தமிழ்ப்பள்ளிகளின் அவலம் தொடர்கதைதானா?

இராகவன் கருப்பையா – அண்மையில் அறிவிக்கப்பட்ட அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது நம் சமூகம் மீது ஆகக் கடைசியாக விழுந்துள்ள மிகப் பெரிய பேரிடிகளில் ஒன்று என்றால் அது மிகையில்லை.

குறிப்பாக தமிழ்ப்பள்ளிகளின் நலன் அத்திட்டத்தில் முற்றாக புறக்கணிக்கப்பட்டிருக்கும் சூழலில் நம் செல்வங்களின் எதிர்காலம் ஓரளவு சூனியமாகும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன என்பது மிகவும் வேதனைக்குரிய விசயம்.

அண்மைய காலமாக மிகச் சிறந்த அடைவு நிலையை பதிவு செய்து வரும் தமிழ்ப்பள்ளிகளின் நிலைமை இத்தகைய குளறுபடிகளினால் ‘பால் பொங்கும் வேளையில் தாழி உடைந்த’ கதையாகிவிடக் கூடாது.

கடந்த காலங்களில் ஆண்டொன்றுக்கு குறைந்த பட்சம் 50 மில்லியன் ரிக்கிட் ஒதுக்கப்பட்ட நிலையில் இவ்வாண்டு ஒன்றுமே இல்லையென்ற ஆதங்கத்திற்கு எதிராக பல்வேறு தரப்புகளும் ஆட்சேபங்களை தெரிவித்து வருகிற போதிலும் அதற்கான தீர்வு அருகில் இருப்பதாகத் தெரியவில்லை.

இன்னும் எவ்வளவு நாள்களுக்கு நம் உரிமைகளுக்காக இவர்களிடம் கெஞ்சிக்கொண்டிருக்க வேண்டிய அவலத்தில் அவதிப்படுவது என்று கூட தெரியவில்லை! உண்மையில் பார்க்கப்போனால் படைத்தவனைத் தவிர எவரிடமும் அஞ்சியும் கெஞ்சியும் வாழக்கூடாது!

தமிழ், சீனப் பள்ளிகளை இழுத்து மூடவேண்டும் என்ற சில அய்யோக்கியர்களின் அறிவிலித்தனமான அரைக்கூவல்களுக்கு இது அடித்தளமாக அமைந்துவிடுமோ என்ற அச்சம் கூட நம்மை அசைக்கத்தான் செய்கிறது.

இம்முறை மூவினப் பள்ளிகளுக்கும் மொத்தமாக ஒரு தொகையை அரசாங்கம் ஒதுக்கி வைத்திருக்கிறது என அமைச்சர் சரவணன் சமாதானம் கூறுகிறபோதிலும் அவருடைய விளக்கம் நமது அச்சத்தையும் ஐயப்பாடுகளைக் களையும் வகையில் தெளிவாக இல்லை என்பதுதான் உண்மை.

புதிய கல்வியமைச்சர், புதிய நிதியமைச்சர், புதிய அரசாங்கம், புதிய பாணி, என்றெல்லாம் அவர் சொல்லும் சாக்கு போக்கு ஏற்புடையதாக இல்லை. ஏனென்றால் இந்நாட்டில் நாம் புதியவர்கள் அல்ல. நமது தேவைகள் புதியவையல்ல. தமிழ்ப் பள்ளிகள் இரண்டு நூற்றாண்டுகளை வெற்றிகரமாகக் கடந்து வேரூன்றி நிற்கின்றன என்பது வரலாறு.

இந்திய சமுதாயம் பொறுமை காக்க வேண்டும் என ஆலோசனைக் கூறி அமைச்சரவை உறுப்பினர் என்ற வகையில் அவருடைய வேலையை அவர் செய்துவிட்டார்.

ஆனால் நாட்டிலுள்ள 523 தமிழ்ப்பள்ளிகளுக்கும் பிரத்தியேகமாக எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது, அது எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும், யார் மூலமாக வழங்கப்படும் முதலிய விவரங்கள் இதுவரையில் இல்லை என்பது நமக்கெல்லாம் ஏமாற்றமளிக்கும் ஒரு விசயம்தான்.

மற்றொரு கோமாளித்தனம் என்னவென்றால் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் நிதியமைச்சரும் அவருடைய 2 துணையமைச்சர்களும் அவையில் இல்லாததுதான். இந்த அலட்சியப் போக்கினால் அம்மூவருமே துணை சபாநாயகரின் கண்டனத்திற்குள்ளானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் வாடையே இல்லாமல் பொருளகம் ஒன்றில் தலைமை செயல்முறை அதிகாரியாக இருந்த ஒருவரிடம் திடீரென நாட்டின் மிகப்பெரிய பொறுப்பான நிதித்துறையை ஒப்படைத்தால் இந்த லட்சணம்தான் – வேரென்ன எதிர்பார்க்க முடியும்?

இது குறித்து கருத்துரைத்த ம.இ.க. தலைவர் விக்னேஸ்வரன், இம்முறை சமர்ப்பிக்கப்பட்டது நல்லதொரு வரவு செலவுத் திட்டமல்ல என்பதனை ஒப்புக்கொண்டுள்ளார்.

விக்னேஸ்வரனின் தைரியத்தை பாராட்டத்தான் வேண்டும். ஏனென்றால் கடந்த காலங்களில் ம.இ.க. தலைவர்கள் கண்மூடித்தனமாக வரவு செலவுத் திட்டங்களுக்கு ‘ஆமாம் சாமி’ போட்டது நமக்குத் தெரியும். காலங்காலமாக அவர்கள் பொதுவாக சொல்வது ஒன்றுதான்: ‘பரிவுமிக்க பட்ஜெட’.

தமிழ்ப்பள்ளிகளின் உரிமை அரசாங்க சாசனத்தில் உள்ளதால் நிதி ஒதுக்கப்படாதது ஒரு பெரிய குறைபாடுதான் என்று குறிப்பிட்ட விக்னேஸ்வரன் இந்திய சமுதாயம் ஓரங்கட்டப்பட்டுள்ளதாகக் கருதப்படுவது நியாயமான ஒன்றுதான் என்றார்.

சூதாட்டம் மற்றும் மது விற்பனை போன்றத் துறைகளின் வழி அரசாங்கத்திற்குக் கிடைக்கும் வருமான வரி இஸ்லாமியர்களின் பயன்பாட்டுக்கு ஆகாது என்பதால் அந்தத் தொகையை தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு அரசு வழங்கவேண்டும் எனக் கோரும் மகஜர் ஒன்று விரைவில் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நல்ல யோசனை, புதிய சிந்தனை. அரசுக்கு, குறிப்பாக பாஸ் கட்சியினருக்கு சவால்மிக்கதொரு செயல்பாடாக இது அமையும் என்பதில் ஐயமில்லை. நாம் கேட்காமலேயே காலந்தொட்டு அரசாங்கம் இதனை நமக்கு செய்திருக்க வேண்டும் – அனால் ஏனோ தானோ என்று இருந்துவிட்டார்கள்.

ம.இ.க. கோருவதைப் போல உண்மையான வரி வசூலிப்பு கணக்கு விபரங்களை ஒளிவு மறைவு இன்றி அரசாங்கம் காட்டுமேயானால் குறிப்பிட்ட அந்தத் தொகை அனத்துத் தரப்பினரையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனினும் அதற்கான சாத்தியத்தை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த முயற்சியில் ம.இ.க. வெற்றி பெற்றால் வலுவிழந்துக் கிடக்கும் அந்த கட்சிக்கு ஒரு புதிய உத்வேகம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

இருந்த போதிலும் இந்த விவகாரத்தில் அரசியல்வாதிகளை மட்டுமே முழுமையாக நாம் நம்பியிருக்க முடியாது.

ஒரு மிதவாத அரசாங்கத்தில் 4 அமைச்சர்கள் இருந்த போதே விமோச்சனத்திற்கு வழியில்லாத போது நடப்பு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒற்றை அமைச்சர் எவ்வளவு தூரம்தான் போகமுடியும்!

எனவே சீனப்பள்ளிகளுக்கு ‘டொங் ஸொங்’ என்ற அமைப்பைப் போல தமிழ்ப்பள்ளிகளுக்கு அறனாக விளங்கும் ‘மலேசியத் தமிழ் அறவாரியம்’ இந்த விசயத்தில் ஒரு ஆக்ககரமான பங்காற்ற வேண்டும்.

நாட்டின் தலைசிறந்த கல்விமான்களைக் கொண்டு செயல்படும் அந்த அறவாரியம் பிரதமரிடம் நேரடியாகவே மகஜர் ஒன்றை சமர்ப்பிப்பது செயலூக்கம் உடையதாக இருக்கும்.

அதன் வழி, அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடுகள் இடையில் சிதறாமல் உதவி தேவைப்படும் உரிய பள்ளிகளுக்கு முறையாகவும் முழுமையாகவும் சென்றடைவதையும் அந்த வாரியம் உறுதி செய்ய வாப்பிருக்கிறது.