மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் – இராகவன் கருப்பையா

முன்பொரு காலக்கட்டத்தில், அதாவது கைத் தொலைபேசியோ, எஸ்.எம்.எஸ். வசதியோ, வட்ஸப் புலனமோ இல்லாத தருணத்தில் தபால் வழியான தொடர்புதான் நமக்கு பிரதான தொடர்பு சாதனமாக இருந்தது.

கடிதங்கள், அழைப்பிதழ்கள், வாழ்த்துக் கார்டுகள் முதலியவற்றோடு அனாமதேய அறிக்கைகளும் அவ்வப்போது வரத்தான் செய்யும்.

அவற்றுள், நம்மை பெரும் பீதிக்குள்ளாக்கும் ஒருவகை அறிக்கையும் அடிக்கடி வருவது வழக்கம்.

இந்தியாவில் எதாவது ஒரு கோயிலை குறிப்பிட்டு, அங்கு திடீரென ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது என்றும், அந்த சம்பவத்தை சித்தரிக்கும் இந்த அறிக்கையை நகல் செய்து உடனே 30 பேருக்கு அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவு இருக்கும்.

உடனே அவ்வாறு செய்த ஒருவருக்கு அதிர்ஷ்டக் குலுக்கில் இலட்சம் வெள்ளி கிடைத்துள்ளது என்றும் அதனை உதாசினப்டுத்திய வேரொருவருடைய மகன் பாம்புத் தீண்டி மாண்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

அதிர்ஷ்டக் குலுக்கு ஆசை இருக்கிறதோ இல்லையோ பாம்புத் தீண்டல் பயத்திற்கு அடிபணிந்து பெரும்பாலோர் அவ்வாரே செய்துவிடுவார்கள்.

இதனையெல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கும்போது  வேடிக்கையாக உள்ள போதிலும் அதுபோன்ற நிகழ்வுகள் இன்னும் நம்மிடையே உள்ளது என்பதுதான் வேதனையான விசயம்.

ஆனால் இப்போது நகல் செய்வதற்கான வேலையோ தபால் தலை வாங்கும் செலவோ இல்லை. வட்ஸப் புலனத்தில் ஒரே க்ளிக்தான்! அனைத்தும் இனாம்.

“கடவுள் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார், நீங்கள் துன்பப்பட்டுக் கொண்டிருப்பது கடவுளுக்குத் தெரிகிறது. எனவே இந்தத் தொடரை 9 பேருக்கு உடனே அனுப்புங்கள். அடுத்த 12 மணி நேரத்திற்குள் உங்கள் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்துவிடும்.”

“இந்த கோயில் மிகவும் சக்திவாய்ந்தது. இந்த படத்தை 20 பேருக்கு அனுப்பினால் நாளை விடியும் போது உங்களுக்கு பணம் வந்து சேரும். இந்தத் தொடரை துண்டித்துவிடாதீர்கள், பிறகு நீங்கள் கஷ்டங்களை எதிர்நோக்கக் கூடும்.”

இதுபோன்ற பிரச்சாரங்கள் இப்போதெல்லாம் புலனத்தில் சற்று அதிகமாகவே வரத்தொடங்கிவிட்டன.

இதனை முட்டாள்தனம் என்பதா மூடத்தனம் எனக் கருதுவதா என்று தெரியவில்லை.

பாமர மக்கள் மட்டுமின்றி சில வேளைகளில் உயர் கல்வி பயின்றவர்களும் கூட, நமக்கு ஏன் வம்பு என்று இத்தகைய மூட நம்பிக்கைக்குள் முடங்கிக்கிடப்பது நமக்கு ஆச்சரியமாகவே உள்ளது.

கடவுளுக்கு விளம்பரம் தேவையில்லை. இந்த பிரபஞ்சத்தில் தெய்வ பக்தி உள்ள அனைவருக்கும் கடவுள் அருள் உண்டு என்பதை ஏற்றுக்கொள்பவர்கள் ஏற்றுக்கொள்ளலலாம் அல்லது தங்களின் பகுத்தறிவுக்கு விட்டு விடலாம், அனாவசிய பிரச்சாரமோ பயமுறுத்தலோ தேவையில்லை.

கோயில் படத்தை 20 பேருக்கு அனுப்பிவிட்டு வேலையையும் ராஜினாமா செய்துவிட்டு உழைக்காமல் வீட்டில் வெறுமனே அமர்ந்திருந்தால் விடிந்தவுடன் பணம் வந்திடுமா?

இருப்பினும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும், நமக்கெல்லாம் அப்பாற்ப்ட்ட நிலையில் நம்மை இயக்குவது ஏதோ ஒரு சக்தி என்று நம்புவர்களும், அவரவர் விழிப்புணர்ச்சிக்கு ஏற்ற வகையில் ஒரு வகையான பலவீனத்தை கொண்டுள்ளனர். இது ஒரு வகையான பயமாகும்.

தன்னம்பிக்கை குறைந்தால் மூட நம்பிக்கை கூடும். இதை முழுமையாக அகற்ற இயலாது, நமது சமூகம் அறிவும் ஆற்றலும் கொண்ட சமூகமாக உருவாக வேண்டுமானால், நம்மிடையே இருக்கும் தன்னம்பிக்கையை ஆழப்படுத்த வேண்டும்.