‘சார்வரி’யைத் தமிழ் ஆண்டு பிறப்பாக அறிவிக்கும் மலேசிய இந்து சங்கத்திற்கும், மலேசிய இந்து தர்ம மாமன்றத்திற்கும் மலேசிய குருக்கள் சங்கத்திற்கும் மலேசியாவைச் சார்ந்த 14 தமிழர் தேசிய அமைப்புகள் கண்டனம் தெரிவிக்கின்றன.
வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது போல, மலேசியாவில் மதம் சார்ந்தவர்கள் மீண்டும் தமிழர் வாழ்வியலில் மூக்கை நுழைத்துக் குழப்பம் ஏற்படுத்தத் தொடங்கிவிட்டனர். இவ்வாண்டு மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு சித்திரை முதல் நாள் என்று மடைமாற்றத் தொடங்கிவிட்டனர்.
மலேசிய இந்து சங்கம், மலேசிய குருக்கள் சங்கம், மலேசிய இந்து தர்ம மாமன்றம் போன்ற இயக்கத்தினர் சித்திரைப் புத்தாண்டை மீண்டும் தமிழ் ஆண்டு பிறப்பு என முழங்கத் தொடங்கிவிட்டனர். முதலில் இந்தச் சங்கங்களின் பணிதான் என்ன என்பதை இவர்கள் அறிய முன்வர வேண்டும். இந்து மதம் சார்ந்த பற்றியங்களில் மட்டுமே இவர்கள் முடிவெடுக்கவும் அறிக்கைகளை வெளியிடவும் உரிமை உள்ளது என்பதை இவர்கள் மறந்துவிட்டனர் போலும். அப்படி, நினைவில்லையெனில் அவர்களின் அரசாங்கப் பதிவு ஏடுகளை ஒருமுறை பார்வையிடவும் வேண்டும்.
எடுத்துக்காட்டாக, இந்நாட்டில் மலாய்க்காரர்களுக்கு மொழி, இனம், வாழ்வியல், வரலாறு போன்றவற்றைப் பற்றி முடிவெடுக்க மலாய் தேசிய இயக்கங்கள் இயங்குகின்றன. இசுலாம் மதம் சார்ந்த பற்றியங்களில் முடிவெடுக்க தேசிய இசுலாம் துறைகளும் இயங்குகின்றன. இசுலாம் மதத்துறையினர் எவரும் மலாய்க்காரர்களின் மொழி, இனம் சார்ந்த முடிவுகளில் தலையிடுவதில்லை. அவர்களிடமிருந்து இந்தத் தெளிவை இந்து மத இயக்கங்கள் அறிந்துகொள்வது மிகவும் தேவையானது. எனவே, இனத்தைச் சார்ந்த மொழி, வாழ்வியல், மரபு நெறிகள், புத்தாண்டில் தலையிடுவதை இவர்கள் தவிர்க்க வேண்டும்.
சான்றாக, சில ஆண்டுகளுக்கு முன் சற்றே தெளிவு பெற்றிருந்த இவர்கள், 14 ஏப்பிரலை இந்து புத்தாண்டு என்றும் சித்திரைப் புத்தாண்டு என்றும் அறிவித்து அறிக்கைகள் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. மலேசிய இந்து சங்கத் தேசியத் தலைவர் திரு.மோகன் சாண் இதனைக் குறிப்பிட்டது நாளிதழ் செய்தியாகவும் ஊடகங்களிலும் வெளிவந்ததை மறுக்கவும் மறக்கவும் முடியாது. தாங்கள் வல்லமை பெறாத துறைகளில், தங்களுக்குத் தொடர்பில்லாதக் காரியத்தில் தலையிடுவதனால்தான், முதலில் தமிழ்ப்புத்தாண்டு என்றும், பிறகு சித்திரைப் புத்தாண்டு என்றும், இந்து புத்தாண்டு என்றும் இல்லை! இல்லை! எல்லாம் ஒன்றுதான்; ஆனால் மலையாளிகளுக்கும் தெலுங்கருக்கும் வடவருக்கும் மற்றவருக்கும் வேறு புத்தாண்டு என்றும் குழப்பி! குழப்பி! கூவி! கூவி! செல்லும் நிலை ஏற்படுகின்றது.
இந்து மதம் சார்ந்த புத்தாண்டு என்று சித்திரை முதல் நாளை இவர்கள் அறிவிக்கும் போது மத இயக்கத்தினர் முடிவிற்கு எந்தத் தமிழ் இயக்கமும் எதிர்ப்பைத் தெரிவித்ததே இல்லை என்பதையும் இவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் இவர்கள் முடிவெடுப்பதனாலே இவ்வகையான சிக்கல் உருவெடுக்கின்றன.
ஒரு மத இயக்கம்தான் தமிழுக்கும் தமிழருக்கும் தலைமையா? வழிகாட்டியா? அப்படியென்றால் கிறித்துவம், இசுலாம், பௌத்தம் அல்லது பிற மதங்களில் உள்ள முடிவுகளை இந்து மதத்தில் உள்ள தமிழரோ மலையாளியோ தெலுங்கரோ கன்னடரோ பின்பற்றி ஏற்க இந்து மதத் தலைவர்கள் ஒப்புதல் அளிப்பார்களா? கண்டிப்பாக முட்டுக்கொடுப்பார்கள். அதே வேளையில், தெலுங்கர், மலையாளி, கன்னடர் ஆகியோரின் மொழி, வாழ்வியல் நடைமுறைகளுக்கு இந்து மத சங்கங்கள் வழிகாட்டி முடிவுகளை எடுத்தது உண்டா, என்ற கேள்விகளுக்கு விடை கூற இயலுமா?
தமிழர்கள் கேட்பாரற்றவர்கள், அவர்களுக்குத் தலைமையாக இருந்து எதிர்த்துக் கேட்க யாருமில்லை என்ற தவறான எண்ணத்தோடு இவர்கள் புரியும் இத்தகைய செயல்பாடுகள் தமிழ் இயக்கத்தினர் உணர்வையும் உணர்ச்சியையும் சீண்டுவதாகவே அமைகின்றது. இந்நாட்டில் தமிழருக்கும் தமிழுக்கும் வழிகாட்ட அமைப்புகள் இல்லாதது போல, இவர்கள் முந்தியடித்துக் கொண்டு இம்மாதிரியான காரியங்களில் தமிழருக்கு எதிராக செயல்படுவது பெரும் கண்டனத்துக்குறியதாகும்.
மேலும், இந்நாட்டிலே தமிழ்ப் புத்தாண்டைப் பற்றி முடிவெடுக்க தமிழருக்கு மட்டுமே உரிமை உண்டு. தமிழ்ப்புத்தாண்டு என்பது இனம் சார்ந்த முடிவு என்று பல பரப்புரைகள் மாநாடுகள் நடத்தப்பட்டிருந்தாலும்; தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பதே இவர்களின் இந்நடவடிக்கை. இவர்களின் இந்நடவடிக்கையை ஒட்டி தமிழறிஞர்களும் தமிழியக்கத்தினரும் சான்றுகளுடன் முறையாகக் கேள்வி கேட்டாலும், முறையிட்டாலும் அதற்குத் தக்க மறுமொழியும் இவர்களிடமிருந்து கிடைப்பதும் இல்லை. தமிழருக்கான தமிழ்ப்புத்தாண்டைப் பற்றித் தமிழ்த்தலைவர்கள் முடிவெடுத்தும் அறிவித்தும் தொடர்ந்து வலியுறுத்தியும் வருகின்றனர். எனவே, மதம் சார்ந்த சங்கத்தினருக்கும், மதம் சார்ந்த தலைவர்களுக்கும் அங்கு எந்தச் செயற்பாடும் இல்லை; யாரும் ஏங்கி வந்து கேட்கவும் இல்லை என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்கிறோம்.
மதம் என்ற பெயரில் தமிழர்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து அவர்களைத் தமிழ், தமிழினம் என்று சிந்திக்கவிடாமல் செய்வதுதான் இவர்களின் நோக்கமோ என்று எண்ணவும் தோன்றுகிறது. டத்தோ மோகன் சாண் தன்னைத் தமிழர்களின் தலைமையாகவும், மலேசிய இந்து சங்கம் தமிழர்களின் நிகராளியாக தன்னைத் தானே முடிசூட்டிக் கொள்வதையும் இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று மலேசியத் தமிழர் தேசிய அமைப்புகள் கேட்டுக்கொள்கின்றன. அதிகமான தமிழர்கள் உறுப்பினர்களாக இருப்பதால் இந்து சங்கம் தமிழர்களுக்கான அமைப்பாகவோ, தலைமையாகவோ ஆக முடியாது, அது ஒரு மத நலனிற்கான சங்கம் மட்டுமே.
ஆகவே, இனி சித்திரை முதல் நாள் தமிழருக்கான தமிழ்ப்புத்தாண்டு என்று மலேசிய இந்து சங்கத்தினர், மலேசிய இந்து தர்ம மாமன்றத்தினர், மலேசிய குருக்கள் சங்கத்தினர் போன்றோர் தவறாக அறிவிக்கவும் முடிவெடுக்கவும் கூடாது என்று மலேசியத் தமிழர் தேசிய அமைப்புகள் இக்கண்டன அறிக்கை வழி தெரிவித்துக்கொள்கின்றன.
அறிக்கை வெளியிட்ட 14 மலேசியத் தமிழர் தேசிய அமைப்புகள் :-
- கம்பார் தமிழர் விழிப்புணர்வு இயக்கம் பேரா.
- தமிழர் ஒற்றுமை இயக்கம் சிலாங்கூர் கோலாலம்பூர்.
- மலேசியப் புதிய தமிழ் தலைமுறை இயக்கம்.
- மலேசியத் தமிழர் எழுச்சி இயக்கம்.
- மலேசியத் தமிழர் செயல் குழு இயக்கம்.
- தமிழ் வேங்கை இயக்கம்.
- உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம்
- மலேசியத் தமிழ்ச் சமயப் பேரவை
- மலேசியச் செந்தமிழர் பேரவை
- தமிழ் வாழ்வியல் இயக்கம் பாரிட் புந்தார்,பேரா
- தமிழியல் ஆய்வுக் களம், மலேசியா
- குறிஞ்சித்திட்டுத் தமிழ்க்கழகம், ஈப்போ, பேரா
- தமிழ் வாழ்வியல் இயக்கம், பினாங்கு
- மலேசிய சைவ நற்பணிக் கழகம்
First of all who give authorities to this NGO to make decisions among tamil makkals religious and cultures..