குற்றத்தை ஒப்புக் கொள்ளாத இரண்டு நபர்களின் கதை

அருட்செல்வன் | இந்த மாதம் கோலாலம்பூர் ஜாலான் டூத்தா நீதிமன்றத்தில் நடந்த இரண்டு நிகழ்வுகளின் பதிவு இது. முதலாவது, முன்னாள் பிரதமர் சம்பந்தப்பட்டது. இரண்டாவது, கேஸ் லாரி டிரைவர் மற்றும் கோவிட் காலத்தில் வேலை இழந்த அவரது துணை சம்பந்தப்பட்டது.

இதில், ஒரு சம்பவம் 7 ஜூலை 2020-ல் நடந்தது. மற்றொரு சம்பவம் 28 ஜூலை 2020 அன்று நிகழ்ந்தது.

ஒருவர் ஊழல், மோசடி, அதிகார முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். மற்ற இரண்டு பேரை பொறுத்தவரை, அவர்களின் ஏடிஎம் அட்டை ஒரு மோசடி திட்டத்தில் (scam) வேறொரு தரப்பினரால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமருக்கு 7 குற்றச்சாட்டுகள். இந்த தம்பதிகளுக்கு 3 குற்றச்சாட்டுகள் மட்டுமே.

முன்னாள் பிரதமர் குற்றவாளி என்றால், அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மோசடி செய்த 42 மில்லியன் பணத்தை விட 5 மடங்கு அதிகமான அபராதமும் விதிக்கப்படும் (5 முறை என்றால் அது RM 210 மில்லியன் ஆகும்). கேஸ் லாரி ஓட்டுநர் குற்றத்தை ஒப்புக்கொண்டால், அதிகபட்ச அபராதம் 3 ஆயிரம் விதிக்கப்படும். இது சிறு குற்றங்களின் கீழ் விதிக்கப்படும் அபராதம், அதாவது ஒவ்வொரு குற்றத்திற்கும் அதிகபட்சமான அபராதம் ஓராயிரம் ஆகும்.

முன்னாள் பிரதமர் தனது வங்கிக் கணக்கில் 42 மில்லியன் டெப்பாசிட் செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என்று கூறி தான் குற்றவாளி அல்ல என்றார். அதே நேரத்தில் கேஸ் லாரி ஓட்டுநர் தம்பதியினர் தங்களின் ஏடிஎம் அட்டை மோசடிக்காரர்களால் தவறாகப் பயன்படுத்தப்பட்டது தங்களுக்குத் தெரியாது என்பதால் தாங்கள் குற்றவாளிகள் அல்ல என்று வாதாடினர்.

எனவே, முன்னாள் பிரதமர் நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது. தண்டனை விதிப்பதை ஒத்திவைக்குமாறு அவர் கெஞ்சினார். ஆலோசனைகள் மற்றும் பிணை பணம் பெற அவகாசம் தேவை என்று அவரது வழக்கறிஞர் கூறினார்.

அபராதமே 201 மில்லியன் என்றாலும் நீதிபதி 1 மில்லியன் ரிங்கிட் மட்டுமே ஜாமீன் விதித்தார். கேஸ் லாரி ஓட்டுநர் வழக்கில், குற்றத்தை ஒப்புக்கொண்டால் அதிகபட்ச அபராதம் RM 3,000 மட்டுமே என்று இருந்த போதிலும், நீதிமன்றம் RM4,800 ஜாமீன் விதித்தது.

முன்னாள் பிரதமருக்கு நீதிமன்றம் பரிவு காட்டியது. 1 மில்லியன் பிணை பணத்தை செலுத்த ஒரு நாள் வரை நேரம் கொடுத்தது. அது தயாராகும் வரை முன்னாள் பிரதமர் சிறைக்கு செல்ல வேண்டியதில்லை.

கேஸ் லாரி ஓட்டுநர், அவர் காவல் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் RM3,000 கொண்டு வந்தார். அதுவும் கூட அவரது முதலாளி கொடுத்த தொகையாகும், தனது சம்பளத்திலிருந்து கழிக்கப்பட்ட RM 3,000 ஆகும். அவரது துணை, தங்க நகைகளை அடகு வைத்து மேலும் 1 ஆயிரம் பணத்தையும் கொண்டு வந்தார். அவர்களிடம் இன்னும் போதுமான பணம் இல்லை. நான் பிஎஸ்எம் நண்பர்களிடமிருந்து RM800 கடன் வாங்கினேன். நாங்கள் நீதிமன்றத்தில் அமைந்திருந்த மேபேங்கிற்கு ஓடினோம், ஆனால் அது மாலை 3 மணிக்கு மூடப்பட்டதால் நேரம் போதாமல் போனது. அருகில் இருந்த கட்டிடத்தில் அமைந்திருந்த பேங்க் சிம்பானான் வங்கிக்கு விரைந்தோம். மாலை 4.30 மணிக்கு திரும்பி வர முடிந்தது, ஆனால் ஜாமின் கவுண்டர் அதிகாரிகள் எங்களுக்கு சேவை வழங்க மறுத்தனர். எங்களை நீதிமன்றத்திற்குச் சென்று கேட்டு வர சொன்னார்கள். நாங்கள் மாலை 4.45 மணிக்கு நீதிமன்றத்திற்குச் சென்றோம், ஆனால் நீதிமன்றம் காலியாக இருந்தது. அங்கு யாருமே இல்லை.

முன்னாள் பிரதமரைப் போல அல்ல, அவர் இன்னும் சுதந்திரமாக வெளியே இருக்கிறார். ஒரு நாள் கழித்தும் கூட அவர் ஜாமீன் செலுத்த முடியும். இந்த தம்பதிகளைப் பொறுத்தவரை, பணம் செலுத்த அனுமதிக்கப்பட்டால் … அவர்கள் சிறைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.

எனவே அந்தப் பெண் முதன்முறையாக சிறைக்குச் சென்றார்; அழுதார். ஜாமீன் பணிகள் முடிவடையும் வரை கேஸ் லாரி ஓட்டுநர் இரண்டு நாட்கள் சிறை செல்ல வேண்டியிருந்தது. சிறையில் இருந்தபோது இன்சுலின் பெற முடியாததால் அவர் வெளியே வந்தபோது, அவரது கால்களில் ஒன்று முடங்கிவிட்டதாக உணர்ந்தார்.

இதுதான் குற்றத்தை ஒப்புக் கொள்ளாத இரண்டு வெவ்வேறு நபர்களின் கதை.
சட்டத்தின் முன் அனைவரும் சமம்
இரண்டு வர்க்கங்களுக்கு இடையே
அருட்செல்வன்
இரவு 10 மணி 28 ஜூலை 2020