நடமாட்ட கட்டுபாடு அமுலாக்கப்பட்ட போது களும்பாங்கில் உள்ள மைஸ்கில்ஸ் கல்லூரி வளாகத்தில் தனிமையில் வாழ்ந்த மாணவர்கள், அதையே தங்களின் ஆயுதமாக கொண்டு சாதனை செய்துள்ளனர் என்கிறார் அதனை தோற்றுவித்த பசுபதி சிதம்பரம்.
“மார்ச் 18ஆம் தேதி நடமாட்ட கட்டுப்பாடு விதிக்கப்பட்டவுடன், இங்கிருந்த 50 மாணவர்கள் வீடு திரும்ப இயலவில்லை. அவர்கள் இங்கேயே தங்க நேரிட்டது. இந்த நிலமையை அவர்களுடன் கலந்து பேசி ஒரு செயலாக்க திட்டத்தை உருவாக்கினோம்.” என்கிறார் பசுபதி.
இந்த மாணவர்களுக்கு துணையாக 5 மைஸ்கில்ஸ்சின் ஆசியர்களும் அவர்களுடன் தங்கி பசுமை விவசாயத்தில் ஈடுபட்டனர். இவர்கள் கோவிட் 19 பற்றியும் சமூக இடைவெளி பற்றியும் கலந்து பேசினர். இதன் தாக்கம் நாடு முழுவதும் எப்படி இருக்கும் என்பதையும் பேசினர்.
அதே வேளையில், தனிமையில் இருக்கும் நாம் இங்கு என்ன செய்ய இயலும்? நாட்டுக்கு நமது பங்கு என்ன என்பதை பற்றிய உணர்வையும் பகிர்ந்து கொண்டோம் என்கிறார் பசுபதி.
அதன் தாக்கமாக, இவர்கள் அணைவருமே ஒட்டு மொத்தமாக சுய தேவைகளை பூர்த்தி செய்யவும், மக்களுக்கு உதவவும் முழுமையான அளவில் கரிம விவசாயத்தில் (organic farming) தீவிரமாக ஈடுபட்டனர்.
சுமார் 32 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ள மைஸ்கில்ஸ் கல்லூரி, விவசாயம் செய்ய தகுந்த நிலப்பரப்பையும் நீர்வசதியையும் கொண்டுள்ளது என்கிறார் பசுபதி.
ஒவ்வொரு நாளும் என்ன பணிகள் என்று நிர்மாணிக்கப்பட்டது. அடிப்படையில் கல்வி கற்க இரவில் சில மணிநேரத்தை ஒதுக்கிவிட்டு காலை முதல் மாலை வரையில் விவசாயத்தில் ஈடுபட்டனர் .
நிலத்தை பண்படுத்துதல் முதல் பாத்தி வெட்டி, விதைகள் தூவி, நீர் பாய்ச்சி, கன்று நட்டு, களையெடுத்து இப்படியாக அறுவடையாகும்வரை ஒவ்வொரு நாளும் வேலைகளை பகிர்ந்து கொண்டனர்.
ஏற்கெனவே மைமொரிங்கா என்ற பதப்படுத்தப்பட்ட முருங்கை கீரை தூளை இயற்கை உணவு மருந்தாக தயாரிப்பதில் அனுபவம் கொண்டிருந்ததால், இந்த கரிம விவசாயம் சார்பான அடிப்படை அறிவாற்றலும் அனுபவமும் போதுமானதாக இருந்தது.
“இந்த கோவிட் நடமாட்ட கட்டுப்பாட்டு காலகட்டம், எங்களுக்கு புதிய உணர்வை கொடுத்துள்ளது. எங்களுக்கு தேவைப்படும் உற்பத்தியை மட்டுமல்லாமல் இன்னும் அதிகமாகவே பயிர் செய்து இங்கு உள்ளவர்களுக்கும் இனாமாக கொடுத்து வருகிறோம்”. என்கிறார் முதன்மை நிர்வாகி தேவசர்மா.
இவர்கள் பல வகையான கீரைகள், முள்ளங்கி, வாழை மற்றும் பப்பாளி பயிர் செய்துள்ளனர்.
கோவிட்-19 நடமாட்ட கட்டுப்பாட்டு காலத்தில், மைஸ்கில்ஸ் மாணவர்களின் அடைவு நிலை என்ன என்பதை இந்த அனுபவம் ஒரு திருப்புமுனையாக்கி காட்டுகிறது.