தமிழ்மொழிக் காப்பகம் – தலைவர் : கல்வித்துணையமைச்சர் , உரிமை : அரசு சார்ந்தது
தமிழ்க் காப்பகம் – தலைவர் : முனைவர் சு.வை. லிங்கம் , உரிமை : அரசு சாராதது
அண்மையில், முனைவர் சு.வை. லிங்கம் தலைமையில் இயங்கும் ஓர் அரசு சாரா இயக்கம், அதாவது, மலேசியத் தமிழ்க்காப்பகம் சார்பில் ஒரு சுற்றறிக்கை வெளிவந்திருந்தது.
அதில் தமிழ்க்காப்பகத்தின் போலி போன்று வேறொரு இயக்கம் செயல்படுவதாகக் கூறப்பட்டிருந்தது.
இயக்கங்களின் பதிவிலாகாவில் முறைப்படி பதிவு பெற்றுத், தமிழ்த்தொண்டாற்றி வரும் இயக்கம்தான் மலேசியத் தமிழ்க்காப்பகம். கடந்த பத்து ஆண்டுகளாகத் தமிழ்ப்பணி ஆற்றிவருகிறது இவ்வியக்கம்.
அரசாங்க சார்பற்ற நிலையில் தமிழ்ப்பணி செய்வது சவால் மிகுந்தது. அவ்வியக்கம் சரியாகச் செயல்படுகிறது என்பதற்கு அவ்வியக்கம் ஆற்றிவரும் தமிழ்ப்பணியேs சான்று பகர்கிறது.
ஆனாலும், இவ்வியக்கத்தின் செயற்பாடு ஓர் எல்லைக்கு உட்பட்டவையாக இருக்கிறது. அரசு சாரா இயக்கம் என்ற முறையில், உடன்படாத விடயங்களில் அரசுக்கு எதிரான அல்லது முரண்பாடான நிலைப்பாட்டைச் சில நேரங்களில் இவ்வியக்கம் எடுக்க வேண்டியது வரும்.
தேவான் பகாசா டான் புசுத்தாக்கா (Dewan Bahasa dan Pustaka) போன்று செயல்படுவதாக அவர்கள் கூறிக்கொண்டாலும், தேவான் பகாசாவின் இயங்குதளம் மிகப்பெரியது. அது, நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டு முற்றும் முழுவதும் அரசாங்க நிதியில் செயல்படுகின்ற ஒரு மொழி வளர்ச்சி நிறுவனம்.
தேவான் பகாசா போன்று தமிழுக்கும் ஒரு மொழிநிறுவனம் அமைக்க கடந்த காலங்களில் பலரால் முயற்சி செய்யப்பட்டது. அது அத்துணை எளிதல்ல என்பது முயன்றவர்களுக்குத் தெரியும்.
தமிழ்க்கல்வி வளர்ச்சியில் அக்கறையும் கடப்பாடும் கொண்டு, தமிழ் மொழியின் பயன்பாடு தரமாக இருப்பதை உறுதிபடுத்தும் பொருட்டு, கல்வியமைச்சில் ஒரு நிறுவனம் ஏற்படுத்துவது இன்றியமையாததாக இருந்தது, அதன் தேவை உணரப்பட்டு வந்தது.
மலாய்மொழிக்கு அரசாங்கம் நடத்திவரும் தேவான் பகாசா டான் புசுத்தாக்காபோல, தமிழ்மொழிக்கும் சீனமொழிக்கும் ஒரு மொழிநிறுவனம் இல்லாமல் இருந்தது. அப்படி ஒன்றை உருவாக்க கல்விச்சட்டத்தில் இடமில்லாமல் இருந்தது. மலாய்மொழிக்கு ஆட்சிமொழி, அலுவல் மொழி, தேசிய மொழி என்ற பாதுகாப்பு வளையம் இருந்தது. சிறுபான்மையின மொழிகளான தமிழுக்கும் சீனத்திற்கும் அந்த வாய்ப்புகள் இல்லை.
இதை நன்கு உணர்ந்த சீன சமூகம், மாற்றுவழியை ஆராய்ந்தது. தங்களின் அப்போதைய செல்வாக்கைப் பயன்படுத்தி, கல்வியமைச்சின் கீழ் சீனமொழிக் காப்பகம் அல்லது Majlis Pembakuan Bahasa Cina என்ற நிறுவனம் ஒன்றைக் கல்வித் துணையமைச்சரைத் தலைவராகக் கொண்டு செயல்படுத்தி வருகிறது.
சீன மொழியின் தரத்தைச் சீராக வைத்துக்கொள்ளும் வகையில், அது கடந்த இருபது ஆண்டுகளாகச் செயலாற்றி வருகிறது. கல்வித் துணையமைச்சர் அவர்கள் தலைவராக வீற்றிருப்பதால், அந்த இனத்தின் மொழிச் சிக்கல்கள் அரசாங்கத்தின் பார்வைக்குக் நேரடியாக கொண்டுச் செல்லப்பட்டு வந்தது. மேலும், துணைக் கல்வியமைச்சர் சிக்கல்களின் தீவிரம் குறித்து அமைச்சரின் பார்வைக்கும் உடனடியாகக் கொண்டு செல்லலாம்.
மேலும், தேவான் பகாசாவின் அங்கீகாரத்தோடு, பல நிகழ்ச்சிகளைக் கூட்டாகச் செய்தது சீன மொழிக்காப்பகம். தேவான் பகாசா புசுத்தாக்காவின் அமைப்புச் சட்டத்தில் மற்ற மொழிகளின் வளர்ச்சிக்கும் தேவான் பகாசா பாடுபட வேண்டும் என்றத் துணைவிதியும் உண்டு.
தடியெடுத்தவர் எல்லாம் தண்டல் எனும் வகையில் தமிழைப் பிழைபட எழுதியும், ஊடகங்களில் வெளியிட்டும், பிழையாக மொழிப்பெயர்த்தும் வந்த தருணத்தில், தமிழ்மொழிக்குத் தரப்படுத்தும் ஓர் இயக்கம் அல்லது நடுவம் தேவையாய் இருந்ததைத் தமிழறிஞர் பெருமக்களின் பெருமூச்சிலிருந்து தெரிந்துகொள்ள முடிந்தது.
கடந்த அரசங்கத்தில் நான் கல்வித் துணையமைச்சரின் சிறப்பு அதிகாரியாக இருந்தத் தருணம் சீனமொழிக்கு இருப்பது போன்று தமிழ்மொழிக்கும் ஒரு தரப்படுத்தும் காப்பகம் இருக்க வேண்டும் என்று முயற்சிகளை மேற்கொண்டேன்.
எனக்கு உறுதுணையாக பல்வேறு தரப்பினர் இருந்தனர். அதனால், முயற்சி வெற்றியை ஈட்டியது.
கடந்த 2019-ம் ஆண்டு, மே திங்கள் 3-ஆம் நாள், கல்வியமைச்சின் அதிகாரப்பூர்வ இயக்கமாக, துணைக் கல்வியமைச்சரைத் தலைவராகக் கொண்டியங்கும் மலேசியத் தமிழ்மொழிக் காப்பகம் உருவாக்கப்பட்டது. மலேசியத் தமிழ்மொழி தரப்பாட்டுக் காப்பகம் எனும் பெயர் நீளமாக இருந்தமையால், சுருக்கமாக மலேசியத் தமிழ்மொழிக் காப்பகம் என்று அழைக்கத் தொடங்கினோம். இதற்கு யாருடைய அனுமதியும் எங்களுக்குத் தேவைப்படவில்லை. அரசு சார்புடைய இயக்கம் என்பதால் நாங்கள் சங்க அமைப்பாகப் பதிவுபெறவில்லை.
மலாய் மொழியில் Majlis Pembakuan Bahasa Tamil என்றும் ஆங்கிலத்தில் Malaysian Tamil Language Standardisation Council என்றும் அழைக்கப்படும் காப்பகத்தின் வெள்ளோட்ட நிகழ்ச்சி, தேவான் பகாசா டான் புசுத்தாக்கா நிறுவனத்தின் முழு ஒத்துழைப்புடன் நடந்தேறியது, செலவுகள் அனைத்தையும் அந்த நிறுவனமே ஏற்றுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. அரசு சார்ந்திருப்பதால் அது சாத்தியமானது.
மலேசியாவில் தமிழ்மொழிக்கென்று சிறப்பாக அரசு ஆதரவும் அரவணைப்பும் பெற்ற ஒரு நிறுவனம் அமைவது மலேசியக் கல்வியமைச்சின் வரலாற்றில் இதுவே முதல்முறை.
சீனப் பெண்மணி, மாண்புமிகு தியோ நீச்செங் கல்வித் துணையமைச்சராக இருந்த நேரத்தில் அலுவல் முறைப்படி அவர்தான் தமிழ்மொழிக் காப்பகத்திற்குத் தலைவர். ஆயினும், நிருவாகப் பொறுப்பை தமிழர் / தமிழறிஞர் ஒருவரே ஏற்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். தமிழ்மொழிக் காப்பகம் அமைவதற்கு உதவிய மாண்புமிகு தியோ நீச்செங் அவர்களுக்கு நன்றி சொல்ல நான் கடமைப்பட்டிருக்கின்றேன்.
இன்றைக்கும் தமிழரல்லாதக் கல்வித் துணையமைச்சர் டாக்டர் மா அவர்களே தமிழ்மொழிக் காப்பகத்தின் தலைவர். அவர் தமிழ்மொழி காப்பகத்தின் செயல்பாடுகளில் குறுக்கிடுவதில்லை.
ஆசிரியப் பயிற்சிக்கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் திரு. நாராயணசாமி அவர்களின் நிருவாகப் பொறுப்பில் காப்பகம் தன்பணியைச் செவ்வனே, அமைதியாகச் செய்துவருகிறது.
மலேசியத் தமிழ்மொழித் தரப்பாட்டுக் காப்பகம் (சுருங்கக்கூறினால் தமிழ்மொழிக் காப்பகம்) அமைக்கப்பட்டு ஓராண்டு முடிந்து இரண்டாம் ஆண்டை நோக்கிச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
நான்கு தலையாயப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
- கலைச்சொல்லாக்கம்
தொழில்நுட்ப வளர்ச்சி மேலோங்கி வரும் காலத்தில் பல்வேறு புதிய அறிவுத்துறைகள் பெருகி வருகின்றன. தமிழ்க்கல்வி உலகமும் ஊடகத்துறையும் அவற்றை மொழிப்பெயர்ப்பு செய்ய வேண்டியக் கட்டாயத்தில் இருக்கிறது. எடுத்துகாட்டாக, அண்மையில் கோறணி நச்சில் ஏற்படுத்தியப் பெருந்தொற்று நூற்றுக்கணக்கான புதியக் கலைச்சொற்கள் உருவாக காரணமாயிற்று. ஊடகங்கள் தங்களுக்குப் பிடித்தவகையில் எல்லாம் கலைச்சொற்களை அறிமுகம் செய்தனர். Physical distancing, social distancing இவற்றிற்கு உடனடித் தமிழாக்கம் தேவையாய் இருந்தது.
சரியான கலைச்சொற்களை உருவாக்கி அவற்றைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் பணியை ஆளுமை நிறைந்தவர்களைக் கொண்டு செய்ய வேண்டியிருக்கின்றது. கலைச்சொல் உருவாக்குவதற்கு மூலச்சொல்லின் பொருளையும் வேரையும் அறிந்திருப்பது இன்றியமையாதது.
மலேசியாவில் கலைச்சொற்கள் உருவாக்குவதில் புகழ்பெற்று விளங்கும் முத்தமிழறிஞர் திருமாவளவனார் காப்பகத்திற்கு உதவி வருகிறார். அரசாங்கத்தின் அரவணைப்பு இருப்பதால், நாம் அறிமுகப் படுத்தும் சொற்கள் விரைவாகப் பயன்பாட்டுக்கு வரும். மேலும், இலங்கை, தமிழ்நாடு, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் கலைச்சொற்களையும் பரிசீலனைச் செய்கின்றோம். பள்ளிக்கல்விக்கான கலைச்சொற்களை ஆசிரியர் பயிற்சியக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழகத் தமிழறிஞர்கள், ஆசிரியர்கள், ஆய்வறிஞர்களின் கூட்டுமுயற்சியில் உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
- மொழிப்பெயர்ப்பு
தமிழ்மொழியில் வெளிவரும் சிறந்த படைப்புகளைத் தேர்தெடுத்து ஆங்கிலம், மலாய் மொழிகளில் மொழிப்பெயர்த்து, மலேசியத் தமிழ் படைப்புகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தரும் வேலையும் நடந்தேறி வருகிறது. மொழிப்பெயர்ப்பு பயிற்சிகளையும் தேவான் பகாசாவின் துணையோடும் மலேசியத் மொழிப்பெயர்ப்பு நிறுவனத்தின் துணையோடும் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
- தமிழ் இலக்கணம்
தமிழ் இலக்கணம் தமிழ்மொழியின் தரத்தைப் பாதுகாப்பதில் முதன்மை பங்கு வகிக்கின்றது. எளிய முறையில் தமிழ் இலக்கணமும் கவிதை எழுத யாப்பிலக்கணமும் கற்றுக்கொள்ளும் வகையில் பயிற்சிகள், கையேடுகள், பயிற்றுத் துணைப்பொருட்கள், தமிழ் இலக்கண செயலிகள் போன்றவை உருவாக்குவது இத்துறையின் பொறுப்பாகும். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.
- ஆய்வும் பதிப்பும்
தமிழ்மொழிக் காப்பகத்திற்கு என்று ஓர் அகப்பக்கம் இருக்கிறது. அதில் புதிய கலைச்சொற்கள் பகிரப்படுகின்றன. மின்னூல் வடிவில் மலேசியப் படைப்புகளும், ஆய்வுக் கட்டுரைகளும் அதில் இடம்பெறும். தமிழ்மொழிக் காப்பகத்தின் நிருவாக உறுப்பினர்கள் பற்றியத் தகவல், செயல்திட்டங்கள், செய்து முடித்த திட்டங்கள் பற்றியக் குறிப்புகள் அதில் இடம்பெற்றிருக்கும். தேவைப்படுவோர் அங்கிருந்து தரவல் திரட்டிக் கொள்ளலாம்.
அசுத்திரோ வானவில், மலேசிய வானொலித் தொலைக்காட்சி, இயங்கலை, அச்சு ஊடகங்களின் நிகராளிகள் பலரும் மலேசியத் தமிழ்மொழிக் காப்பகத்தின் வாடிக்கையாளர்களாக இருக்கின்றார்கள். ஆசிரியர்கள், மாணவர்கள், தமிழார்வலர்கள் மலேசியத் தமிழ்மொழிக் காப்பகத்தின் நலன்விரும்பிகளாகவும் பயனீட்டாளராகவும் செயல்படுகின்றார்கள்.
கல்வித் துணையமைச்சரை தலைவராகக் கொண்டிருந்தாலும், மலேசியத் தமிழ்மொழிக் காப்பகம் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்படும். பொதுமக்களுக்குத் தமிழ்மொழித் தொடர்பான சேவையை வழங்குவதே தமிழ்மொழிக் காப்பகத்தின் பணி. இங்கு பணிபுரிவோர் யாருக்கும் ஊதியம் கிடையாது. இது முழுக்க முழுக்க தமிழுக்குத் தொண்டாற்றும் ஒரு பணி.
எனவே, அரசு சார்ந்த நிறுவனமான மலேசியத் தமிழ்மொழி தரப்பாட்டுக் காப்பகம், திரு. சு.வை. லிங்கம் அவர்களின் தலைமையில் இயங்கும் அரசுசாரா இயக்கமான மலேசியத் தமிழ்க்காப்பகம் ஆகிய இருவேறு இயக்கங்களின் பெயரில் ஒற்றுமை இருந்தாலும் ஆற்றும் பணியிலும் நோக்கத்திலும் வேறுபாடு உண்டு. ஆனால், அது முரண்பாடு அல்ல.
தேவை ஏற்பட்டால் தமிழ்க்காப்பகத்துடனும் சேர்ந்து தமிழ்ப்பணிச் செய்வோம்.
எழுத்து :- குமரன் வேலு இராமசாமி உதவித் தலைவர் 1, மலேசியத் தமிழ்மொழிக் காப்பகம்
I’m glad to your response and clarity of your explanation is highly appreciated I feel that we are having a common interest in preserves our language and Tamil school. We support your noble course.
Thank you
Loga