தமிழ் மொழி வளர்ச்சியில் எழுத்தாளர் சங்கத்தின் பங்கென்ன?

இராகவன் கருப்பையா- மலேசியாவில் இயங்கிவரும் எண்ணற்ற தமிழ் மொழி சார்ந்த இயக்கங்களில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

கடந்த 60 ஆண்டுகளாக இந்நாட்டில் கோலோச்சி நிற்கும் தனித்தன்மை வாய்ந்த அச்சங்கம் தமிழ் இலக்கிய வளர்ச்சி, எழுத்தாளர் ஊக்குவிப்பு மற்றும் நூல் வெளியீடு, போன்ற பல்வேறு பணிகளை செவ்வனே மேற்கொண்டு வருவது வெள்ளிடை மலை.

நாடலாவிய நிலையில் அதிக அளவில் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் அச்சங்கம் முக்கிய பங்காற்றி வருகிறது என்றால் அது மிகையில்லை.

இத்தகைய பணிகளையெல்லாம் பாராட்டத்தக்க வகையில் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் அச்சங்கம் அடிப்படை தமிழ் வளர்ச்சிக்கு என்ன செய்கிறது என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

குறிப்பாக அண்மைய காலமாக நம் நாட்டில் தமிழ்ப் பள்ளிகளுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் பல திசைகளிலிருந்தும் வந்த வண்ணமாக இருக்கும் சவால்கள் நிறைந்த மிரட்டல்களை சமாளிப்பதற்கு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் என்ன செய்தது என்று தெரியவில்லை.

அண்மையில் அறிவிக்கப்பட்ட இவ்வாண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் தமிழ்ப் பள்ளிகள் எந்த அளவுக்கு ஓரங்கட்டப்பட்டன என்பதை நாம் நன்கு அறிவோம்.

இத்தகைய நிலைப்பாட்டில் நாம் அனைவருமே வியக்கும் வகையில் பல்வேறு தரப்பினர் தமிழ் பள்ளிகளின் வளர்ச்சிக்கும் மாணவர்களின் மேம்பாட்டுக்கும் இரவும் பகலும் அரும்பாடுபடுவதையும் நம்மால் காணமுடிகிறது.

நாடு தழுவிய நிலையில் உள்ள தமிழ் சார்ந்த அரசு சாரா இயக்கங்கள், கோயில்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், தலைமையாசிரியர் சங்கங்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் போன்ற பலதரப்பட்ட ஆர்வலர்கள் களமிறங்கிப் பாடுபடுகின்றனர்.

அண்மையில் கூட மஞ்சோங் பாரதி முன்னேற்ற இயக்கம், நட்பே துணை கூட்டுறவுக் கழகம் மற்றும் ஊத்தான் மெலிந்தாங் குழல் வலையொளித் தளம், ஆகிய 3 இயக்கங்களும் ஒன்று சேர்ந்து பேராக் மாநிலம் முழுவதுக்குமான மாபெரும் பிரச்சாரம் ஒன்றைத் தொடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்விசயத்தில் நாட்டிலுள்ள தமிழ்ப் பத்திரிகைகளின் பங்கும் அளப்பரியது என்றே சொல்ல வேண்டும்.

அரசாங்க வானொலியான மின்னல் எஃப்.எம்.மின் செய்தி வாசிப்பாளர்கள் கூட ‘தமிழ்ப் பள்ளியே நம் தேர்வு’ எனச் செய்திகளின் இறுதியில் முழக்கமிடுகின்றனர்.

ஆனால் தமிழ்ப் பள்ளிகளுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லாததைப் போலக் கண்டும் காணாமலும் இருக்கும் எழுத்தாளர் சங்கத்தினரின் போக்கு ஆச்சரியமாகவே உள்ளது.

பிள்ளைகளை தயவு செய்து தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்புங்கள் எனக் கெஞ்சிக் கூத்தாட வேண்டிய அவல நிலையில் நாம் இருப்பது ஏதோ உண்மைதான்.

ஆனால் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அவ்வாறு செய்வதில் தவறில்லை, வெட்கப்படவேண்டிய அவசியமும் இல்லை.

தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சியிலும் மாணவர்களின் மேம்பாட்டிலும் தங்களுக்கும் மிகுந்த கடப்பாடு உள்ளது என்பதை அச்சங்கத்தினர் மறந்து விடக்கூடாது.

தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் இங்குள்ள தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை.

எனவே அவர்களுடன் நட்பு பறைசாற்றி பக்கம் நின்று படம் பிடித்து மகிழ்வதில் பயனில்லை. அதற்குச் செலவாகும் நேரத்தையும் பணத்தையும் நம் மாணவர்களின் வளர்ச்சிக்குச் செலவு செய்தால் எதிர்கால எழுத்தாளர்களின் உருவாக்கத்திற்கு வித்திட்டதைப் போலாகும்.

சங்கத்தில் இப்போது உறுப்பினர்களாக இருப்பவர்களில் கிட்டதட்ட எல்லாருமே ஒரு காலகட்டத்தில் தமிழ்ப் பள்ளி மாணவர்கள்தான். அவர்கள் அனைவரும் தேசியப் பள்ளிகளிலோ சீனப் பள்ளிகளிலோ பயின்றவர்களாக இருக்க முடியாது.

எனவே தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சியிலும் மாணவர் மேம்பாட்டிலும் இதர இயக்கங்களுக்கு இணையாக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் முனைப்புக் காட்டவேண்டியது அவசியமாகும்.

இங்குதான் தமிழ் எழுத்தாளர்கள் உருவாகிறார்கள் என்பதை மறக்கலாகாது.

எழுத்தாளர்கள் சம்பந்தப்பட்ட பணிகள் மட்டுமே தங்களுடையது,

இதர விசயங்களை எல்லாம் மற்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று வெறுமனே இருந்துவிடக்கூடாது.

தமிழ்ப் பள்ளிகள் இல்லையென்றால் எதிர்காலத்தில் தமிழ் எழுத்தாளர்கள் இல்லை. தமிழ் எழுத்தாளர்கள் இல்லையென்றால் ஒரு காலகட்டத்தில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் அஸ்தமனமாகிவிடும் என்ற  நிதர்சனத்தை அவர்கள் உணரவேண்டும்.