மலேசிய தமிழ்ச் சமயப் பேரவை ஏற்பாட்டில் தமிழ்ச் சமய மாநாடு – மலேசிய தமிழர்கள் அனைவரும் திரண்டு வருக..!

மலேசிய தமிழ்ச் சமயப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்ச் சமய மாநாடு வருகிற 15.09.2019 ஞாயிறு பத்துமலை திருமுருகன் திருக்கோயில் திருமண மண்டபத்தில் பிற்பகல் 1.00 மணிக்கு நடைபெறவுள்ளதால் மலேசிய தமிழர்கள் அனைவரும் கடல் அலையென திரண்டு வர அன்புடன் அழைக்கிறோம் என மலேசிய தமிழ்ச் சமயப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு ஆனந்த தமிழன் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழால், தமிழரால் மெய்யியல் கண்ட தமிழ்ச் சமயத்தை நமது முன்னோர்கள் வழிகாட்டிகள் யாவரும், உலக இயற்கையும் அறிவியலையும் உணர்ந்து வகுத்து எடுத்து அமைத்து வைத்த, உயர்ந்த வாழ்வியல் வழிமுறைகள், சிறந்த நெறிமுறைகள் மற்றும் தமிழர்களுக்கே உரிய உன்னத மரபுகளை கடைபிடித்து கற்பித்ததை, வழி வழியே காத்து அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்ல வேண்டிய தார்மீகக் கடமையில் மலேசிய தமிழ்ச் சமயப் பேரவை களமிறங்கி உள்ளது.

அறிவில் சிறந்த, இயற்கையில் இணைந்த, மெய்யறிவு பரந்த, இறைஞானம் நிறைந்த, தூய மாந்தநேயமும் ஆன்மநேயமும் அமைந்த தமிழ்ச் சமயத்தை காத்து, எங்கும் தமிழ்.. எதிலும் தமிழ்.. எல்லாவற்றிலும் தமிழ்.. எனும் தமிழில் வழிபாடு என்ற இயற்கை தொன்மையை பறைசாற்றுவதோடு தமிழ்ச் சமய மாநாடு அனைத்திற்கும் அறனாக நிற்கும்.

இம்மாநாட்டிற்கு சிறப்பு வருகையாக தமிழ் நாடு கோவை பேரூராதீனத்தின் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், மலேசிய முதன்மை தமிழியல் பேரறிஞர் தமிழ்திரு இர. திருச்செல்வனார் மற்றும் மலேசிய சைவ நற்பணிக் கழக தலைவர் திருமறை செம்மல் தர்மலிங்கனார் ஆகியோர் பேருரையுடன் தமிழர் கலாச்சார நிகழ்ச்சிகளும் மாநாட்டில் இடம்பெறும்.

மேலும் மலேசிய தமிழ்ச் சமயப் பேரவை ஏற்பாட்டில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு துணையாக உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம், தமிழ் நாடு கோவை பேரூராதீனம், மலேசிய சுந்தரர் சிவயோக ஆசிரமம், தமிழ் வாழ்வியல் இயக்கம், மலேசிய தமிழியல் ஆய்வுக் களம், மலேசிய சைவ நற்பணிக் கழகம், கோலாலம்பூர் இலக்கியக் கழகம், கம்பார் தமிழர்  விழிப்புணர்வு இயக்கம், தமிழ் வளர்ச்சி கழகம், கோலசிலாங்கூர் தமிழர் சங்கம், மலேசிய நாம் தமிழர் இயக்கம், தமிழ் நெறி வாழ்வியல் இயக்கம், மலேசிய புதிய தமிழ்த் தலைமுறை இயக்கம், மலேசிய தங்கத் தமிழர் இயக்கம், ஈப்போ வள்ளலார் அன்பு நிலையம், தமிழ்க் கல்வி ஒன்றியம், மகாத்மா காந்தி கலாசாலை முன்னாள் மாணவர் சங்கம் போன்ற இன்னும் பல தமிழர் தேசிய இயக்க சங்க கழக அமைப்புகள் பேராதரவு அளிப்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இலவசமாக நடைபெறவிருக்கும் தமிழ்ச் சமய மாநாட்டிற்கு தமிழர்கள் அனைவரும் பண்பாட்டு உடையில் படை திரண்டு வருக வருக என அன்புடன் அழைக்கிறோம் என்று மலேசிய தமிழ்ச் சமய பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு ஆனந்த தமிழன் கேட்டுக் கொண்டார்.

தமிழ்ச் சமயம்.. தமிழரின் மெய்யியல்..!

தமிழ்ச் சமய மீட்சி..!

தமிழர் இனத்தின் எழுச்சி..!

தொடர்புக்கு : 

திரு துரைமுருகன் – 0169263685, திரு ஆனந்த தமிழன் – +6590370527, திரு வீ. பாலமுருகன் – 0143099379