நடமாட்டக் கட்டுப்பாட்டின் ‘நொன் ஃபேஸ்-டு-ஃபேஸ்’ காப்புறுதி

இராகவன் கருப்பையா– கோவிட்-19 தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தின் முக்கிய அம்சமான நடமாட்டக் கட்டுப்பாடு நம் நாட்டில் தற்போது 3ஆம் கட்டத்தில் உள்ளது.

எனினும் ஆயுள் காப்பீட்டுத்துறை மட்டும் தனக்கே உரிய பாணியில் தொடர்ந்து நடைபோடுகிறது.

காப்புறுதி விற்பனை என்பது, சுருங்கக்கூறின், முகவர்கள் வாடிக்கையாளர்களை அணுகி அவர்களுக்குத் தெளிவான விளக்கமளித்து அவர்களுடைய தேவைகளுக்கு ஏற்ப ஒரு காப்பீடை வடிவமைத்து அதற்கான ஒப்பந்தத்தை பதிவு செய்வதுதான்.

ஆனால் தற்போது இத்தகைய நடைமுறை முற்றிலும் சாத்தியமில்லாத ஒன்று.

இதனைக் கருத்தில் கொண்டு, ‘நொன் ஃபேஸ்-டு-ஃபேஸ்’ எனும் ஒரு புதிய நடைமுறையை பல ஆயுள் காப்புறுதி நிறுவனங்கள் தாங்களுடைய முகவர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளன. அதாவது வாடிக்கையாளர்களை நேருக்கு நேர் சந்திக்காமலேயே காப்பீட்டுப் பதிவு செய்யும் நடைமுறையாகும்.

வாடிக்கையாளர் அடையாள அட்டையை தமது முகத்திற்கு அருகில் பிடித்துக்கொண்டு ஒரு தம்படம் எடுத்து முகவருக்கு அனுப்ப வேண்டும். பிறகு தொலைபேசி வாயிலாக அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்ளும் முகவர் அவற்றையெல்லாம் தமது கணினியில் பதிவு செய்து ‘ஒன்லைன்’ எனப்படும் நிகழ்நிலை வாயிலாக காப்புறுதி நிறுவனத்திற்கு அனுப்பிவிடுவார்.

காப்பீட்டு சந்தா தொகையை வாடிக்கையாளர் நிகழ்நிலை வாயிலாக காப்புறுதி நிறுவனத்திற்கு நேரடியாக செலுத்திவிடுவார்.

இந்த புதிய, நவீன நடைமுறையானது முகவரும் வாடிக்கையாளரும் சந்தித்துக்கொள்ளாமலேயே ஒருவர் காப்பீட்டுப் பாதுகாப்பைப் பெறுவதற்கு வகைசெய்கிறது.

எனினும் நடமாட்டக் கட்டுப்பாடு தளர்வு செய்யப்பட்ட பிறகு குறிப்பிட்ட ஒரு காலக்கட்டத்திற்குள் சம்பந்தப்பட்ட முகவர் அந்த வாடிக்கையாளரை சந்தித்து பிரிதொரு பாரத்தை பூர்த்தி செய்து காப்புறுதி நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும்.

சமீப காலம் வரையில், வாடிக்கையாளர்களின் எல்லா விவரங்கள் நேரடியாகப் பெற்று, பிறகு கணினி வழி அவற்றை காப்புறுதி நிறுவனத்திற்கு அனுப்பிவிட்டு, கையெழுத்து சம்பந்தப்பட்ட ஒரு பாரத்தை மட்டுமே நேரடியாக சமர்ப்பிக்க வேண்டியிருந்தது.

இப்போது அதுவும் மாறிப்போய், ‘ஐ-பேட்’ எனப்படும் கணினியின் வழி கையெழுத்து உள்பட சகல தகவல்களையும் நிகழ்நிலை மூலமாகவே அனுப்ப வகைசெய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

எனவே முகவர்கள் காலத்துக்கேற்ற மாறுதல்களை அனுசரித்துக் கொண்டு வாடிக்கையாளர்களுக்குத் தேவையான காப்பீட்டு சேவைகளை தொடர்ந்து வழங்க ஊக்குவிக்கும் பொருட்டு, காப்புறுதி நிறுவனங்கள் ‘ஸூம்’ எனப்படும் நவீன வழியிலான கருத்தரங்குகளை நடத்துகின்றன.

நடமாட்டக் கட்டுப்பாட்டினால் வீட்டில் இருந்தவாரே கருத்தரங்குகளில் பங்கேற்க இந்த ‘ஸூம்’ தொழில்நுட்பம் வகைசெய்கிறது.

எது எப்படியாயினும் நடப்பில் உள்ள காப்புறுதிகளுக்கு அடுத்த 6 மாதங்களுக்குத் தேவையான சந்தாத் தொகையை தற்காளிகமாக ஒத்திவைப்பதற்கான சலுகைகளை காப்புறுதி நிறுவனங்கள் அறிவித்துள்ளதால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள முகவர்களுக்கு இந்த ‘நொன் ஃபேஸ்-டு-ஃபேஸ்’ நடைமுறை ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்லவேண்டும்.