`மலேசிய இந்து சங்கத்தின் தலையீடு தமிழ்ப்பள்ளிகளில் தேவையில்லை!`

கருத்து | தமிழ், இந்திய மாணவர்கள் கல்வி பயிலும் தமிழ்ப்பள்ளிகளில் எந்த மதம் சார் அமைப்புகளும் மூக்கை நுழைக்கக்கூடாது; தமிழ்ப்பள்ளிகள் மதச்சார்பின்மையைப் பேணுதல் வேண்டும்.

தமிழ்ப்பள்ளிகள் என்பன தமிழ்மொழி, தமிழ்ப் பண்பாடு, தமிழ் விழுமியங்கள் முதலியவற்றின் காப்பகங்களாகத் தொன்று தொட்டு விளங்குகின்றன. எனவே, தமிழ் சார்ந்த பற்றியங்களான தனித்தமிழ், தமிழியம், தமிழர் வரலாறு முதலியவற்றைத் தமிழ்ப்பள்ளிகளில்தான் கற்பிக்க இயலும்.

ஆனால், இவற்றைப் பயிற்றுவித்தலை இந்து மதத்திற்கு எதிரான கற்பிதங்களைத் திணிப்பதாக மலேசிய இந்து சங்கம் குற்றஞ்சாட்டுகிறது, இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது.

தனித்தமிழ் என்பது தமிழ்மொழிக் காத்தலின் முகாமை கூறாகும். பிறமொழி கலவாதத் தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்துதல், பிறமொழி சொற்களுக்குத் தமிழில் பெயரிடல் தமிழியக் கோட்பாட்டின் அடிப்படையாகும்.

எடுத்துக்காட்டுக்கு, ‘computer’ எனும் சொல் தமிழில் கணினி என மொழியாக்கம் செய்யப்பட்டது. ‘காரியதரிசி’ என முன்பு வழங்கிய சொல் ‘செயலாளர்’ என நற்றமிழில் மாற்றப்பட்டது. ‘நமஸ்காரம்’ எனும் சொல்லுக்குப் பகரமாக ‘வணக்கம்’ எனும் சொல் நிலைபேறானது. இந்தச் சொல்லாக்கங்கள், தமிழியக் கோட்பாட்டின் ஒரு கூறான தனித்தமிழ்ப் பயன்பாட்டின் வெளிப்பாடாகும்.

இதனை இந்து மதத்திற்கு எதிரான திராவிடச் செந்துணிபு (சிந்தாந்தம்) எனக் கூறுவது ஏற்புடையதன்று. தனித்தமிழ் இயக்க தோற்றுநரான பரிதிமாற் கலைஞரும் சிவனிய சமயத்தை ஏற்றொழுகிய தனித்தமிழ் இயக்க முன்னோடிகளான மறைமலை அடிகளும் அவர்தம் மகள் நீலாம்பிகை அம்மையாரும் இறைமறுப்பாளரோ, திராவிடக் கொள்கையாளரோ அல்லர்.

தைமுதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பது திராவிடர் கழகத்தினரின் கருத்தியல் மட்டும் அன்று; தமிழ்நாடு பச்சையப்பன் கல்லூரியில் 1927-இல், மறைமலையடிகளாரின் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் 500 அறிஞர்கள், அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்து எடுத்த முடிவே சுறவம் அல்லது தை மாதம் முதல் நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு என்பதை மலேசிய இந்து சங்கம் நினைவில் கொள்ள வேண்டும்.

மேழத் திங்கள் அல்லது சித்திரைத் திங்கள் முதல் நாள் இந்து மதத்தைச் சார்ந்தவர்களின் புத்தாண்டு, பொங்கல் தமிழர்கள் எனும் ஓர் இனக் குழுவின் புத்தாண்டாகும். இரண்டையும் ஆய்ந்தறிந்து தெளிவு பெறுமாறு வேண்டுகிறோம்.

மறைமலை அடிகளார்

தமிழின் மிகப்பெரிய அடையாளமாகக் கருதப்படும் பாவேந்தர் பாரதிதாசனும் இதனைப் பகர்ந்துள்ளார். இது தமிழக அரசியல் தாக்கம் அல்ல, மாறாக, தமிழர் விழுமியங்களை மாணவர்களுக்கு அறியச் செய்யும் நோக்கமுடையதாகும்.

ஐயா பெரியாரின் கற்பிதங்கள் தமிழ்ப்பள்ளிகளின் பாடநூல்களில் இடம் பெறுதல் ஏற்புடையதன்று என மதம் பேணும் சில தரப்பினர் சாடுகின்றனர். ஆனால், அதே பாடப்புத்தகத்தில் பாரதியார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் பற்றியச் செய்திகளும் இடம் பெற்றுள்ளன. பெரியார் ஒரு சீர்திருத்தக் கருத்தியலாளர், பகுத்தறிவாளர், சாதியத் தீண்டாமை, பெண்ணியம் பற்றி பேசியவர். தமிழ்க் குமுகாயத்தில் மிகப்பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரைக் கடவுள் மறுப்பாளராக மட்டும் பார்ப்பது வரலாறு அறியாதோர் செய்யும் செயல் என நினைவுறுத்த விழைகிறோம்.

சுருங்கக் கூறின், தமிழ்ப்பள்ளிகளில் இந்து மதம் சாராத இந்திய, தமிழ் இசுலாமிய, கிருத்துவ மாணவர்களும் பயில்கின்றனர். எனவே, பன்முகத்தன்மை கொண்ட தமிழ்ப்பள்ளிகளில் ஒரு குறிப்பிட்ட மதத்தின் கூறுகளைப் புகுத்தக்கூடாது. இது தமிழ்ப்பள்ளிகளின் மாண்பைச் சிதைப்பதுடன் நம் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையையும் குறைக்க வித்திடும்.

இந்து மதம் பால் அக்கறை மிகுந்த மலேசிய இந்து சங்கம், இது போன்ற தவறான, அடிப்படையற்றப் பரப்புரைகளைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்த நாங்கள் கடமைபட்டுள்ளோம்.

இந்து மதம் சார்ந்த பற்றியங்களின் மேன்மைக்கு நீங்கள் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம், அதனால் தமிழ்ப்பள்ளிகளில் தங்களின் தலையீட்டைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


யோகேந்திரன் தீபன் சங்கு, மலேசியச் செந்தமிழர்ப் பேரவை, சொகூர் மாநில ஒருங்கிணைப்பாளர்