ஆசிரியர்கள் நாட்டின் அடித்தளம் – சேவியரின் ஆசிரியர் தின வாழ்த்துகள்

இவ்வாண்டு ஆசிரியர் தினத்தைக் கொண்டாடும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும், பள்ளிகள் எல்லா வகையிலும் சிறந்து விளங்க ஆசிரியர்களுக்கு துணைபுரியும் பள்ளி பணியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பள்ளி வாரிய உறுப்பினர்களுக்கும் என் ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் பணிகள் மேலும் சிறந்து முன்னேற என் வாழ்த்துகள் என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான  டத்தோ  டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

பள்ளி ஆசிரியர்களின் பணியினை அர்ப்பணிப்பினை, ஆக்ககரமான சேவையைச் சிறப்பிக்கும் விதமாக மாதா, பிதா குரு தெய்வம் என்றும், எழுத்தறிவித்தவன் இறைவனாகும் என்றும் நமது நீதி நூல்கள் போற்றுகின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இறைவனுக்கு அடுத்தும், தாய். தந்தைக்கு அடுத்தும் நம் சமுதாயத்தில் ஆசிரியர்கள் உயர்வாக மதிக்கப்படுவதற்கு நமது நீதி நூல்களே தக்க சான்றாகும்.

ஆசிரியர்கள் நம் பிள்ளைகள் நல்ல குடிமகனாக, சிறந்த மனிதனாக மட்டுமன்றி ஒரு நாடே நல்ல குடிமக்களைப் பெற உழைக்கிறார்கள். நாட்டுக்கு நல்ல குடிமக்களை வழங்குகிறார்கள். அதற்காகவே எல்லா நாடுகளும் கல்விக்கு முக்கியத்துவம்  அளிக்கின்றன. ஆக, ஆசிரியர்கள் ஒரு நாட்டின் அடித்தளமாகும்.

நல்ல குடிமக்கள் நல்ல அரசாங்கத்தை உருவாக்குகின்றனர். நல்ல அரசாங்கம் நல்ல நாட்டை நிர்மாணிக்கும் அதைத்தான் மக்களின் அரசாங்கம், மக்களால் மக்களுக்காக உருவாக்கப் படுவதாகக் கூறுகிறார் முன்னால் அமெரிக்க  அதிபரும், உலகில்  அடிமைத்தனத்தை ஒழிக்கப் போராடியவருமான ஆப்ரகாம் லிங்கன் அவர்கள் என்றார் சேவியர் ஜெயக்குமார்

ஒரு நாட்டின் ஆக்கபூர்வ வளர்ச்சியில் ஆசிரியர்கள் பணியும், பங்கும் எவ்வளவு பாங்கானது என்பதனை அறிந்துள்ள ஆசிரியர்கள், இந்த நாட்டின் உண்மையான வளர்ச்சிக்கும், ஒற்றுமைக்கும், வாழ்வுக்கும் எது தேவை என்பதனே நன்கு அறிவார்கள். நாட்டுக்கு எது சிறந்ததோ அதனை நம் மக்கள் பெறத் தொடர்ந்து தங்களின் பங்கை அளிக்க வேண்டும்.

எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையாக இருந்தாலும், நாம் அனைவருக்கும் கடமைகள் உண்டு, நாடு எதிர்நோக்கும் சவால்களை, சமாளிக்க மாணவர்களைத் தயார் செய்யும் பொறுப்பும் எல்லா ஆசிரியர்களுக்கும் உண்டு என்பதால், ஆசிரியர்கள் தங்கள் பணிகளைச் சிறப்புடன் செய்து வெற்றிகரமான தேசத்தை உருவாக்க அவர்களுக்கு  என் வாழ்த்தைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் அவர்.