தமிழ்ப்பள்ளிக்கென தனி ஒதுக்கீடு இருப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும்

தியாகு லோகநாதன் | அண்மையில் வெளியான 2021 வரவு செலவு திட்டத்தில், அரசு பள்ளி மற்றும் அரசு சாரா பள்ளிகளிக்கு 800 மில்லியனும் மிக மோசமான நிலையில் உள்ள 50 பள்ளிகளுக்கு 725 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழ்ப்பள்ளிக்கென்று தனியாக எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது என அரசு கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும்.

நஜிப் காலத்திலும் பக்காத்தான் ஹராப்பான் காலத்திலும் வருடத்திற்கு தலா 50 மில்லியன் ஒதுக்கப்பட்ட வேளையில், இப்போது தேசியக் கூட்டணி அரசாங்கத்தில் அது போன்று இன்னும் உட்பிரிவுகள் காட்டாதது, மிகப்பெரிய வருத்ததை அளிக்கிறது.

ஏற்கனவே, எப்படியாவது தாய்மொழிப் பள்ளிகளை அழித்துக்கட்டுவோம் என நீதிமன்றம் வரை சென்றக் கும்பலுக்கு ஆதரவு தருவது போல், ஆளுங்கட்சியில் வந்த குரல்கள் மிகப்பெரிய ஒரு தாக்கத்தை உண்டு செய்தன.

ஒருவேளை, நிதி விண்ணப்பிக்கும் போது, தாய்மொழிப் பள்ளிகளுக்கு எப்படியாவது தராமல் தட்டிக்கழித்து விடலாம் என சிலரின் எண்ணம் இருக்குமோ என்று எங்களுக்குக் கேள்விகள் வருவது நியாயமே!

யானைக்கும் முயலுக்கும் ஒரு தட்டில் கிழங்குகள் கொடுத்தால், முயல் மென்று முடிக்கும் முன்பே யானை அந்தத் தட்டோடு சேர்த்து விழுங்கிவிடும். அதுபோல், சிறுபான்மை மக்களுக்கு, அவர்களின் சலுகைகள் பாதுகாக்கப்பட தனித்துவமாக கொடுக்கப்பட வேண்டும்.

இதை நாடாளமன்றத்தில் கேட்க வேண்டிய பொறுப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களுடையது. செய்வார்களா?