மலேசிய தமிழ்ச்சமயப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்ச்சமய மாநாடு 2019 மிக வெற்றிகரமாக நடந்தேறியது

கடந்த செப்டம்பர் 15, பத்துமலை திருமுருகன் திருக்கோவில் திருமண மண்டபத்தில் மலேசிய தமிழ்ச் சமயப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்ச்சமய மாநாடு 2019 மிகச் சிறப்பாக நடந்தேறியது

தமிழால் தமிழரால் மெய்யியல் கண்டு உலக இயற்கையையும் அறிவியலையும் உணர்ந்து நமது முன்னோர்கள் மற்றும் மூதாதையர்களாகிய அவர்கள் உருவாக்கி வழிகாட்டிய “தமிழ்ச் சமயத்தை” மீட்டெடுக்கும் வண்ணமாக இம்மாநாடு விளங்கியது.

தமிழ்ச்சமய மீட்சியே தமிழர் இனத்தின் எழுச்சியாக.. தமிழருக்கே உரிய அறிவில் சிறந்த, இயற்கையில் இணைந்த, மெய்யறிவு பரந்த, இறைஞானம் நிறைந்த, தூய மாந்தநேயமும் ஆன்மநேயமும் அமைந்து நமது அருளாளர்களால் காத்தும் பற்றியும் வந்த “தமிழ்ச்சமயத்தை”, அடுத்த இளைய தமிழர் தலைமுறையினர் நமக்கே உரிய மெய்யியலையும், மரபுகளையும், வாழ்வியல் கூறுகளையும், நெறிமுறைகள் மற்றும் வழிமுறைகளையும் கடைபிடித்துத் தமிழர் அடையாளத்துடன் வாழவே மலேசிய தமிழ்ச்சமயப் பேரவை, தமிழ்ச்சமய மாநாடு என்ற மீட்சிப் பாதையில் தனது பயணத்தைத் தொடக்கி இருக்கிறது.

இம்மாநாட்டு மண்டபத்தில் ஓம் சின்னத்தில் மிக அழகான கோலம் அமைத்து, மங்கள நாதசுவர இசையில் வருகையாளர் அனைவரும் இன்முகத்துடன் வரவேற்கப்பட்டு, பேரவை பொருப்பாளரான திரு துரைமுருகன் நிகழ்ச்சி நெறியாளராக வழி நடத்த, முறையே சிறப்பு வருகையாளர்களால் குத்து விளக்கு ஏற்றப்பட்டு, இறை வாழ்த்து, தேசிய கீதம், தமிழ் வாழ்த்து, கூட்டத் தொடக்கப் பிரார்த்தனை என நேர்த்தியாக தொடங்கியது. தமிழ் வாழ்வியல் இயக்கத்தின் தலைவரும் பேரவையின் ஆலோசகருமான தமிழ்திரு க. முருகையனார் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

அதன்பின், திருமுறை பாடலுக்கு அன்பர் பரஞ்சோதி அவர்கள் வழங்கிய நடனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதைத் தொடர்ந்து, மலேசிய சைவ நற்பணிக் கழகத் தலைவரும் பேரவை அறிஞர் குழு பொறுப்பாளரும் தமிழ்ச்சமய அறிஞருமான திருமுறைச் செம்மல் ந.தர்மலிங்கனார் அவர்கள் தமது தலைமையுரையில் தமிழ்ச்சமயத்தின் ஆழத்தையும் அவசியத்தையும் மற்றும் தமிழ்ச்சமயத்தின் உன்னத வரையறையையும் தெளிவுபடுத்தியதுடன் எதுவெல்லாம் நமக்கு ஒவ்வாதவை என்று துள்ளியமாக சுட்டிக்காட்டி சிந்திக்க வைத்தார்.

அதன்பிறகு, திருக்குறள் அறிஞர் தமிழ்த்திரு சி. ம. அண்ணாதுரை அவர்கள் உரையாற்றுகையில் தமிழ்ச்சமய சிறப்புகள், மேலைநாட்டு தமிழ்ச்சமயப் பார்வை மற்றும் மகத்துவம் பற்றிய விளக்கமளித்தார். தமிழ்ச்சமய அறிஞர்கள் தலைமைத்துவத்தை முன்னெடுக்க வேண்டும், வழி வழியாக வரும் தமிழ்ச்சமயத்தைத் தமிழர்கள் கற்றுக் கொண்டு பின்பற்ற வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.

அவரைத் தொடர்ந்து, மலேசிய திருநாட்டின் முதன்மை தமிழ் பேரறிஞரும் மலேசிய தமிழியல் ஆய்வுக் களத்தின் தலைவரும் தமிழ்ச்சமயப் பேரவை அறிஞர்களில் ஒருவருமாகிய தொல்காப்பியச் செம்மல் இர. திருச்செல்வனார் சிறப்புரையாற்றினார். தமிழருடைய தொன்மங்களையும் தமிழர்கள் இனி பின்பற்ற வேண்டிய மெய்யியல் கோட்பாடுகளையும் குலதொய்வ வழிபாடு நுட்பத்தையும் நமது தாய் மொழி சமய நுண்ணியத்தையும் எடுத்துரைத்தார். உலகின் மூத்த சமயமே தமிழ்ச்சமயம் தான் என நிறுவும் வகையில் மிகுந்த ஆய்வு விளக்கத்துடன் பேருரையாற்றினார்.

பின்னர், நாட்டார் வழிபாடு உறுமிமேள இசைப் பாடலில் பேரவை பொருப்பாளர் திரு.செல்வகுமரன் அவர்களின் கச்சேரி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது.

அடுத்த நிகழ்வாக, பத்துமலை பரந்துரை எனும் தமிழ்ச்சமய வரையறை தமிழ்த்திரு க. முருகையன் அவர்களால் வாசிக்கப்பட்டு, கோவை பேரூராதீனத்தின் நிகராளராக வந்திருந்த பூச்சோங் சுந்தரர் சிவயோக ஆசிரமத்தின் தலைவர் தெய்வத்தொண்டர் சிவபூசகர் இரா.சுந்தரனார் அவர்கள், தமிழியல் பேரறிஞர் இர. திருச்செல்வனார் மற்றும் சைவ இரத்தினம் திருமுறைச் செம்மல் ந.தர்மலிங்கனார் ஆகியோர் கையெழுத்திட்டு, பேரவை ஆலோசகர் உயர்திரு கலையரசன் கலியபெருமாள் அவர்கள் உடனிருக்க அனைவரின் முன் பறைசாற்றப்பட்டது.

அப்பரந்துரையில்
தமிழர்களின் சமயம் நோக்கிய அணுகுமுறைகள், சிந்தனைகள், நடைமுறைப் போக்குகள், வரலாற்றுக் கூறுகள் அனைத்தும் தமிழ்ச்சமயம் என்ற வரையறைக்குள் அமைந்துள்ளதாகவும், தமிழ்ச்சமயம் என்பது மூன்று முகாமையான கூறுகளின் அடிப்படையில் வரையறைக்கப்பட்டிருந்தது.

  1. தமிழால் ஆக்கம் பெற்றுள்ள அதன் வழிபாடுகளில் தமிழையே மூலமாகக் கொள்ளுதல்.
  2. தமிழர் மரபுக்கும் பண்பாட்டிற்கும் உள்ளடங்கிய நெறிமுறைகளைக் கடைப்பிடித்தல்.
  3. தமிழர் கண்ட மெய்யியலையும் அவற்றின் நூல்மரபுகளையும் மேற்கொள்ளுதல்.

தமிழர்கள் இவ்வரையறைக்குள் உட்பட்டுள்ள சமயங்களையும் அவற்றை ஒத்த மரபு நெறிகளையும் தமிழ்ச்சமயமாக ஏற்று இம்மாநாடு பரந்துரை செய்வதாக அறிவிக்கப்பட்டது.

இடைவேளைக்குப் பிறகு தமிழ்ச்சமய மாநாட்டின் 10 தீர்மானங்கள் ஆய்வர், தமிழ்திரு. க. முருகையனார் அவர்களால் வாசிக்கப்பட்டது

1. ஓம் என்பதை தமிழ்ச்சமய சின்னமாகவும் அடையாளமாகவும் ஏற்பது.

2. தமிழ்ச்சமய நடவடிக்கைகளில் தமிழ்மொழியை மட்டும் பயன்படுத்துவது.

3. அறப்பணி வாரியம் அமைத்து, வழிபாட்டுத் தளங்கள் மற்றும் பிற வழிபாடுகளிலும் தமிழ்மொழியை முதன்மைப்படுத்த ஆக்ககரமான வளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

4. தமிழ்ச்சமயப் பேரவையின் மூலமாக அதன் தமிழர் வழிபாடு தொடர்பான அனைத்து தமிழ்ச்சமய ஆதரவு இயக்கங்களையும் ஒன்றினைப்பது.

5. இந்த 4 தீர்மானங்களை நடைமுறைப் படுத்தி, தமிழ்ச்சமய நடவடிக்கைகள் அனைத்தும் தமிழில் நடைபெறவும் தொன்மை வழிபாடாக இருந்த தமிழர் வழிபாட்டு முறையை மீண்டும் நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்க கடமைப்படுவது

6. இதுவரை சில கோவில்களில் நடைபெற்று வந்த தமிழ் வழிபாட்டுக்கு உதவிகள் புரிந்து மேலும் சிறப்பாக நடைபெற எல்லா வகையான ஒத்துழைப்பையும் நல்குவது.

7. தமிழில் வழிபாடுகள் நடைபெறத் தடையாக அமைந்திருக்கும் கோவில்களை கண்டறிந்து, அவை எதிர்நோக்கும் சிக்கல்களைக் களைவது.

8. தமிழில் மந்திரங்கள், பூசை மற்றும் அனைத்து சடங்குகளையும் நடத்த தேவைப்படும் வழிபாடு தொடர்பான கல்வி, பட்டறை, பயிற்சி போன்றவற்றின் வழி இளைய தலைமுறையினரிடையே தமிழ்ச்சமயக் கல்வியை ஊக்குவிப்பது.

9. தமிழ்ச்சமயத்திற்குத் தேவைப்படும் பயிற்சிகளை நடத்த கல்விக்கூடம் அமைத்து இயங்குவது.

10. அரசாங்கத்தை வலியுறுத்தி சமய அடையாளத்தை “தமிழ்ச்சமயம்” (TAMILZISM) என எல்லா அரசு ஆவணங்களிலும் பதிக்க வலியுறுத்துவது

தொடர்ந்து ஆசிரியர் இளங்குமரனார் தலைமையில் மாணவர் குழுவினரின் பன்னிரு திருமுறை பாடல்கள் கச்சேரி வந்திருந்தவர்கள் அனைவரையும் கவர்ந்தது

அடுத்து, மலேசிய தமிழ்ச் சமயப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு மு.ஆனந்த தமிழன் அவர்களின் நன்றியுரையில் மாநாடு வெற்றி, சந்தித்த சவால் மற்றும் அடுத்தகட்ட இலக்கு பற்றி விவரித்ததுடன் இம்மாநாட்டிற்கு அனைத்து வகையிலும் அறனாக ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு நல்கிய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

இறுதியாக, உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகத்தின் ஒருங்கிணைப்பாளரும் மாநாட்டு ஏற்பாட்டுக் குழு பொறுப்பாளருமான திரு வீ.பாலமுருகன் அவர்கள் தமிழ்ச்சமய உறுதிமொழியை வாசிக்க வந்திருந்த அனைவரும் பின் தொடர்ந்து வாசித்து உறுதி ஏற்றனர்.

மாநாட்டுக்கு சிறப்பு வருகையளித்த அனைத்து அறிஞர்களுக்கும் நினைவு சின்னம் வழங்கியதுடன் வருகையளித்த பேராளர்கள் அனைவருக்கும் ஓம் சின்னமும் வழங்கப்பட்டது.

மேலும், மாநாட்டு மண்டபத்தில் அருளாளர்கள் மற்றும் தமிழ்க் கடவுள்களின் ஓவியப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்ததுடன் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என தமிழ்ச்சமய சிந்தனை அடையாளத்துடன் இருந்தது. வருகையளித்த சுமார் 500-க்கும் மேற்பட்ட பேராளர்கள் பண்பாட்டு உடையில் காட்சியளித்தனர்.

இம்மாநாடு வெற்றியடைய ஆதரவாக உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம், தமிழ் நாடு கோவை பேரூராதீனம், மலேசிய சுந்தரர் சிவயோக ஆசிரமம், தமிழ் வாழ்வியல் இயக்கம், மலேசிய தமிழியல் ஆய்வுக் களம், மலேசிய சைவ நற்பணிக் கழகம், குமரித் தமிழர் பேரவை, கம்பார் தமிழர் விழிப்புணர்வு இயக்கம், கோலாலம்பூர் இலக்கியக் கழகம், தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழ் காப்பகம், கோலசிலாங்கூர் தமிழர் சங்கம், தமிழ் நெறி வாழ்வியல் இயக்கம், மலேசிய புதிய தமிழ்த் தலைமுறை இயக்கம், மலேசிய தங்கத் தமிழர் இயக்கம், ஈப்போ வள்ளலார் அன்பு நிலையம், தமிழ்க் கல்வி ஒன்றியம், மகாத்மா காந்தி கலாசாலை முன்னாள் மாணவர் சங்கம் போன்ற இன்னும் பல தமிழர் தேசிய இயக்கங்களும் தனிநபர்களும் பேராதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.

மாநாட்டு ஏற்பாட்டுக் குழு ஒருங்கிணைப்பில் ம.தமிழ்ச்செல்வன், க.இராவணன், சு.ஈழமணி, ஆ.சத்தியமூர்த்தி, கு.முருகையா, சு.சங்கா், ஏ.முதல்வன், பெ.தனசேகரன், மு.மைத்ரேயர், செ.மாவேந்தன், சு.கணேசன், இரா.யுவராசன், இரா.நவீன், கி.நம்பி, செ.செம்மொழி, சு.சுமதி, ச.தமிழ்ச்செல்வம், ம.தினகரன், ப.கோபால், அ.முருகன், மு.தனசீலன், ஆதிரன் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.