நம் சமூகத்தில் கல்விக்காக வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர்கள் நிறையபேர் உள்ளனர்.
தனி மனித மேம்பாட்டுக்கு கடுமையான, விவேகமான உழைப்பு மிகவும் அவசியம் என்ற போதிலும் கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதற்கு ஏற்ப நம்மிடையே எண்ணிலடங்காதோர் கல்விக்கு அதி முக்கியத்துவம் கொடுத்து வருவதைக் காணமுடிகிறது.
வாழ்நாள் முழுவதும் அலைகள் போல ஒன்றன் பின் ஒன்றாக எதிர்கொண்ட சோதனைகளையும் சவால்களையும் வென்று கல்வி தொடர்பான தமது இலட்சியத்தை மட்டுமே குறிக்கோலாகக் கொண்டு பயணித்தவர்தான் டொக்டர் கருணாநிதி முருகையா.
தலைநகரில் இருந்து வடக்கே சுமார் 20 கிலோமீடடர் தொலைவில் உள்ள குவாங் நகருக்கு அருகில் உள்ள பிரிஸ்ட்டல் தோட்டத்தில் கடந்த 1957ல் பிறந்தவர்தான் இந்த கருணாநிதி.
இளம் பிராயத்திலேயே பெற்றோரை விட்டுப் பிரிய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட அவர் தமது தாத்தா பெரியசாமியின் பராமரிப்பிலும் பிற்காலத்தில் சிற்றப்பா கெங்காமுத்துவின் ஆதரவிலும் வளர்ந்து வந்தார்.
பிஞ்சு வயதிலேயே பெற்றோரின் பாசத்தை இழந்த கருணாநிதி பிரிஸ்ட்டல் தோட்டத்தில் அமைந்துள்ள தமிழ்ப்பள்ளியில் தமது ஆரம்பக் கல்வியை முடித்துக்கொண்ட பிறகு 1970ஆம் ஆண்டுத் தொடங்கி, அங்கிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரவாங் இடைநிலைப் பள்ளியில் ஐந்தாம் படிவம் வரையில் பயின்றார்.
கல்வியில் சிறந்து விளங்கிய அவர், வீட்டில் மனப்பாடம் செய்யும் போது அருகில் உள்ள எல்லா வீடுகளுக்கும் கேட்கும் அளவுக்கு சற்று உரக்கவே புத்தகங்களை வாசிப்பார். படிப்பதை மனதில் ஆழ பதிய வைக்க அந்த காலத்தில் இப்படித்தானே நாம் அனைவரும் படித்தோம்!
ஐந்தாம் படிவத்தில் சிறப்பு தேர்ச்சி பெற்ற போதிலும் பொருளாதார வசதி இல்லாததால் கருணாநிதியால் மேல்படிப்பை தொடர இயலாமல் போனது வேதனையான ஒன்று.
தமது தாத்தாவும் சிற்றப்பாவும் மறைந்த பிறகு மீண்டும் ஆதரவற்ற நிலையில் பரிதவித்த கருணாநிதிக்கு உதவிக்கரம் நீட்டியது அவருடைய நெருங்கிய நண்பர்கள் மட்டும்தான்.
தலைநகர் செந்தூல் பகுதியில் உள்ள கம்போங் எம்.பி.எஸ். எனும் இடத்தில் வாடகைக்கு எடுத்த ஒரு சிரிய அறைதான் அவருடைய வீடு. கல்விப் பயணத்திற்கான தமது வியூகங்களை அங்கேயே வரையத் தொங்கிய கருணாநிதிக்கு தொடர்ந்து பக்கபலமாக இருந்த எல்லா நண்பர்களையும் அண்மைய காலம் வரையில் கூட நன்றி உணர்வோடு நினைவுக்கூற அவர் மறந்ததில்லை.
வீட்டில் ‘டியூஷன்’ வகுப்புகளை நடத்திய கருணாநிதி அதன் வழி கிடைத்த வருமானத்தில் தலைநகர் ‘கூன் கல்லூரி’யில் தமது மேல் படிப்பை தொடர்ந்து மேற்கொண்டார். கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை போதிப்பதில் சிறந்து விளங்கிய கருணாநிதியிடம் கல்வி கற்க நிறைய பள்ளிப் பிள்ளைகள் வரிசைபிடித்து நின்றதும் ஒரு பொற்காலம்தான்.
இந்நிலையில் தமது மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் வழங்கிய ஊக்குவிப்பு மற்றும் உந்துதலின் பேரில் தலைநகர் பாசார் ரோட் அருகில் ‘இன்ஸ்டிடியூட் ஸ்ரீ பக்தி’ எனும் பெரியதொரு ‘டியூஷன்’ நிலையத்தை அமைத்த கருணாநிதியின் வாழ்வில் முதல் முறையாக வசந்தம் வீசத்தொடங்கிறது.
5ஆம் வகுப்பு முதல் 5ஆம் படிவம் வரையில் ஏறக்குறைய 1000 மாணவர்கள் வரையில் ‘டியூஷன்’ பயின்ற அந்த நிலையம் தலைநகரில் மிகவும் பிரசித்திப்பெற்ற ஒரு கல்வி நிலையமாக விளங்கியது.
இருந்த போதிலும் அங்கு பணிபுரிந்த தமது ஊழியர்களின் கீழறுப்பு நடவடிக்கைகளினால் 10 ஆண்டுகளிலேயே அந்நிலையம் மூடுவிழா கண்டது மிகவும் வருத்தமான ஒரு விசயம்.
எனினும் வாழ்வின் போராட்டங்களில் இயல்பாகவே ஊறிப்போயிருந்த கருணாநிதி, விடா முயற்சியாக மலேசிய விவசாய பல்கலைக்கழகத்தில் தமது பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்ததும் ஒரு சாதனைதான்.
பிறகு ஒரு நல்ல வேலையில் அமர்ந்த அவர் 1990களின் மத்தியில் திருமணம் புரிந்தார். அதனைத் தொடர்ந்து ஓரிரு ஆண்டுகளில் பிறந்த மகன் சக்திவேலின் வளர்ச்சியில் பூரிப்படைந்திருந்த சமையத்தில்தான் கருணாநிதின் வாழ்வில் மற்றொரு பேரிடி விழுந்தது.
சற்றும் எதிர்பாராத வகையில் தமது அன்பு மனைவி கடுமையான தொழுநோய்க்கு பலியான சம்பவம் அவருடைய மனதை அதிகம் பாதித்துவிட்டது என்றதான் சொல்ல வேண்டும்.
அதனைத் தொடர்ந்து தனிமரமாகவே நின்று சக்திவேலை வளர்த்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளான கருணாநிதி அவ்வளவு போராட்டங்களுக்கிடையிலும் மேல் படிப்புக்கான தமது இலக்கிலிருந்து கிஞ்சிற்றும் விலகவில்லை.
தலைநகர் ‘டெய்லர்ஸ் கல்லூரி’யில் விரிவுரையாளராக பணியாற்றிக் கொண்டே பகுதி நேரத்தில் படித்து நிர்வாகத் துறையில் முதுகலை பட்டமும் பிறகு 2010ஆம் ஆண்டில் முனைவர் பட்டப்படிப்பையும் முடித்து சாதனை படைத்தார் கல்வியாளர் கருணாநிதி.
இதன் வழி டொக்டர் கருணாநிதியாக தம்மை உயர்த்திக்கொண்ட அவர், ‘கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு’ என்பதற்கு ஏற்ப தமது மகனுடன் கனடாவின் தொரொந்தோ நகருக்கு குடிபெயர்ந்து மேலும் படிப்பைத் தொடர முற்பட்டார்.
ஆனால் அங்கும் ஒரு தடங்கள் இருக்கும் என்று அவர் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. மலேசிய விவசாய பல்கலைக்கழகத்தில் அவர் முடித்த பட்டப்படிப்பை கனடிய அரசாங்கம் அங்கீகரிக்காததால் மீண்டும் புத்தகத்தை கையிலெடுத்தார் கருணாநிதி.
கனடிய குடிநுழைவு சட்டம் தொடர்பான பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்த அவருக்கு அந்நாட்டில் நிரந்தர குடிநுழைவுக்கான விசாவை பரிசீலிக்கும் ஒரு நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவில் வேலை கிடைத்தது.
சுய கல்வியறிவுக்காகவும் பிறகு அன்பு மகன் சக்திவேலின் நலனுக்காகவும் தமது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த கருணாநிதிக்கு சொந்த உடல் நலத்தில் கவனம் செலுத்த நேரமில்லாமல் போனது மிகவும் சோகமான ஒரு விசயம்.
நீரிழிவு நோய்க்கு தமது கால்களை இழந்த போதிலும், தன்னம்பிக்கையும், உற்சாகமும், வாழ்க்கையில் மேலும் மேலும் சாதிக்க வேண்டும் என்ற வெறித்தனமான வேட்கையும் துளியளவுக் கூட மங்காத நிலையில் தமது இலக்கை நோக்கி பயணித்த கருணாநிதி காலனிடமிருந்து தப்ப இயலவில்லை.
வாழ்க்கையின் பெரும்பகுதியில் சோகங்களை மட்டுமே சந்தித்த அவருடைய உயிர் கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி இம்மண்ணுலகை விட்டுப் பிரிந்தது.
எவ்விதமான போராட்டங்களுக்கிடையிலும் வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் இளம் தலைமுறையினருக்கு ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்து மறைந்தார் கருணாநிதி.
மகன் சக்திவேல் தற்போது தொரொந்தோவில் பொருளகம் ஒன்றில் பணிபுரிந்தவாரே தமது தந்தையின் சுவடுகளை பின்பற்றி பகுதி நேரமாக உயர் கல்வியைத் தொடர்கிறார்.

























