இராகவன் கருப்பையா- புதிய ஆட்சி அமைக்க தம்மிடம் பெரும்பான்மை இருக்கிறது என்றும் பிரதமர் முஹிடின் பெரும்பான்மையை இழந்துவிட்டார் எனவும் பி.கே.ஆர். கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் செய்த திடீர் அறிவிப்பினால் இவ்வாண்டில் 2ஆவது முறையாக நாட்டின் அரசியலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு எனும் நிலையில் ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் பெரும்பான்மையில் மட்டுமே கடந்த 7 மாதங்களாக ஆட்சி புரிந்துவரும் முஹிடினை இந்த அறிவிப்பு ஓரளவு ஆட்டங்காணச் செய்துவிட்டது என்றே தெரிகிறது.
நானேதான் இன்னமும் நாட்டின் சட்டப்பூர்வ பிரதமர், அன்வாரின் அறிவிப்பு வெறும் ‘வெத்து வேட்டு’ என்று உடனே அறிக்கை வெளியிட்ட முஹிடின் அமைதியாக இருக்கும்படி நாட்டு மக்களை கேட்டுக்கொண்டார்.
இதில் வேடிக்கை என்னவென்றால் பொது மக்கள் பதற்றமோ பரபரப்போ இல்லாமல் தங்களுடைய அன்றாடப் பணிகளை கவனித்துக்கொண்டு அமைதியாகத்தான் இருக்கிறார்கள்.
தவளைகள் நிறைந்த அரசியல் சூழலில் எதுவுமே சாத்தியம்தான், எனவே பொருத்திருந்து பார்ப்போம் என்பதே மக்களின் நிலைப்பாடாகத் தெரிகிறது.
ஏறக்குறைய மூன்றில் இரண்டு பெரும்பான்மை தம்மிடம் இருப்பதாக அன்வார் கூறியதைத் தொடர்ந்து, பதற்றத்தில் அல்லப்பட்டுக் கொண்டிருப்பது ஆளும் கூட்டணி அரசியல்வாதிகள்தான் என்பதே உண்மை.
கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தாங்கள் அனுபவித்து வரும் பதவி சுகபோகங்கள் ஒரு முடிவுக்கு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் பதற்றப்படுவது நியாயமான ஒன்றுதான்.
பிரதமர் பதவியை தொடர்ந்து தற்காத்துக்கொள்ளும் பொருட்டு தமது கூட்டணியைச் சேர்ந்த கிட்டத்தட்ட எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முஹிடின் ஏதாவதொரு பதவியை உருவாக்கிக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பொருளாதாரத்தை அன்வார் கீழறுப்பு செய்கிறார் என ம.சீ.ச. தலைவர் வீ கா சியோங் குற்றஞ்சாட்டினார்.
நிலைமை இவ்வாறு இருக்க, ‘அம்னோவை சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வாருக்கு ஆதரவு வழங்குகின்றனர், அவர்களை என்னால் தடுக்க முடியாது,’ என அதன் தலைவர் அஹ்மட் ஸாஹிட் செய்த அறிவிப்புதான் எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
அன்வாருக்கு ஆதரவளிக்க எத்தனை அம்னோ உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளார்கள், அவர்கள் யார் என்பதுதான் அரசியல் வட்டத்தில் இப்போது மிகப்பெரிய கேள்வி.
இதற்கிடையே திரை மறைவில் பெருமளவில் பேரம் பேசும் நடவடிக்கைகளும் அரசியல் நகர்வுகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இத்தகைய நடவடிக்கைகளில் மகாதீரின் பங்கும் நிச்சயம் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அவரும் அவருக்கு ஆதரவான 4 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆளும் கூட்டணியிலோ பக்காத்தான் கூட்டணியிலோ சார்ந்திராமல் தனித்தே இயங்கிக்கொண்டிருக்கும் போதிலும் அன்வார் பிரதமராவதில் அவருடைய நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை மக்கள் நன்றாகவே அறிவார்கள்.
கடந்த 2008ஆம் ஆண்டில் படாவி பிரதமராக இருந்த காலத்தில் இதே போன்ற ஒரு சூழல் ஏற்பட்டதை மக்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள்.
கிழக்கு மலேசியாவைச் சேர்ந்த 30கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதால் செப்டம்பர் 16ஆம் தேதியன்று தாம் ஆட்சியை கைப்பற்றப் போவதாக அவ்வாண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் அன்வார் செய்த அறிவிப்பு நாம் அறிந்த ஒன்றே.
உடன களத்தில் இறங்கிய மகாதீர் சம்பந்தப்பட்ட அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியாகக் கடிதங்கள் அனுப்பி அவர்களுடைய முடிவுகளை மாற்ற வகை செய்த விவகாரம் பிறகுதான் வெளிச்சத்திற்கு வந்தது.
எனவே இதுபோன்ற எத்தனையோ தடைகளையும் இன்னல்களையும் தாண்டி பிரதமராகும் தமது இலக்கில் இருந்து குறி தவறாமல் காய்களை நகர்த்தி வரும் அன்வாரின் முயற்சி இம்முறை பலிக்குமா என்று நாம் பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
தமது கூற்றை அன்வார் மெய்ப்பிக்கும் தறுவாயில், அதனை ஏற்றுக்கொண்டு புதிய அரசாங்கம் அழைக்க அவரை அழைப்பதா அல்லது நாடாளுமன்றத்தைக் களைத்து 15ஆவது பொதுத் தேர்தலுக்கு வழிவகுப்பதா என பேரரசர்தான் முடிவு செய்வார்.
சபாவில் அதன் முதலமைச்சர் ஷாஃபி அப்துல்லா செய்ததைப் போன்று நாடாளுமன்றத்தைக் களைக்க முஹிடின் முற்பட்டாலும் அது சாத்தியப்படுமா என்று தெரியாது.
ஏனென்றால் நாட்டில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று மற்றும் பொதுத் தேர்தலுக்குத் தேவையான குறைந்த பட்சம் 800 மில்லியன் ரிங்கிட், ஆகியவற்றை கருத்தில்கொண்டு பொது மக்களும் கூட அதனை விரும்பமாட்டார்கள் என்று உறுதியாக நம்பலாம்.