையிலும் உணர்விலும் விளையாடுவதே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

ஆரம்பப் பள்ளிகளில் தீர்க்கப்படாமல் இருக்கும் ஆசிரியர் குறைவு, வசதிகள் குறைவு, அரசு உதவி நிதி, பணியாளர்கள் பற்றாக்குறை போன்ற எண்ணற்ற சிக்கல்கள் இருக்க, தமிழ் சீனப் பள்ளிகளில் தேவையற்ற அரபு ஓவிய எழுத்தை கொண்டுவருவதற்கான உள்நோக்கம் என்ன.?

சாவி எனும் ஓவிய எழுத்தை திணிப்பதன் மூலம் பின்னாளில் தமிழ் சீனப் பள்ளிகளின் தனித் தன்மையை இழந்து, தமிழர் சீனர் அல்லாத ஆசிரியர்களை தமிழ் சீனப் பள்ளிகளில் புகுத்தி, அனைத்தும் பிற இன சமயப் பள்ளிகளாக மாற்றவும் தாய் மொழி பள்ளிகளை அழிக்கவும் அரசு முனைகிறது என்றார் திரு செ. மாவேந்தன்

ஓர் இனத்தின் சமய தொடர்புடைய காலிகிராப்பிக் எனும் ஓவிய எழுத்தை பிற இனத்தின் தாய் மொழி பள்ளிகளில் திணிப்பது என்பது ஒற்றுமை நல்லிணக்கத்திற்கு ஒருபோதும் வழிவகுக்காது என தமிழ்ச் சமயப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு ஆனந்த தமிழன் முனியாண்டி குறிப்பிட்டார்.

சாவி எனும் ஓவிய எழுத்தை பயிற்றுவிக்க குறிப்பிட்ட இன மதபேதகர்களை தருவித்து தமிழர் சீனர் மாணவர்களை மூளைச்சலவை மூலம் பிற இன மதத்தை தழுவ பணிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது

குறிப்பாக தமிழ்ப்  பள்ளிகளில் கொண்டு வரும் புதிய திட்டங்கள் யாவும் தமிழர் பேரறிஞர்கள், தமிழர் கல்வியாளர்கள், தமிழர் தேசிய இயக்க சங்க அமைப்புகள் மற்றும் கல்வி சார்ந்த துறைகள் இணக்கத்துடனே அனுமதிக்க வேண்டும்

தமிழ் சீனப் பள்ளிகளுக்கு கேடு விளைவிக்கும் திட்டத்தை உடனே தடுத்து நிறுத்தாமல் பொதுமக்களை போராட வைத்திருக்கும் தமிழர் இனத்திற்கும் சேர்த்து இந்திய பிரதிநிதிகளாக இருக்கும் 4 அமைச்சர்கள் இருந்தும் பயனில்லை என வேதனையுடன் திரு மு. ஆனந்த தமிழன் குறிப்பிட்டார்

ஏற்கனவே மாணவர்களுக்கு பள்ளிப் பாடத்திட்டத்தில் கற்பித்தல் நேரமின்மை குறைவு, புத்தகப்பை சுமை, கூடுதல் வகுப்பு, பயிற்சி அழுத்தம் என பல சுமைகளை தாண்டி வரும் சூழலில், இன்னொரு சுமையாக அவசியமற்ற காட் எனப்படும் சாவி ஓவிய எழுத்தை தேசிய மொழி பாடத்திட்டத்தில் புகுத்த முற்படுவது ஏற்புடைய செயல் அல்ல என மகாத்மா காந்தி கலாசாலை முன்னாள் மாணவர் சங்க தலைவர் திரு பாலகிருசுணன் கருப்பையா பிள்ளை சாடினார்.

தேசிய மொழி பாடத்தை கற்று சிறந்த தேர்ச்சி பெற போராடிக்கொண்டிருக்கும் வேளையில் அந்த பாட நேரத்தில் சாவி சித்திர எழுத்தை புகுத்தினால் மாணவர்களின் தேசிய மொழி பாடத் திறன் பாதிப்படையக்கூடும். அதனால் மாணவர்கள் மலாய் மொழி கல்வியில் பின்தங்கியவர்களாக மாறக்கூடும்.

தமிழ்ப் பள்ளி கட்டமைப்புக்கு பாதகமாக எத்திட்டத்தை அமுல்படுத்தினாலும்,  நாட்டிலுள்ள அனைத்து தமிழ்ப் பள்ளி நிர்வாகம், ஆரியர்கள், மாணவர்களின்  பெற்றோர்கள் மற்றும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், முன்னாள் மாணவர் சங்கத்தினர், வாரிய குழுவினர், சமூக அமைப்பினர் என ஓரணியில் ஒன்றிணைந்து செயல்பட்டாலே எளிதில் அதை களையெடுக்க முடியும்

நாட்டின் அரசியல் சாசனத்தில் அவரவர் தாய் மொழி பள்ளிகளை காக்கும் உரிமை இருக்கிறது. அதை அவமதிக்கும் வகையில் பிற இன தாய் மொழி பள்ளியில் நஞ்சை விதைப்பதை கல்வி அமைச்சு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார் திரு க. பாலகிருசுணன்.