இராகவன் கருப்பையா –நம் நாட்டில் கோறனி நச்சில் தொடர்ந்து பரவாமல் இருக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற போதிலும் அம்முயற்சிகள் அனைத்தும் எந்த அளவுக்கு செயலூக்கம் கொண்டவையாக இருக்கின்றன என்று தெரியவில்லை.
கடந்த மார்ச் மாதத் தொடக்கத்தில் நம்மைத் தாக்கிய முதல் அலை அம்மாதம் 26ஆம் தேதியன்று மொத்தம் 235 பேர் புதிதாக பாதிக்கப்பட்ட நிலையில் உச்சத்தைத் தொட்டது.
எனினும் அதிரடி நடவடிக்கையாக நாடு முழுமைக்கும் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டை அமலாக்கம் செய்த அரசாங்கம் பிறகு படிப்படியாக தளர்வு செய்து ஜூலை மாத இறுதி வாக்கில் இந்தத் தொற்றை ஏறக்குறைய ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தது நமக்குத் தெரியும்.
ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று நோயின் அன்றாடத் தொற்று 1ஆகக் குறைந்து மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதன்பிறகு சில சுயநல அரசியல்வாதிகள் மேற்கொண்ட சித்து விளையாட்டினால் 2ஆவது அலைக்குள் வலுக்கட்டாயமாக நாம் தள்ளப்பட்டது எல்லாரும் அறிந்த வரலாறு.
பிறகு சன்னம் சன்மாக அதிகரிக்கத் தொடங்கிய நோயின் தாக்கம் கடந்த அக்டோபர் மாதம் 24ஆம் தேதியன்று அதன் தினசரி பாதிப்பை 4 இலக்குக்குக் கொண்டு சென்றது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது மட்டுமின்றி அரசியல்வாதிகள் மீதான சினத்தை மேலும் அதிகரித்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
கடந்த நவம்பர் மாதம் 24ஆம் தேதியன்று 2188ஆக உயர்ந்த அதன் அன்றாடத் தொற்று கொஞ்சமும் தளராத நிலையில் இன்று வரையில் மக்களின் உயிர்களுக்கும், பெரும்பாலான தொழில்களுக்கும், வெகுசன மக்களின் வாழ்வாதாரத்திற்கும் மட்டுமின்றி நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் பெரும் மிரட்டலாகவே உள்ளது.
மார்ச் மாதத்தில் அரசாங்கம் மேற்கொண்ட முழுமையான முடக்கத்தினால் நோயை கட்டுப்படுத்த முடிந்தது என்ற போதிலும் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளானதால் இம்முறை வேறு மாதிரியான யுக்தி கையாளப்பட்டது பாராட்டத்தக்க ஒன்றுதான்.
இருந்த போதிலும் மாவட்டம் மற்றும் மாநிலம் வாரியாக அமலாக்கம் செய்யப்பட்டுள்ள வெவ்வேறு நிலையிலான நடமாட்டக் கட்டுப்பாடு எதிர்பார்த்த அளவுக்கு ஆக்கரமாக இல்லை என்பதுதான் உண்மை.
தினசரி புதிய பாதிப்புகளுக்கான கடந்த ஒரு மாதகால எண்ணிக்கையை பார்ப்போமேயானால் இடையிடையே 10 நாள்களைத் தவிர இதர எல்லா தினங்களுமே 4 இலக்கைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. புதியத் தொற்றின் எண்ணிக்கை எந்த அளவுக்கும் குறைந்தபாடில்லை.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக அரசாங்கம் அறிவித்து வரும் தளர்வுகள் எதன் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது என்று தெரியவில்லை. ஏதோ இத்தொற்று முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதைப் போல் உள்ளது அரசின் போக்கு.
கடந்த வாரம் வரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கும் மேற்பட்டோர் ஒரு காரில் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை. ஆனால் நூற்றுக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சாரை சாரையாக ‘பாசார் மாலாம்’ எனப்படும் இரவு சந்தைகளுக்கு படையெடுக்க அனுமதிக்கப்பட்டது வேடிக்கையான விசயம்.
தலைநகரில் எல்.ஆர்.டி. மற்றும் எம்.ஆர்.டி போன்ற இலகு ரயில்களும் பெரும்பாலான பேருந்துகளும் கூட கொஞ்சமும் கூடல் இடைவெளி இல்லாத நிலையில் ‘ஃபுல் ஹவுஸாக’ பயணிகளை அடைத்துக்கொண்டு வலம் வருகின்றன. இதனையெல்லாம் யார் கண்காணிப்பது என்று தெரியவில்லை.
சாலைகளில் சில சோதனைச் சாவடிகளிலும் கூட குளறுபடிதான். நெகிரி செம்பிலானில் இருந்து செலாங்கூருக்கு வெங்காய மூட்டைகளை ஏற்றி வந்த ஒரு லோரி ஓட்டுனர் மாநில எல்லையை கடப்பதற்கு 2 வெங்காய மூட்டைகளை காவல் அதிகாரியிடம் லஞ்சமாகக் கொடுக்க நேர்ந்த கேவலமான ஒரு சம்பவமும் கூட கடந்த வாரம் அம்பலமானது.
தினந்தோறும் கட்டுப்பாட்டை மீறி கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையை அறிவிக்கும் மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பும் கூட கடந்த வாரம் மலாக்காவில் சக அரசியல் தலைவர்களுடன் கூடல் இடைவெளி இல்லாமல் அமர்ந்து அளவளாவியப் படங்கள் சமுக வலைத்தளங்களில் வெளியாகி அவரைக் காட்டிக் கொடுத்தன.
கடந்த செப்டம்பர் மாதம் வரையில் புதியத் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட இடத்தை அல்லது பேரங்காடி நிலையத்தை அறிவித்த சுகாதாரத் துறை தலைமை இயக்குனர் டொக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா திடீரென வழக்கத்தை மாற்றிக்கொண்டு வெரும் திரள்களுக்கு பெயரிட்டு அறிவிப்பு செய்யத் தொடங்கிவிட்டார்.
குறிப்பிட்ட இடத்தின் பெயரை அல்லது கடைத்தொகுதியை அம்பலப்படுத்தினால் அங்கு வியாபாரம் பாதிக்கப்படுகிறது என்ற அவருடையக் கூற்று ஏற்புடையதாக இல்லை. ஏனென்றால் உண்மை நிலவரம் அறியாத அப்பாவி மக்கள் அதுபோன்ற இடங்களுக்கு தொடர்ந்து போய்க்கொண்டிருந்தால் தொற்றை கட்டுப்படுத்த வாய்ப்பில்லாமல் போகிறது.
திரள்களுக்கு சுயமாக பெயரிட்டு அடையாளம் காண்பது அரசாங்கப் பதிவேட்டுக்கு பயனாக இருக்கலாம். ஆனால் பொது மக்களுக்கு இந்த நடைமுறை உதவுவதாகத் தெரியவில்லை. ஏனென்றால் சம்பந்தப்பட்ட அந்தத் திரள்களை அடையாளம் கண்டு அத்தகைய இடங்களை அவர்களால் தவிர்க்க இயலாது.
நோயை கட்டுப்படுத்தும் அரசாங்க முயற்சிகளில் இதுபோன்ற குளறுபடிகள் தொடர்ந்து நீடித்தால் தீர்வுக்கான வாய்ப்புகள் தூரமாகிக்கொண்டுதான் இருக்கும்.
நாட்டில் இதுவரையில் மொத்தம் 74 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சீனாவின் எண்ணிக்கையான 86 ஆயிரத்தை விரைவில் நாம் கடந்துவிடுவோம் போல் தெரிகிறது.
மக்கள் தொகையின் விகிதாச்சாரப்படி பார்த்தால் இந்தோனேசியாவை விட நமது நிலைமை சற்று மோசமாகவே உள்ளது.
ஆக இந்த கொடியத் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு துள்ளியமாக ஆராய்ந்து மேலும் ஆக்ககரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதை விடுத்து ஏனோதானோ என தொடர்ந்து செயலாற்றிக்கொண்டிருந்தால் மக்களின் அவதிக்கும் விரைவில் தீர்வு பிறக்காது என்பதுதான் உண்மை.