தீபாவளிக்கு 2 நாள் விடுமுறையா – சிந்திக்க வேண்டும்!

இராகவன் கருப்பையா- ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது நம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சாரார் கூடுதல் விடுமுறை கேட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பது வழக்கமாகிவிட்டது.

சில அரசியல் கட்சிகளும் அரசு சாரா இயக்கங்களும் பொது மக்களும் கூட ஆங்காங்கே வரிந்து கட்டிக்கொண்டு இத்தகைய கோரிக்கைக்கு மறக்காமல் ஆண்டுதோரும் உரமூட்டி வருவதை நம்மால் காணமுடிகிறது.

அண்மையில் கூட வட பகுதியில் உள்ள சில இயக்கங்கள் இத்தகைய ஒரு அர்த்தமற்ற கோரிக்கையை முன்வைத்தன.

மலாய்க்காரர்களின் நோன்புப் பெருநாளுக்கும் சீனர்களின் சீனப் புத்தாண்டுக்கும் தலா 2 நாள் விடுமுறை கொடுக்கப்படுகிறது. ஆனால் இந்தியர்கள் கொண்டாடும் தீபாவளிக்கு மட்டும் 1 நாள் மட்டும்தான் விடுமுறையா என அந்த இயக்கங்களின் அங்கத்தினர்கள் ஒருசேர  ஆதங்கப்பட்டுக்கொண்டது சற்று வேடிக்கையாகவே உள்ளது.

கடந்த காலங்களில் இதுபோன்ற மகஜர்களை சமர்ப்பிப்பதற்கு நாடாளுமன்றம் வரையில் கூட பலர் சென்றிருக்கின்றனர் என்பது குறிப்படத்தக்கது.

‘செய்கிற வேலையை விட்டுட்டு கோழி முட்டைக்கு சவரம் செய்வதை’ போல இவ்வாறு சில்லறை விசயங்களுக்கெல்லாம் முன்னுறிமைக் கொடுத்து காலத்தையும் நேரத்தையும் தொடர்ந்து வீணடிப்போமேயானால் மற்ற இனத்தவரின் மத்தியில் நமது சமூகத்தின் பின்னடைவையே இது புலப்படுத்துகிறது.

‘எங்களுக்கு விடுமுறை அதிகமாக வேண்டும்’ என சீன சமூகமோ மலாய்க்காரர்களோ மரியல் செய்யவோ மகஜர் சமர்ப்பிக்கவோ கேள்விப்பட்டிருக்கோமா – இல்லை!

நம் இனத்தவர்களுக்குத்தான் இதில் ‘கோல்டு மெடல்.’

60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்நாட்டில் நாம் ஒதுக்கப்பட்ட உதாசினப்படுத்தப்பட்ட ஒரு சமூகம்தான். துளி அளவும்  இதில் சந்தேகம் இல்லை.

‘நாங்களும் இந்நாட்டில்தான் வாழ்கிறோம், நாங்களும் இந்நாட்டின் குடிமக்கள்தான்’ என்பதனை அவ்வப்போது அரசாங்கத்திற்கு நினைவுறுத்த வேண்டிய அவல நிலையில் நாம் இன்னமும் இருக்கிறோம் என்பதும் உண்மைதான்.

ஆனால் தீபாவளிக்கு 2 நாள் விடுமுறை இல்லையே என்ற ஆதங்கம்தான் நம் சமுதாயத்தின் இப்போதைய முதல்நிலை குறைபாடு?

தேர்வில் நம் பிள்ளைகள் 10 A க்கள் எடுத்தும் அரசாங்க பல்கலைக்கழகங்களில் போதிய அளவு இடமில்லை, இடம் கிடைத்தாலும் விரும்பும் துறைகளில் படிக்க இயலவில்லை. ஒவ்வொரு ஆண்டும் மெட்ரிக்குலேஷன் வகுப்புகளில் அதிக இடங்கள் கேட்டு கேட்டு அலுத்துப் போனதுதான் மிச்சம். தேர்வில் திறமையான மதிப்பெண்கள் கிடைத்தும் நம் செல்வங்களுக்கு அரசாங்க உபகாரச் சம்பளம் கிடைப்பதில் குளறுபடி.

நம் இளைஞர்களுக்கு முறையான வேலை வாய்ப்புகள் இல்லை, குற்றச்செயல்களை குறைக்க ஆக்ககரமானத் திட்டங்கள் போதிய அளவு  இல்லை.ஆயிரக்கணக்கான அடிதட்டு இந்தியர்களுக்கு பிறப்புப் பத்திரங்கள் மற்றும் அடையாள அட்டைகள் போன்ற முறையான ஆவணங்கள் இன்னமும் இல்லை. – கிடைக்க வழியின்றி தவிக்கிறார்கள்

இவைகள்தான் நம் சமுதாயத்தின் இப்போதைய தலையாய குறைபாடுகள். இதற்காக மறியல் செய்யலாம் மகஜர் கொடுக்கலாம், கோபப்படுவதிலும் கூட அர்த்தமிருக்கிறது – தவறில்லை.

நாட்டின் மக்கள் தொகையில் நாம் 7 விழுக்காட்டிற்கும் குறைவுதான்.இந்நிலையில் தீபாவளிக்கு ஒரு நாள் தைபூசத்திற்கு ஒரு நாள் என நமக்கு 2 நாள்கள் விடுமுறை உண்டு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

நடப்பு அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சற்று கூர்ந்து கவனித்தோமேயானால் நமக்குக் கிடைத்துள்ள  இந்த 2 நாள்களையும் நழுவ விடாமல் இருக பிடித்துக் கொண்டாலே பெரிய விசயம் எனத் தோன்றுகிறது.

நாட்டின் மக்கள் தொகையில் 24 விழுக்காட்டுக்கும் மேலாக உள்ள சீனர்கள் தங்களுக்குக் கிடைத்துள்ள 2 நாள் விடுப்பை பெருமனதோடு ஏற்றுக்கொண்டு உழைப்பில் கவனம் செலுத்துகின்றனர் –  தங்களுடைய பொருளாதாரத்தை வளப்படுத்துகின்றனர்.

ஆக இந்நாட்டில்  நம் சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் விசயங்கள் நிறையவே இருப்பதால் அரசியல் கட்சிகளோ அரசு சாரா இயக்கங்களோ அல்லது யாராக இருந்தாலும் ஒன்றன் பின் ஒன்றாக அவற்றை அடையாளம் கண்டு அரசாங்கத்தின் பார்வைக்கு முறையாக கொண்டு செல்வதே விவேகமான செயலாகும்.

அதை விடுத்து தீபாவளிக்கு 2 நாள் விடுமுறை வேண்டும் என அடம் பிடித்து ஆர்ப்பரிப்பதில் அர்த்தமில்லை அவசியமுமில்லை என்றே நமக்குத் தோன்றுகிறது.