சிவாலெனின் | உலகமெங்கும் முதலாளி வர்க்கத்திற்குத் தொழிலாளர் வர்க்கம் மிரட்டலாகவும் தங்களின் உரிமையை உரக்க சொல்லவும் இன்றைக்கும் துணிந்து நிற்கிறார்கள் என்றா,ல் அதற்கு அன்றைக்குத் தொழிலாளர் தோழர்கள் விதைத்த உணர்வுதான் காரணியம் என்பதை மறுத்திடலாகாது.
தொழிலாளர் வர்க்கத்திற்காக, அவர்களின் உரிமையை வென்றெடுப்பதற்காக எத்தனையோ போராட்டங்களையும் தியாகங்களையும் இவ்வுலகம் கண்டுள்ளது. இன்றைய தொழிலாளர்கள் அனுபவிக்கும் சலுகைகளும் உரிமைகளும் எத்தனையோ போராட்டங்களின் வலியையையும் உயிர் தியாகங்களையும் வென்றெடுத்ததுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலைக்காக உலகமெங்கும் தன்னுயிரைத் தியாகம் செய்த தொழிலாளர் தலைவர்கள், போராட்டவாதிகள், தொழிற்சங்கவாதிகளில் மலேசியாவில் 70 ஆண்டுகள் கடந்தும் நினைவுக்கூற வேண்டிய மாபெரும் தொழிலாளர் தலைவனாகவும் புரட்சியாளனாகவும் உயிர்த்தெழும் பெயர்தான் மலாயா கணபதி என்னும் எஸ்.ஏ.கணபதியாகும்.
கடந்த தலைமுறை மறந்துவிட்ட நிலையில் இன்றைய தலைமுறைக்கு அறிமுகம் இல்லாமல் இருக்கும் மலாயா கணபதி காலத்தை வென்று நிற்கும் வர்க்கப் புரட்சியாளன். மலேசியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் குரலாக ஓங்கி ஒலித்த ஒருவர் தூக்கிலிடப்பட்டதும் அதுவே முதன்முறை. தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைக்காக தூக்குக் கயிற்றை ஏந்திய மாவீரன் அவர்.
மே 4, 1949-ல், தூக்கு மேடையில் தூக்கு கயிற்றின் முன் நின்றுகொண்டிருந்த தருணத்தில், தனது உயிரின் இறுதி சுவாசம் நிற்பதற்கு முன்னர், மெல்ல புன்னகை செய்தபடி, “மலாயா மண் மாற்றாரிடமிருந்து விடுதலை பெறட்டும், மலாயா நாட்டுத் தொழிலாளர் வர்க்கம் வெற்றி காணட்டும், மலாயா நாட்டு மக்களுக்குப் புதிய வாழ்வு மலரட்டும், மலாயா மட்டுமின்றி உலகின் எந்தவொரு பகுதியிலும் அடிமைதனம் விரைந்து முடிவிற்கு வரட்டும், இதுவே எனது இறுதியான உறுதியான விருப்பம், வாழ்க வையகம்!” என்று உணர்ச்சி பொங்க தன் உயிர் பிரியபோகும் அந்த நொடியில் கூட தொழிலாளர் விடுதலைக்கும் மக்கள் விடுதலைக்காகவும் முழங்கினார்.
அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராக இருந்த இவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்சின் இந்திய தேசிய இராணுவத்திலும் தன்னை ஈடுப்படுத்திக் கொண்டவராவார். தமிழ் நாட்டில் தம்பிக்கோட்டை என்னும் ஊரில், 1912-ல், ஆறுமுகம் தேவர் – வைரம்மாள் தம்பதிகளுக்குப் பிறந்தார் இவர்.
பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில், மலாயா மற்றும் சிங்கப்பூர் இருந்தபோது அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் உரிமை மறுக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கத்திற்காகவும் தொடர்ந்து போராடியவர்களில் மலாயா கணபதி முதன்மையானவர். அன்றைய காலக்கட்டத்தில் சிங்கப்பூரும் மலாயாவின் ஓர் அங்கமாக இருந்த காரணியத்தால் இவ்விரு நாட்டு மக்களின், குறிப்பாக தொழிலாளர் விடுதலைக்கு இவரது போராட்டங்கள் பிரிட்டிஷ் அரசுக்கும் முதலாளி வர்க்கத்திற்கும் பெரும் மிரட்டலாக இருந்தது.
இவரது தலைமையில் இயங்கிய அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளுக்காகவும் மலாயாவின் அரசியல் விடுதலைக்காகவும் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது போராட்ட உணர்வும் செயல்பாட்டுத் திறனும், இவரை மலாயாவில் மிக வலிமை மிக்க தொழிற்சங்கவாதியாக உயர்த்திப் பிடித்தது எனலாம்.
மலாயாவில் நடந்த கிள்ளான் வேலை நிறுத்தம், பத்து ஆராங்கில் நடைபெற்ற வேலை நிறுத்தம் உட்பட நாட்டின் முக்கிய வேலை நிறுத்தங்களிலும் போராட்டங்களிலும் கணபதியின் பங்களிப்பும் ஈடுப்பாடும் முக்கியப் பங்காற்றியுள்ளது எனலாம். தொழிலாளர்களின் ஊதியம் தொடங்கி அவர்களின் ஒவ்வொரு அடிப்படை உரிமைக்காகவும் கணபதியின் குரல் ஓங்கி ஒலித்து, முதலாளிகளின் கழுத்தை நெரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், மக்களை நாட்டு விடுதலைக்கு ஆதரவாக திரட்டியதிலும் இவரது பங்கு அளப்பரியது. இவரது ஒவ்வொரு செயல்பாடும், நடவடிக்கையும் ஆங்கிலேய அரசிற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. இதனால், கணபதியைக் கைது செய்வதில் அவர்கள் தீவிர முனைப்புக் காட்டி வந்தனர். முன்னதாக தொழிற்சங்கம், இந்திய இராணுவத்தில் மட்டுமின்றி மலாயா கம்னியூசக் கட்சியிலும் அவர் ஈடுபாடு கொண்டிருந்தார். மேலும், அதன் கட்டுப்பாட்டில் அக்காலக்கட்டத்தில் வெளிவந்த “முன்னணி” இதழின் ஆசிரியராகவும் அவர் தீவிரமாக இயங்கியுள்ளார்.
மலாயாத் தொழிற்சங்க சம்மேளனத்தில் மலாயா கம்யூனிச கட்சியின் ஊடுருவல் இருப்பதாக சந்தேகித்த அரசு, தொழிற்சங்கங்க அலுவலகங்களை அடிக்கடி சோதனை செய்தது. தொழிற்சங்க உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், தலைவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். நாட்டில் இதனால் தொடர் பதற்ற நிலை உருவானது, ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தன.
1948-ல், நாட்டில் தொழிலாளர் எழுச்சியும் மக்கள் மத்தியில் விடுதலை உணர்வும் மேலோங்கியது. நிலைமை கட்டுப்பாட்டை மீறி சென்றுவிடுமோ எனும் அச்சத்தில் நாட்டில் அவரசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.
அவசரநிலை அறிவிக்கப்பட்ட நிலையில், கைது ஆவதிலிருந்து தப்பி கம்னியூசக் கட்சி உறுப்பினர்களும் தொழிற்சங்கவாதிகளும் மறைவிடம் தேடி காட்டுக்குள் சென்றனர். அவர்களின் போராட்டங்கள் காட்டிலிருந்து தொடர்ந்தன.
பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக கம்யூனிச கட்சி ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தது. அவசர காலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்கவும், தொடர்ந்து பிரிட்டிஷ் காலனித்துவத்தை எதிர்க்கவும், கணபதி தன் தோழர்களுடன் தலைமறைவாக இருந்து போராடிக் கொண்டிருந்தார். 1948 ஆகஸ்டு மாதம், பத்து ஆராங் நகரின் அருகில் வாட்டார்பால் தோட்டப் பகுதியில் பிரிட்டிஷ்சின் சிறப்பு காவல் இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு மலாயா கணபதி கைது செய்யப்பட்டார்.
அவர் மீது, “தாங்கள் ஒரு கம்யூனிஸ்ட் என்று நம்புகிறோம்”, “அந்த இயக்கத்திற்கு தாங்கள் உதவுவதாக நம்புகிறோம்”, ”கம்யூனிஸ்டுகளுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்ற ஆயுதப் போர் செய்வீர்கள் என நம்புகிறோம்”, ”தாங்களைக் கைது செய்த போது துப்பாக்கியும் ஆறு தோட்டக்களும் வைத்திருந்தீர்கள்” என்னும் நான்கு காரணங்களைக் குற்றச்சாட்டாக பதிவு செய்யப்பட்டது.
இவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்காக 15.03.1949, காலை மணி 8.45-க்குத் தக்கப் பாதுகாப்புடன் கணபதி நீதிமன்றம் கொண்டு வரப்பட்டார். அவரது வழக்கு விசாரணை கோலாலம்பூர் நீதிமன்றம் அருகிலிருந்த தனி நீதிமன்றக் கூடத்தில் நடத்தப்பட்டது. 2 மணிநேரம் நடைபெற்ற வழக்கு விசாரணையில், மாவீரன் கணபதியிடம் 1 மணி 40 நிமிடங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
விசாரணை முடிவுற்ற நிலையில் தீர்ப்பு கூறுவதற்கு முன்னதாக, நீதிபதிகள் தனியறையில் 30 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்கள். பின்னர், தலைமை நீதிபதி மலாயா கணபதியை நோக்கி தாங்கள் துப்பாக்கியும் ஆறு தோட்டக்களும் வைத்திருந்தது, அவசரக்கால சட்டத்தின் கீழ் மரண தண்டனைக்கு உரிய குற்றமாகும். எனவே, தங்களுக்குச் சட்டப்படி மரண தண்டனை விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார். தீர்ப்பிற்குப் பின்னர், கணபதி புடு சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டார்.
மலாயா கணபதிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைக் கேள்வியுற்று மலாயா, சிங்கப்பூர் மட்டுமின்றி, இந்தியா போன்ற நாடுகளில் வாழ்ந்த தமிழர்கள் பெரும் அதிர்ச்சியும் கலக்கமும் அடைந்து கண்ணீர் சிந்தினர். இவரை விடுதலை செய்வதற்காக இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு நேரடியாக பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். அவர் பிரிட்டனுக்கான இந்தியத் தூதர் வே.கி.கிருஸ்ண மேனன் மூலம் பிரித்தானிய பிரதமருக்கு நெருக்குதல் கொடுத்தார். மேலும், தந்தை பெரியார், குத்தூசி குருசாமி, பேரறிஞர் அண்ணா, ப.ஜீவானந்தம், பி.இராமமூர்த்தி, கல்யாணசுந்தரம், ஏ.எஸ்.கே.அய்யங்கார், சிந்தன் உட்பட எண்ணற்றத் தலைவர்கள் கணபதியின் தூக்குத் தண்டனையை இரத்து செய்து அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் எனும் கோரிக்கையை முன் வைத்தனர்.
இதற்கிடையில், தனக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து மலாயா கணபதி 04.04.1949-ல் மேல் முறையீடு செய்தார். அவரது மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அத்துடன் அவரை விடுதலை செய்யக்கோரி வந்த மனுக்களும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. பரிசீலனை மற்றும் விசாரணைக்குப் பின்னர் மலாயா கணபதிக்கு 23.04.1949-ல் மீண்டும் மரணத் தண்டனை உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், மறுநாள் 24.04.1949-ல், காலை மணி 5-க்கு கணபதி தூக்கிலிடப்படுவார் எனச் சிங்கப்பூர் வானொலி அறிவித்தது.
அன்றைய மாலை 7 மணி செய்தியில், சிங்கப்பூர் வானொலி மலாயா கணபதிக்கு எதிரான தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவித்தது. இச்செய்தி மலாயா, சிங்கப்பூர் உட்பட இந்திய நாட்டுத் தமிழர்களுக்குப் பெரும் மகிழ்வை அளித்தது.
முன்னதாக நடைபெற்ற கிளர்ச்சியும் பேரணியும் ஆர்ப்பாட்டங்களும் மட்டுமின்றி, அண்ணா உட்பட தமிழகத் தலைவர்கள் அனைவரும், தமிழகக் காங்கிரஸ் கமிட்டி தலைவர் காமராஜ் அவர்களை நேரில் சந்தித்து கணபதியைக் காப்பாற்றும்படி வேண்டுக்கோள் விடுத்திருந்தனர். ஐநாவிலும் வேண்டுகோள் வைக்கப்பட்டது. இதன் காரணியமாகவே தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.
ஆனால், அந்தத் தூக்குத் தண்டனை நிறுத்தம் கொடுத்த மகிழ்ச்சி தமிழர்களுக்கு நீண்டக்காலம் நீடிக்கவில்லை. 30.04.1949, பிற்பகல் 3 மணிக்குத் தலைமை சிறை கண்காணிப்பாளர் மலாயா கணபதியிடம் தங்களை 04.05.1949 அன்று, காலை மணி 5-க்கு தூக்கிலிட உத்தரவு வந்திருப்பதாக தெரிவித்தார். தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்கப்படலாம் எனும் நம்பிக்கையில் இருந்த அவருக்கு அது பேரிடியாக இருந்தாலும், தொழிலாளர் வர்க்கத்திற்காகவும் மக்கள் விடுதலைக்காகவும் தூக்குக் கயிற்றை எதிர்க்கொள்ள வர்க்கப் போராளி கணபதி தயாராகவே இருந்தார்.
04.05.1949 அன்று உழைக்கும் வர்க்கத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அந்த மாவீரன் தூக்கு மேடைக்கு அழைத்து செல்லப்பட்டார். முன்னதாக, விடியற்காலை 3.15-க்கு அவர் சிறையிலிருக்கும் தோழர்களிடம் தமிழிலும் சீன மொழியிலும் பேசினார். தன்னுடன் சேர்ந்து மக்கள் விடுதலைக்கும் தொழிலாளர் உரிமைக்கும் போராடிய அனைவரையும் நினைவுக்கூர்ந்தார். மலாயா மக்களின் விடுதலை, தன்னாட்சி, பாட்டாளி வர்க்கத்தின் பொருளாதாரச் சமத்துவம், ஆங்கில ஆட்சியாளர்களின் ஆதிக்க கொடுங்கோன்மை ஆட்சி அகற்றப்பட வேண்டும் போன்ற விடயங்களை உணர்ச்சிப் பொங்கப் பேசினார். மேலும், அவர் தனது உரத்த குரலில் தொழிலாளர்களின் கீதத்தை பாடி, சாவின் விளிம்பில் நின்று கொண்டு தனது விடுதலை வேட்கையையும் தொழிர்சங்க உணர்வையும் தொடர்ந்து விதைக்க முயன்றார் என்றுதான் கூற வேண்டும்.
அன்றைய தினம், காலை மணி 5.00-க்குப், புடுச்சிறைச்சாலையில் தொழிலாளர் உரிமைக்கும் மக்கள் விடுதலைக்கும் உரக்க ஒலித்த குரல் தூக்குக் கயிற்றால் நெருக்கப்பட்டது. தொழிலாளர்களின் நலனுக்காகவேத் தன்னை ஈகம் செய்த கணபதியின் உடல் மட்டுமே அங்குத் தூக்குக் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்தது. அவர் விதைத்த சிந்தனையும் உணர்வும் அழியாமல் அவரைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதாலும் எழுதிக் கொண்டிருப்பதாலும் இன்றைக்கும் இந்த மலாயா மண்ணில் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறது.
‘மாமனிதர் கணபதிக்கு மறைவு ஏது?
காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ?
கரைசேற்றால் தாமரையின் வாசம் போமோ?
பேரெதிர்ப்பால் உண்மைதான் இன்மையாமோ?
பிறர் சூழ்ச்சி செந்தமிழை அழிப்பதுண்டோ?
நேர் இருத்தித் தீர்ப்புரைத்துச் சிறையில் போட்டால்
நிறை தொழிலாளர்களுணர்வு மறைந்த போமோ?’
என்னும் பாவேந்தன் பாரதிதாசனின் வரிகளுக்கு ஒப்ப, தொழிலாளர் உணர்வு இருக்கும் வரை மாவீரன் கணபதிக்கு மறைவு இல்லை. வர்க்கப் போராட்டம் இம்மண்ணியில் இருக்கும் வரை மலாயா கணபதியின் வரலாறும் உயிர்ப்பித்துக் கொண்டுதான் இருக்கும்.
தொழிலாளர் வர்க்கத்தின் தோழனும் மக்கள் விடுதலையோடு மண்ணின் விடுதலைக்காகவும் போராடிய மாவீரன் மலாயா கணபதிக்கு அவரது 71-வது நினைவு நாளான இன்று வீரவணக்கம் செய்வோம் நன்றியோடு.