RM250 பில்லியன் ஊக்கத் திட்டம்: அனைத்து மலேசியர்களுக்கும் நியாயமான விநியோகமாக இருக்கிறதா?

டேவிட் தாஸ் | நாம் அனைவரும் மலேசியர்கள். மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், டாயாக்ஸ், கடாசன்கள், பிடாயு, மெலனாவ், பஜாவ், யூரேசியர்கள், ஒராங் அஸ்லி மற்றும் பலர் உள்ளோம். நாம் 137 மொழிகள் பேசுகிறோம். நாம் முஸ்லிம்கள், புத்தர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பஹாய்ஸ் மற்றும் பலர் உள்ளோம். நம்மில் சிலர் சபா மற்றும் சரவாகிலும் மீதமுள்ளவர்கள் தீபகற்ப மலேசியாவில் வாழ்கிறோம்.

துரதிர்ஷ்டவசமாக, பல ஆண்டுகளாக நாம் ஒரு பிளவுபட்ட சமூகமாக மாறிவிட்டோம். நமது அரசியலின் விளைவாக நாம் பிரிக்கப்பட்டுள்ளோம்.

மலாய்க்காரர்கள் முக்கியமாக அரசு சேவை, ஆயுதப்படைகள் மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் (ஜி.எல்.சி) ஆகியவற்றில் பணியாற்றுகிறார்கள். சீன மற்றும் இந்தியர்களில் பெரும்பான்மையானவர்கள் தனியார் துறையில் உள்ளனர். சபா மற்றும் சரவாக் பழங்குடி மக்கள் அரசு சிவில் சேவையிலும் தனியார் துறையிலும் பணியாற்றுகிறார்கள்.

பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது, அரசாங்கக் கொள்கைகள் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்றும், நிதி உதவிகள் இனம் சார்ந்ததாக இல்லாமல் தேவையின் அடிப்படையில் இருக்கும் என்றும் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இருந்தது. துரதிர்ஷ்டவசமாக, எதிர்க்கட்சி, இனம் மற்றும் மத பிரச்சினைகளைத் தூண்டிவிட்டு அரசாங்கத்தை எதிர்த்து ஒரு மோசமான பிரச்சாரத்தை மேற்கொண்டது.

இறுதியில், அவர்கள் வெற்றி பெற்றனர். ஒரு ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்க அப்போதைய பிரதமரின் முயற்சியின் காரணமாக அவை வெற்றி பெற்றன. பிரதமர் பதவியை அவர் ராஜினாமா செய்து பாரிசான், பாஸ், பெர்சத்து மற்றும் சில பி.கே.ஆர். உறுப்பினர்கள் அடங்கிய புதிய கூட்டணி தோன்றுவதற்கான கதவைத் அவர் திறந்து விட்டார்.

ஹராப்பான் எம்.பி.க்கள் அதிர்ச்சியும், குழப்பமும், நிறைந்து என்ன செய்ய வேண்டும் என்று நிச்சயமற்றவர்களாக நின்றனர். நம்முடைய வரலாற்றில் மிகக் குறுகிய கால அரசாங்கம் அவர்களுடையது.

எனவே, அப்போது ஹராப்பான் அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராக இருந்த முகிதீன் யாசின் இன்று பிரதமராகி தன் தலைமையில் இப்போது ஒரு புதிய அரசாங்கம் உள்ளது.

இப்போது நமக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவலும் உள்ளது. வைரஸ் நம் சமூகம் முழுவதும் பரவுகிறது. நாம் என்ன இனம் அல்லது மதம் என்பது பற்றி அது கவலைப்படவில்லை.

வைரஸ் பரவுவதை மெதுவாக்க அரசாங்கம் ஒரு நடமாட்டக் கட்டுபாட்டை ஏற்படுத்தியுள்ளது. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஒழுங்கின் விதிகளை மக்கள் கடைபிடிப்பதை உறுதி செய்வதற்காக இராணுவமும் காவல்துறையும் நம் தெருக்களில் ரோந்து வருகின்றன.

இது ஒரு வெளிப்புற எதிரிக்கு எதிரான போராக இருந்தால், ஆயுதங்களுக்கான அழைப்பு இருக்கும். தேசத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு கூட்டு முயற்சியில் அனைத்து மலேசியர்களும் ஒன்று சேருவார்கள். இரண்டாம் உலகப் போரின்போதும், கம்யூனிஸ்ட் கிளர்ச்சியிலும், மோதலின் போதும் அவர்கள் அப்படித்தானே செய்தார்கள்.

கொரோனா வைரஸ் ஒரு கண்ணுக்கு தெரியாத படை. அது நம் சமூகத்தில் ஊடுருவியுள்ளது. இது ஒரு போர். இந்த கொடிய வைரஸைத் தோற்கடிக்க ஒரு பொதுவான முயற்சியில் அனைத்து மலேசியர்களும் ஒன்று சேர வேண்டும் என்ற அழைப்பு இருக்க வேண்டும்.

RM250 பில்லியன் ஊக்கத் திட்டத்தை அறிவித்த பிரதமர் தனது உரையில், அவர் மக்களால் வாக்களிக்கப்பட்ட அரசாங்கம் அல்ல என்ற உண்மையை ஒப்புக் கொண்டார்.

ஆயினும்கூட, அவர் அனைத்து மலேசியர்களுக்கும் பிரதமராக இருப்பார் என்று அறிவித்தார்.

அந்த ஒருங்கிணைப்பின் முதல் சோதனை, அவர் அறிவித்துள்ள அந்த தூண்டுதல் தொகுப்பாக இருக்கும். ஆனால், இனம், மதம் பார்க்காமல், அனைத்து மலேசியர்களுக்கும், இது ஒரு நியாயமான விநியோகமாக இருக்கிறதா?

இது ஒரு பன்முக உத்தி. இது ஏழைகளை கவனிக்க வேண்டும். வைரஸின் அபாயத்திற்கு ஆளாகும் அத்தியாவசிய சேவைகளில் இருப்பவர்களை இது கவனிக்க வேண்டும். நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு காரணமாக வேலைகள் அல்லது வருமானத்தை இழக்கும் அனைவரையும் இது கவனிக்க வேண்டும்.

இந்த காலகட்டத்தில் தொற்றுநோய் காரணமாக மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ள வணிகங்களை அது கவனிக்க வேண்டும். அவர்கள் பல தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி இருப்பார்கள். நாம் அவர்களை ஆதரிக்க வேண்டும். இந்த நெருக்கடி முடிந்ததும் நம்மை உயர்த்தி முன்னேறச் செய்ய நமக்கு இவர்களைப் போன்ற வணிகங்கள் தேவைப்படும்.

திட்டம் இந்த நோக்கங்களை அடைகிறதா?

நிதி உதவி மற்றும் உணவு விநியோகம் தேவைப்படும் அனைவருக்கும் எட்டாது என்ற அச்சமும் பதட்டமும் உள்ளன. நெருக்கடிக்கு முன்பே, நகர்ப்புறங்களில் உள்ள பல குழந்தைகள் ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பட்டிலும் கூட ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக நமக்குத் தெரிவிக்கப்பட்டது. வறுமை விகிதம் 15 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாக நமக்குத் தெரிவிக்கப்பட்டது. நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவினால் பல தொழில்கள் மூடப்பட்டதால், பலர் வேலைகளை இழக்கக்கூடும் மற்றும் பல தொழிலாளர்கள் பணம் சம்பாதிக்க மாட்டார்கள். அனைவருக்கும் உணவு மற்றும் நிதி உதவி கிடைக்குமா?

நம்மிடம் 5 மில்லியன் வெளிநாட்டு தொழிலாளர்கள் உள்ளனர். நமக்கு அவர்கள் தேவை என்பதால் தான் அவர்கள் இங்கே இருக்கிறார்கள். அவர்களை யார் கவனிப்பார்கள்? அவர்களின் முதலாளிகள் அவர்களைக் கவனிப்பார்களா? நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுக்குப் பிறகு இந்த தொழிலாளர்கள் நமக்குத் தேவைப்படுவார்கள்.

இந்த நாட்டின் ஏழைகள் சிறிய நெரிசலான வீடுகளில் வாழ்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரை கூடல் இடைவெளி (social distancing) என்பது சாத்தியமில்லை. அவர்களைப் பொறுத்தவரை, சுய தனிமைப்படுத்துதல் என்பதும் சாத்தியமில்லை. அடர்த்தியான வாழ்க்கை மற்றும் நெருங்கிய தொடர்பு காரணமாக வயதானவர்கள் மற்றும் அடிப்படை சுகாதார பிரச்சனை உள்ளவர்கள் தொற்று அபாயத்துடன் வாழ வேண்டும். அவர்களைப் பொறுத்தவரை, உணவு பொருள்களை போதிய அளவு வாங்கி இருப்பு வைத்துக்கொள்வது என்பது சாத்தியமில்லை. கைத்தூய்மி (hand sanitizers) கிருமிநாசினி பயன்பாடும் இல்லை.

ரோட்டரி, லயன்ஸ், கிவானிஸ் போன்ற தொண்டு நிறுவனங்கள் முதியவர்கள், அனாதைகள், பலவீனமானவர்கள் மற்றும் ஊனமுற்றோர் உள்ளிட்ட பல ஏழைகளை பல தசாப்தங்களாக கவனித்து வருகின்றனர். ஆனால் அந்நிறுவனங்கள் தங்களின் நன்கொடைகள் அல்லது பங்களிப்புகளை இனி அரசாங்க மையங்களில் விட்டுவிட வேண்டும் என்ற பரிந்துரை இப்போது உள்ளது. வைரஸ் பரவும் அபாயத்தை கட்டுப்படுத்த உதவும் என்று இதற்கு காரணம் கொடுக்கப்பட்டது.

அது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இந்த அமைப்புகளுக்கு அவற்றின் பணிகள் உள்ளன. அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி அவர்கள் தங்கள் வேலையைச் செய்ய அனுமதிக்க வேண்டும்.

நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும். தூண்டுதல் திட்டம் விவாதிக்கப்பட வேண்டும். இத்திட்டம் அனைத்து எம்.பி.க்களாலும் ஆராயப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த திட்டம் அனைத்து தரப்பினருக்கும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அமெரிக்காவில் குடியரசுக் Republicans கட்சியினரும் ஜனநாயகக் Democrats கட்சியினரும் தங்கள் 2 டிரில்லியன் அமெரிக்க டாலர் (RM8.6 டிரில்லியன்) தூண்டுதல் திட்டத்திற்கு ஒப்புக்கொண்டனர்.

கேட்கப்பட்டு பதிலளிக்க வேண்டிய பல கேள்விகள் உள்ளன. பணம் எங்கிருந்து வரும்? ஏழைகளுக்கு உதவி போதுமானதா? சரியான வணிகங்கள் ஆதரிக்கப்படுகின்றனவா? ஆதரிக்கப்பட வேண்டிய வணிகங்களின் நம்பகத்தன்மையை யார் தீர்மானிக்கிறார்கள்? யாருக்கு ஆதரவு கிடைக்கிறது என்பதை தீர்மானிக்க என்ன அளவுகோல்களை பின்பற்ற வேண்டும்? வங்கிகளும் பிற நிதி நிறுவனங்களும் தங்கள் பங்கை வகிக்கின்றனவா?

ஏப்ரல் 14க்குப் பிறகு என்ன நடக்கும்? நடமாட்டக் கட்டுப்பாட்டை எவ்வளவு காலம் நீடிக்க முடியும்? தொற்றுநோயின் நிலை, நடமாட்டக் கட்டுப்பாட்டை தீர்மானிக்கிறதா அல்லது நாம் சேர்த்துவைக்கும் பணத்தின் அளவை தீர்மானிக்கிறதா?

இவை பதிலளிக்கக்கூடிய எளிதான கேள்விகள் அல்ல. எனவே பாராளுமன்றத்தைக் கூட்டி பிரச்சினையை விவாதிப்பதே விவேகத்தனமாகும். நாடாளுமன்றத்தின் இந்த அமர்வின் போது நம்பிக்கையில்லா தீர்மாணம் தாக்கல் செய்யப்படாது என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் உறுதியளிக்க வேண்டும். தொற்றுநோயை சமாளிக்க தேசத்திற்கு உதவுவதில் அனைவரும் தங்கள் ஆற்றலையும் கவனத்தையும் செலுத்த வேண்டும்.

  • டேவிட் தாஸ் ஒரு வழக்கறிஞர், மலேசியாகினி சந்தாதாரர் மற்றும் கருத்துரைப்பவர்.

இங்கே வெளிப்படுத்தப்பட்ட கருத்துகள் படைப்பாளர் / பங்களிப்பாளரின் கருத்துக்கள் மற்றும் அவை மலேசியாகினியின் கருத்துக்களைக் குறிக்கவில்லை.