பேய்ச்சி நாவலின் தடை, பெரும் கவனத்தை ஈர்த்த தண்டனை – நவீன் 

அண்மையில் எழுத்தாளர் ம.நவீனுடைய ‘பேய்ச்சி’ என்ற தமிழ் நாவலை மலேசிய உள்துறை அமைச்சு தடை செய்தது. நமது நாட்டு மக்களுக்கு அரசமைப்பு சட்டம் 10-இன் கீழ் அடிப்படையான கருத்து சுதந்திரம் உண்டு. இருப்பினும் நாட்டின் பாதுகாப்பை பேணவும் பொதுநலனை காக்கவும் பேச்சு மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்தும் சுதந்திரத்தில் சில கட்டுப்பாடுகளும் உள்ளன.

இருப்பினும் இந்த பேய்ச்சி நாவலின் தடையில், அரசாங்கம் போதுமான ஆதரங்களுடன் தடை செய்ததா அல்லது நவீனுக்கு எதிராக செயல்பட்டவர்களின் உந்துததால் தடைசெய்யப்பட்டதா என்ற வினாவும் எழுகிறது. இந்த நாவலினால் எந்த வகையில் நாட்டின் அல்லது நாட்டு மக்களின் பொது நலன் அல்லது பண்பு நலன் பாதிக்கப்பட்டுள்ளது என்ற வினாவுக்கான பதில் இந்தத்தடையில் இல்லை.

இதை ஒட்டி பேய்ச்சி நாவலின் ஆசிரியர் ம.நவீனின் நேர்காணல்:

“கேள்வி : பேய்ச்சி நாவல் தடை உங்களுக்கு என்ன மாதிரியான மனநிலையைக் கொடுத்துள்ளது.

ம.நவீன் : நான் ஒரு தமிழ் எழுத்தாளன். மலேசிய நாட்டில் பிறந்தவன். நான் எழுதுவது இந்த நிலத்தின் கதைகளையே அன்றி இந்த நிலத்தின் மக்களுக்காக மட்டுமல்ல. நான் என்னை ஓர் உலக எழுத்தாளனாகவே முன்வைக்கிறேன். என் எழுத்துகளுக்கு உலகில் தமிழ் வாசிக்கும் வாசகர்கள் பலர் உள்ளனர். இருப்பினும்  நமது நாட்டின் தடையால் எனக்கு பாதிப்பும் என்ற நிலைக்கு மாறாக எப்போதைக்கும் இல்லாத பெரும் கவனமே கிடைத்துள்ளது.

கேள்வி: ஆனால் மலேசியாவில் இனி இந்த நாவலுக்கு எந்த விருதோ அங்கீகாரமோ கிடைக்காது. நூலகங்களிலும் பொதுவாசிப்புக்கு இல்லாமல் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வைக்கப்படலாம் அல்லவா?

ம.நவீன்: நான் கடந்த பதினைந்து ஆண்டுகளில் எந்த விருதுகாகவும் என் நூல்களை அனுப்பியதில்லை. என் பெயரை முன்மொழிய யாரிடமும் கேட்டதும் இல்லை. நூல் பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும் அதற்கேற்ப இலக்கியம் படைக்க வேண்டும் என்ற வரைமுறைகளுக்குள் நான் என்னை அடக்கிக்கொள்வதில்லை. ஒரு படைப்பை கட்டற்ற மனநிலையில் எழுதுவதுதான் என் பணியே தவிர அதை சந்தைப்படுத்தும் அல்லது பரவலாக்கும் வணிக இலக்கிய நோக்கு இல்லை.

கேள்வி: உங்கள் நாவல் ஆபாசம் என்ற கருத்தின் அடிப்படையில் தடை செய்யப்பட்டுள்ளது. அப்படி என்றால் அதை வணிக நோக்கம் என எடுத்துக்கொள்ளலாமா?

ம.நவீன்: இந்த நாவல் 1981இல் கெடா மாநிலத்தில் உள்ள லுனாஸ் என்ற பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து ஏராளமானவர்கள் இறந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த சாராய சாவுக்கு காரணமான பெண் தோட்டத்தில் அதிகாரத்தில் உள்ளவர்களை தனது கவர்ச்சியால் அடக்குகிறாள். ஆனால் அவள் அங்கே பணிபுரியும் எளிய மனிதர்களிடம் தன் அதிகாரத்தைக் காட்டுகிறாள். அப்படி அவள் தவற்றை கண்டுப்பிடிக்கும் மணியம் என்பவர் அவளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துகிறார். அப்போது தன் சாதியால், நிறத்தால், சமூக அந்தஸ்தால் இழிவாகப் பார்த்த ஒரு பெண்ணை சிதைப்பதன் மனப்பிறழ்ச்சியை நான் எழுதியுள்ளேன். இந்தப் பகுதியே நாவலில் ஆபாசம் என சொல்லப்படுகிறது. ஆனால் இதை சித்தரிக்காமல் மனிதனின் அந்தரங்க மனம் எவ்வாறு செயல்படுகிறது எனச் சொல்ல முடியாது.

கேள்வி: இந்த ஒரு பகுதிக்காகதான் நாவல் ஆபாசம் எனச் சொல்லப்பட்டதா?

ம.நவீன்: ஆம்! 280 பக்கங்கள் கொண்ட இந்த நாவலில் எஞ்சி இருப்பதெல்லாம் விஷச் சாராயத்தால் தோட்ட மக்கள் இறந்த காட்சிகள், ரப்பர் தோட்டம் அழிக்கப்பட்டு செம்பனை நடவு வந்த வரலாறு, ஓலம்மா என்ற பெண் தனியாக தன் கம்பத்தில் நிலத்தை நம்பி பிழைத்த கதை என்றே செல்லும்.

கேள்வி: ஒருவேளை நீங்கள் குறிப்பிடும் அந்தக் காட்சியை இன்னும் தன்மையாகச் சொல்லியிருக்கலாமோ…

ம.நவீன்: கலையில் அடிப்படை அம்சம் சொல்வதல்ல; காட்டுவது. ஒன்றை நுணுக்கமாகக் காட்சிப்படுத்துவதே நாவலுக்குறிய கலைவடிவம். அதிலும் நாவலின் மைய முடிச்சாக இருக்கும் பாலியல் வல்லுறவு காட்சியை ஒற்றை வரியில் சொல்லிவிட்டு செல்வது படைப்புக்குச் செய்யும் துரோகம்.

கேள்வி: நாவலில் கொச்சை வார்த்தைகளும் இடம்பெறுவதாகச் சொல்லப்படுகிறதே.

ம.நவீன்: தோட்ட மக்களின் பேச்சு மொழியில் கொச்சை சொல் என்பது சாதாரணம். ஒரு புனைவில் நாவலின் ஆசிரியர் பேசும் பகுதி இருக்க மக்களின் வட்டார மொழியும் இடம்பெறும். எனவே இங்கு கொச்சையாக உள்ளதென சொல்லப்பட்டதெல்லாம் மக்களின் பேச்சு மொழியைத்தான்.

கேள்வி: எழுதுவது எழுத்தாளனின் உரிமைதான். ஆனால் கொச்சையான சொற்களை பயன்படுத்தும்போது அதற்கு எழும் கண்டனங்களில் முன்பகை இல்லாதவர்களும் இருக்கவே செய்கின்றனர் இல்லையா, அவர்கள் கோபம் நியாயமானதுதானே?

ம.நவீன்: Samsara எனும் திரைப்படத்தைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். விருதுகளை வென்ற திரைப்படம். Pan Nalin உலகத் திரைப்பட இயக்குனர்களில் முக்கியமானவர். அப்படத்தில் பல இடங்களில் நிர்வாண, புணர்ச்சிக் காட்சிகள் இடம்பெறும். எந்த ஆபாசப்படத்தை விடவும் தீவிரமான காட்சிகள். ஆனால், ஏன் அப்படத்துக்கு உலக அளவிலான விருதுகள் குவிகின்றன? அந்தக் காட்சி அப்படத்தில் இடம்பெறுவதற்கான நியாயத்தைக் கொண்டிருப்பதால் அல்லவா? அந்தக் காட்சியை மட்டும் தெரிவு செய்து ஒருவருக்கு அனுப்பினால் அது அதிர்ச்சியைக் கொடுக்கத்தானே செய்யும். அதை ஆபாசம் எனத் தூற்றுவார்கள் அல்லவா? ஆனால், அறிந்து கொள்ளும் எண்ணம் உள்ளவர்கள், உண்மையைத் தேடிச் சென்று அப்படத்தைப் பார்த்த பின்னர் தங்கள் கருத்தைக் கூறுவர். மொத்தத் திரைப்படத்தில் அக்காட்சியின் நியாயத்தை அறிவர். சர்ச்சைக்குள் உழன்று அதன் வழி தங்கள் இருப்பை காட்டிக்கொள்ள முயல்பவர்கள் வெளியில் நின்று ‘ஆபாசம்’ என்று கூறுவர். என் நாவல் விசயத்திலும் நடந்தது இதுதான். சில வரிகளை, சில பகுதிகளை மட்டுமே வாசித்து அதற்குக் கருத்துச் சொன்னவர்கள் அதிகம்.

கேள்வி : உங்களிடம் நாவலில் உள்ள சொற்களை நீக்கி அல்லது மாற்றி மறுபிரசுரம் செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டதா?

ம.நவீன் : இல்லை. அப்படி கேட்டிருந்தாலும் அதற்கு ஒப்புக்கொண்டிருக்க மாட்டேன். புனைவின் அசல் தன்மை எவ்வகையில்  பொதுநலத்தையும் பண்பையும் பாதிக்கிறது என்ற வினாவுக்கு விடை வேண்டும். இலக்கியப்படைப்பு நாளிதழ் வாசிக்கும் பொது வாசகர்களுக்கானதல்ல. அதன் கலைத்தன்மையை அறியாதவர்களிடம் வழங்கி கருத்து கேட்கும்போதுதான் அபத்தமான பதில்கள் வருகின்றன. ஆனால் ஜெயமோகன் உள்ளிட்ட தமிழின் மிகச்சிறந்த வாசகர்கள் அந்நாவலை தமிழில் முக்கிய நாவல் பட்டியலில் வைப்பதை காணலாம். வாசகர்களின் தன்மையை எனது புனைவு உயர்த்தும் என்ற நம்பிக்கை உண்டு. இந்தத்தடை தரமான விமர்சன கண்ணோட்டம் கொண்ட வாசகர்களுக்கு கொடுத்த தண்டனையாக கருதுகிறேன்.

கேள்வி: நூலை தடை செய்யும் முன்னர் உங்களிடம் தெரிவிக்கப்பட்டதா?

ம.நவீன்: இல்லை. என்னிடம் எந்த விசாரணையும்  நடத்தப்படவில்லை; என் தரப்பு நியாயங்கள் கேட்கப்படவில்லை. இது குறித்து கடிதமும் இப்போதுவரை கிடைக்கவில்லை.

கேள்வி: ஆனால் தடை செய்வதற்கு முன் அதில் தேர்ந்த அதிகாரிகளால் ஆராயப்பட்டுதானே அந்த முடிவை எடுத்திருப்பார்கள்.

ம.நவீன்: நாளிதழ்களில் வந்த தவறான அறிக்கைகளின் அடிப்படையில் அவர்களது செயல்பாடுகள் இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.

கேள்வி : தவறென்றால்… எப்படி?

ம.நவீன் : இந்த நாவலுக்கு எதிர்ப்பாக நாளிதழில் அறிக்கைகளை வழங்க முனைப்புடன் ஒரு சிலர் செயல்பட்டனர்.

கேள்வி: இதை பலிவாங்கல் என எடுத்துக்கொள்ளலாமா?

ம.நவீன்: மலேசிய இலக்கியத்தில் கடந்த 50 ஆண்டுகளில் விமர்சன மரபு என்ற ஒன்று உருவாகவே இல்லை. நாங்கள் வல்லினம் மூலம் அதை உருவாக்க முனைகிறோம். அதற்கான எதிர்வினைகள் கருத்தியல் ரீதியாக எழலாம். தொடர்ந்த இலக்கிய விமர்சனங்கள் வழிதான் இச்சூழலுக்கு எழுத்தாளர்களைப் பழக்கப்படுத்த முடியும். இலக்கிய விமர்சனம் என்பது தீர்ப்பல்ல; அது ஓர் உரையாடலுக்கான தொடக்கம் எனும் மனப்பாங்கை உருவாக்க முடியும்.

கேள்வி:இதுபோன்ற சிக்கல் உங்கள் புனைவுலகை பாதிக்கவில்லையா?

ம.நவீன்: சர்ச்சை நிகழ்ந்து கொண்டிருந்த காலத்திலோ நாவல் தடையுத்தரவு வாங்கிய பிறகோ நான் எழுதுவதை நிறுத்தவில்லை.  என் செயல்பாடுகளிலும் எழுத்திலும் எந்த மாற்றமும் நிகழவில்லை. சொல்லப்போனால் மேலும் உற்சாகமாகவே செயல்படுகிறேன். வேறுபட்ட வாசிப்பு உள்ள ஒருவரை என்னைப் போன்ற ஓர் எழுத்தாளன் அடைவதென்பது எவ்வளவு பணம் கொடுத்து விளம்பரம் செய்தாலும் கிடைக்காதது. அது நடந்ததால் பல புதிய வாசகர்களைப் பெற்றேன்.

கேள்வி : இதனால் ஏற்பட்ட பொருளியல் இழப்புகள் என்னென்ன?

ம.நவீன் : ஒன்றும் இல்லை. என் நூல்கள் பெரும்பாலனவைகள் தமிழக பதிப்பகம் வெளியிடுகின்றன. தேவைக்கு ஏற்பவே அதை தருவிக்கிறோம். மேலும் ஓராண்டுக்கு முன்பே நாவல் குறித்த சர்ச்சை எழுந்ததால் பலரும் ஆன்லைன் வழியே தமிழகத்திலிருந்து நூலை வாங்கி வாசித்திருப்பர். என்னிடம் விற்பனைக்கென எந்தப்பிரதிகளும் இல்லை.

கேள்வி : தடை செய்யப்பட்டதில் கவலை படும் அம்சம் என ஒன்றுகூட இல்லையா?

ம.நவீன் : உண்டு. புதிதாக எழுதவரும் இளம் தலைமுறை எழுத்தாளர்கள் தங்கள் படைப்பு மனத்தை சுயதணிக்கை செய்துக்கொள்வர். அது அவர்களது படைப்பின் கற்றற்ற சுதந்திரத்தை கட்டுப்படுத்தும். இவ்வேளையில் அந்த மனநிலையில் இருந்து அவர்கள் மீள வேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறேன்.

கேள்வி : எல்லோரும் இதுபோன்ற சிக்கலில் மாட்ட விரும்ப மாட்டார்கள் இல்லையா?

ம.நவீன் : கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மலேசியத் தமிழ் இலக்கியம் எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் இருந்துள்ளது. ஜனரஞ்சக இலக்கியத்தை முதன்மையாகக் காட்டுவது, தமிழக திரைப்பட பாடலாசிரியர்களை முன்னுதாரண இலக்கியவாதிகளாகக் காட்டுவது, பரிசுக்கு ஏற்றார்போல புனைவை படைப்பது என உலக இலக்கியப் போக்குடன் எந்த சம்பந்தமும் இல்லாமல் அவற்றின் வளர்ச்சி உள்ளது. நான் அச்சூழலை மாற்றும் பெரும் ஆர்வத்துடன் கடந்த 15 ஆண்டுகளாக உழைத்து வருகிறேன். ஒரு சூழலை மாற்ற உழைக்கும் ஒருவருக்கு இதுபோன்ற இடையூறுகள் வருவது சாதாரணம். அப்படி உழைப்பவன் வரலாற்றில் அது ஒரு சிறிய பகுதியே தவிர அதுவே அவனது முடிவல்ல. எனவே இலக்கியத்தில் புதிய போக்குகளை உருவாக்க அடுத்தத் தலைமுறையும் அஞ்சாமல், முடங்காமல் உழைக்க வேண்டும்.

கேள்வி : தடைக்குப் பின் உங்களைச் சார்ந்தவர்கள் என்ன கருத்துகள் கூறினர்.

ம.நவீன்: இலக்கியத்துக்கு வெளியில் உள்ளவர்கள் வருத்தம் தெரிவித்தனர். இலக்கியச் சூழலை அறிந்தவர்கள் வாழ்த்துகளைக் கூறினர். அவர்களுக்கு இந்தத் தடை ஒரு நூலுக்கு என்ன வெளிச்சத்தைக் கொடுக்கும் எனத் தெரியும். சில மூத்தப்படைப்பாளிகள் என்னைப்பார்த்தால் பொறாமையாக இருப்பதாகவும் கூறினர். நாவல் வெளிவந்தவுடன் தடை செய்யப்படவில்லையே. எனவே கடந்த ஒரு வருடத்தில் அது பரவலான வாசகர் பரப்பை எட்டிவிட்டது. இனியும் மின் நூல்வழியாக அது உரிய வாசகரை அடையும். தமிழகம் உள்ளிட்ட தமிழ் வாசகர்கள் உள்ள நிலங்களுக்கு இந்த நூல் செல்ல இந்தத் தடையும் ஒரு காரணம். அறத்துடன் செயல்பட்டால் இயற்கை உங்களுக்குத் துணை நிற்கும் என்பது இதைத்தான்.

கேள்வி : இனி என்ன செய்வதாய் உள்ளீர்கள்?

ம.நவீன் : எனக்கு முன்னோடிகள் பலர் உள்ளனர்.  புதிய கண்டுப்பிடிப்புகளை உருவாக்கிய விஞ்ஞானிகளின் கருத்துகளையும் நூல்களையும் தடை செய்த உலகம் இது. பலவிதமான அவதூறுகளால் முடக்கப்பட்ட நூல்கள் பின்னர் உலகில் நின்று நிலைக்கின்றன. எனவே எனக்கு நிகழ்காலத்தைப் பற்றிய கவலையில்லை. தொடர்ந்து எழுதுவதுதான் என் பணி. அதில் உண்மையாக இருப்பது மட்டுமே எப்போதும் என் விருப்பத்துக்குறியது.”

நாவல் தடை செய்யப்பட்டப்பின்னர் தமிழ் இலக்கியச் சூழலில் பலத்த விவாதம்  ஏற்பட்டுள்ளது. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், பிரான்ஸ், லண்டன் என பல நாடுகளில் உள்ள முன்னணி தமிழ் எழுத்தாளர்கள், திரைப்பட கலைஞர்கள், அமைப்புகள், இந்த தடைக்கு எதிராக தங்கள் கண்டனைகளை சமூக ஊடகங்கள் வழி பதிவு செய்து வருகின்றன. ஆனந்த விகடன், ஆஸ்திரிலிய அரசாங்க வானொலி போன்ற ஊடகங்கள் ஆதாரவான செய்திகளை வெளியிட்டுள்ளன என்கிறார் நவீன்.