இராகவன் கருப்பையா | கடந்த ஆண்டு மத்தியில் தமிழ்நாட்டின் தொலைக்காட்சி நிலையம் ஒன்று நடத்திய ‘பிக் போஸ் – 3’ எனும் நிகழ்ச்சி மலேசிய இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
அதற்கு முன் நடைபெற்ற 2 ‘பிக் போஸ்’ நிகழ்ச்சிகளையும் விட, இந்த 3-வது தொடர் மிகவும் பிரபலமானதற்கு 2 காரணங்களை நாம் தாராளமாகக் குறிப்பிடலாம்.
முதலாவது, நம் நாட்டுக் கலைஞர் முகேன் ராவ் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டது, 2-வது காரணம் அவர் அதில் வெற்றிபெற்றது.
இந்நிலையில், கடந்த 18-ம் தேதி நாடு முழுவதும் அமலாக்கம் கண்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையைத் தொடர்ந்து, தெரிந்தோ தெரியாமலோ நாம் எல்லாருமே தத்தம் இல்லங்களில் ‘பிக் போஸ்’ பங்கேற்பாளர்களாகியுள்ளோம் என்பதுதான் உண்மை.
நம் அனைவருக்குமே இது ஒரு புதுமையான அனுபவம் என்ற போதிலும், உலகில் மொத்தம் 168 நாடுகளை ஒருசேர உலுக்கியுள்ள கோவிட்-19 எனும் கொடூர நோய் காட்டுத் தீ போல் பரவாமல் கட்டுப்படுத்துவதற்குப் ‘பிக் போஸ்’ பாணியிலான, வீட்டைவிட்டு வெளியாகக்கூடாது என்றக் கட்டுப்பாடுதான் ஒரே வழி.
இந்தியா, ஜோர்டான், ஈராக், சவூதி அரேபியா, இலங்கை, கிரீஸ் முதலிய பல நாடுகள் முழு ஊரடங்குச் சட்டத்தை விதித்துள்ளதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.
நோய் பரவாமல் கட்டுப்படுத்துவதே இதன் பிரதான நோக்கம் என்ற போதிலும், இந்நடவடிக்கையின் பின்னணியில் பல்வேறு நல்ல விசயங்கள் அடங்கிக் கிடப்பதையும் நாம் மறுக்க இயலாது.
அல்லும் பகலும் அலுவலகம், வேலை என அரக்கப் பறக்கத் திரிந்த குடும்பத் தலைவர்களை, வீட்டுக்குள்ளேயே முடக்கிவிட்ட இந்தச் சூழல், குடும்ப உறுப்பினர்களிடையே நல்லுறவுகள் மேலும் வலுப்பெற வகை செய்யும் என்பதில் ஐயமில்லை.
நிறைய புத்தகங்களைப் படிப்பதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்றே சொல்ல வேண்டும். வீட்டில் புத்தகங்கள் இல்லாவிட்டாலும், இணையத்தில் பல மொழிகளில் ஆயிரக்கணக்கானப் பத்தகங்கள் இருப்பது நமக்குத் தெரிந்த ஒன்றுதான்.
சிகரெட் பிடிப்போரும் மது பழக்கத்திற்கு அடிமையாக உள்ளவர்களும் நினைத்த மாத்திரத்தில் வீட்டைவிட்டு வெளியேற இயலாததால், இதோடு அத்தகையத் தீயப் பழக்கங்களை விட்டொழிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
உடற்பயிற்சி செய்வதற்கு நேரமில்லை என இதுநாள் வரையில் சாக்கு போக்கு சொல்லித் திரிந்தவர்களும் கூட, இனி மிதமான பயிற்சிகளை வீட்டிற்குள்ளேயே மேற்கொள்ளலாம்.
இதற்கிடையே வீட்டிலிருந்தே வேலை செய்யும் நடைமுறையை அமல்படுத்தியுள்ள பல தனியார் நிறுவனங்கள், இத்தகையச் செயல்பாட்டைப் பிறகு நிரந்தரமாகவே மேற்கொள்ளக்கூடும்.
ஏனென்றால், இந்த நடைமுறை முதலாளி மற்றும் ஊழியர் ஆகிய இரு தரப்பினருக்குமே ‘வின் வின் சிட்டுவேஷன்’ எனப்படும் சாதகமானச் சூழலை ஏற்படுத்தியுள்ளது என்று நம்பப்படுகிறது.
ஊழியர்களுக்குப் போக்குவரத்து செலவு மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தியுள்ளது. அதேவேளை, முதலாளிகளுக்கு அலுவலக இட ஒதுக்கீடு, தளவாடங்கள், நீர், மின்சாரம் போன்றவற்றில் மிச்சம்.
எது எப்படியாயினும், அரசாங்கம் விதித்துள்ள இந்த 4 வாரக் கால நடமாட்ட கட்டுப்பாட்டை முறையாக பின்பற்றி, நோய் பரவாமல் இருக்க நமது பங்கை செம்மையாக ஆற்றினால், ‘பிக் போஸ்’ முகேனுக்குக் கிடைத்த வெற்றியைப் போல நாமும் பெருமைக்கொள்ளளாம்.
அது நமது கடமையும் கூட.