‘பி.எஸ்.எம். – குறை மதிப்பிடக்கூடாத ஒரு கட்சி’ – ஜே.டி. லோவ்ரென்சியர்

கடிதம் | நான் முற்றிலும் தவறாகக்கூட இருக்கலாம், ஆனால் மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) தொடர்பான இந்த எழுத்து, நம் உள்ளூர் ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவில்லை.

பெரும்பாலும், இது சைபர் துருப்புக்களின் தாக்குதலுக்கு ஆளாகும் சாத்தியக்கூறுகளும் இருக்கலாம்.

நிச்சயமாக, பல ஆய்வாளர்கள் இந்தக் கடிதத்தின் கூறுகள் பொய்யானவை என்று நிரூபிக்க பல முயற்சிகளில் ஈடுபடலாம், பல அரசியல்வாதிகள் பி.எஸ்.எம், குறித்த என் கருத்துகள் முட்டாள்தனமானவை என்றுகூட எண்ணலாம்.

ஆனால் உண்மையில், குடிமக்களுக்கான நலன் பற்றி பேசும், அவர்களுக்குச் சேவையாற்ற எப்போதும் தயாராக இருக்கும் ஒரே அரசியல் கட்சி பி.எஸ்.எம். மட்டும்தான்.

ஒரு தெளிவான மனசாட்சியுடன் செயல்படும் சில ஊடகங்களில், இச்சிறிய கட்சி பற்றிய செய்திகள் வெளியாகின்றன, நாட்டில் ஓரங்கட்டப்பட்ட, நலிந்த, சுரண்டப்பட்ட சமூகங்களுக்காகப் பி.எஸ்.எம். எவ்வாறு கடுமையாக போராடிவருகிறது என்பதைத் தெளிவாக அவை வெளிப்படுத்துகின்றன.

எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டிலும், இக்கட்சியின் உறுப்பினர்கள் பெயர் அடிப்படுவதை நீங்கள் கேட்கவோ பார்க்கவோ முடியாது.

அக்கட்சியின் தலைவர்களும் உறுப்பினர்களும் எந்தவொரு மெகா பங்கு வர்த்தகத்திலும் ஈடுபடாமல், பல மில்லியன் ரிங்கிட் சலுகை பெற்ற வணிகங்களில் நிழல் பிரதிநிதிகளாக இயக்காமல், மிகச் சாதாரணமான வாழ்க்கை வாழ்பவர்கள்.

பத்து வகையான கார்களை ஓட்டுவதையும், ஆடம்பரப் படகுகள் வைத்திருப்பதையும், ‘பெலாஜர் சாம்பில் சுத்தி’ (கல்விச் சுற்றுலா) என ஆடம்பரப் பயணங்கள் மேற்கொள்வதையும், பிராண்டட் சூட்’களை அணிந்துகொள்வதையும், விலைமதிப்பற்ற மோதிரங்களையும் கைக்கடிகாரங்களையும் அணிவதையும் நான் இதுவரைப் பார்த்ததில்லை.

நாட்டின் செல்வத்தைச் சமமாக விநியோகிப்பதற்கான செயற்பாட்டில் பல தசாப்தங்களாக பி.எஸ்.எம். போராடி வருகிறது.

ஆமாம், பலர் இனி இந்தக் கட்சியைப் பற்றி தொடர்ந்து எழுதுவார்கள்.

பி.எஸ்.எம். அழுகிக்கொண்டிருக்கும் ஒரு கிழங்கு என்பதால் அல்ல, மாறாக, மோசமான செல்வத்தையும், சுய-செறிவூட்டலுக்கான சட்டவிரோத முயற்சிகளைப் பாதுகாப்பதற்காக, பல அரசியல் கட்சிகள் சற்றும் வெட்கமின்றி, ஜனநாயகம், மனித உரிமைகள், சிறந்த ஆட்சி எனக் கூவி பூசிமெழுகிக் கொண்டிருப்பதிலிருந்து பி.எஸ்.எம். நம்மைக் காப்பாற்றும் என்பதால்.

உயரடுக்கிற்கும் தொழிலாளர் வர்க்கத்திற்கும் இடையிலான பெரும் பிளவு வளரும்போது; அரசியல் ரீதியாக இணைக்கப்பட்டவர்களுக்கும் சாதாரண குடிமக்களுக்கும் இடையில், பி.எஸ்.எம்.மின் வருகையும் அதன் இருப்பும், மிகப் பொருத்தமானதாக மிக மிகத் தேவையானதாக அமையும்.

இந்தக் கட்சியின் அரசியல் பாதையில், பல தடைகளை அள்ளி எறிந்தபோதிலும், அதன் கொள்கைகளில் உண்மையாகவும் விசுவாசமாகவும் இருக்கும் இந்தக் கட்சியின் மீது நாம் கவனம் செலுத்த வேண்டிய நேரம் தற்போது வந்துவிட்டது.


ஜே.டி. லோவ்ரென்சியர், மலேசியாகினி வாசகர்

மொழியாக்கம் செய்யப்பட்டக் கடிதம்