இராகவன் கருப்பையா –தலைநகர் அம்ப்பாங் வட்டாரத்தில் அண்மையில் நடந்த ஒரு உண்மை சம்பவம்.
‘பீசாங் கோரேங்’ எனப்படும் வாழைப்பழ பலகாரம் வாங்குவதற்கு மலாய்க்கார மாது ஒருவரின் அங்காடிக்கடைக்குச் சென்ற ஒரு இந்திய இளைஞரின் திடுக்கிடும் அனுபவமே அந்த நிகழ்வு.
உங்களுக்கும் இந்த பலகாரம் செய்யத்தெரியுமா என எண்ணெய் சட்டியில் வெந்துக்கொண்டிருந்த உளுந்து வடையை சுட்டிக்காட்டி வினைவிய அந்த இளைஞருக்குக் கிடைத்த பதில், ‘ஆமாம், இது எங்களுடைய பாரம்பரிய பலகாரம், மலாய் மொழியில் நாங்கள் இதனை வடை(vadai) என்று அழைக்கிறோம், உங்கள் தமிழ் மொழியில் இதன் பெயர் என்ன’ என்று கேட்டு அசத்தியிருக்கிறார் அந்த மலாய்க்கார மாது.
அதிர்ச்சியில் தன்னிலை மறந்து உறைந்து போன அவ்விளைஞர் வாழைப்பழ பலகாரம் கூட வாங்ஙாமல் திரும்பிவிட்டார்.
இந்நாட்டில் பொதுவாக நமது நிலை என்ன என்பதற்கு இந்த சம்பவம் நல்லதொரு உதாரணம்.
அதிரசத்தை அழகாகச் செய்து இரவு சந்தைகளில் விற்பனை செய்கிறார்கள் மலாய்க்காரர்கள். பைகளில் அடைத்து பேரங்காடி நிலையங்களிலும் கூட வினியோகம் செய்கின்றனர்.
பூரி தங்களுடைய பாரம்பரி உணவு என பறைசாற்றி உணவகமே நடத்துகிறார்கள்.
அப்பளத்தை அக்கக்காக பொரித்து தங்களுக்கே உரிய நொறுக்கு தீனி என்கின்றனர்.
பால் அப்பத்தையும் கூட தங்களுடையது என இப்போது உரிமை கொண்டாடுகிறார்கள்.
இதற்கெல்லாம் அவர்களை நாம் குற்றம் சொல்ல முடியாது. இது அவர்களுடைய சாமர்த்தியம் என்று கூட சொல்லலாம். ஏதாவது ஒரு வகையில் தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ உணர்ந்தோ உணராமலோ நாமே இந்நிலைமைக்கு வித்திட்டிருக்கக் கூடும்.
கடந்த வாரத்தில் நம் சமூகத்தைச்சார்ந்த 170க்கும் மேற்பட்ட அரசு சாரா இயக்கங்கள் மேற்கொண்ட ஒரு ‘புத்திசாலித்தனமான’ காரியம்தான் நம்மை இப்படி சிந்திக்க வைக்கிறது.
தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாளா அல்லது உழவர் தினமான தைத்திங்களா, சித்திரை ஒன்றாம் தேதி இந்து புத்தாண்டா, ஆகியவற்றை இவர்களே கேள்விகளாக்கி தங்களுக்கிடையே தீர்வுகாண முடியாமல் அரசாங்கத்திடம் கொண்டு சென்றது மக்களை பெரும் சினத்திற்குள்ளாக்கியுள்ளது.
நம்முடைய கலை, கலாச்சாரம், பாரம்பரியம், வரலாறு தொடர்பான ஒரு விசயத்திற்கு மலாய்க்காரர்களிடமா போய் நீதி கேட்டு நிற்பது, என்ற நம் சமுகத்தின் ஆதங்கம் நியாயமான ஒன்றாகவே படுகிறது.
இதுவெல்லாம் அரசாங்கத்திற்கும் அரசாங்க நடவடிக்கைகளுக்கும் நிர்வாகத்திற்கும் அப்பாற்பட்ட விசயங்களாகும்.
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேல் கோறனி நச்சிலின் பெருந்தொற்றுக்கு எதிராக போராடி வருவது மட்டுமின்றி நிலையில்லாத அரசாங்கத்தில் அமர்ந்திருக்கும் அவர்கள் தங்களுடைய ஆட்சியை தற்காத்துக்கொள்வதற்கு அல்லும் பகலும் முல்லின் மேல் நடப்பதைப் போல காலத்தை நகர்த்துகின்றனர்.
இந்த சமயத்தில் அவர்களுக்கு சில்லறையாகத் தோன்றக்கூடிய, சம்பந்தமில்லாத ஒரு விசயத்தை அவர்களிடம் கொண்டு சென்று, தீர்வு கிடைத்துவிட்டது என மார்தட்டி பெருமை பீத்திக்கொள்வதில் அர்த்தமில்லை. அமைச்சர் சொல்லிவிட்டார் என்பதத்காக அது வேதவாக்காகிவிடுமா?
நம்மை சார்ந்த சில அரசு சாரா இயக்கங்கள் இப்படியே பொறுப்பற்ற வகையில் செயலாற்றிக்கொண்டிருந்தால் நாளடைவில் சித்திரா பௌர்ணமி, நவராத்திரி, மஹா சிவராத்திரி, திருக்கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, பங்குனி உத்திரம் போன்ற நமது இதர விசேஷ நாள்களையும் நாம் எப்போது கொண்டாடவேண்டும் என மலாய்க்காரர்களே நிர்ணயம் செய்யக்கூடும்.
‘ஊசி இடமளித்தால்தானே நூல் நுழையும்!’
சம்பந்தப்பப்ட அந்த இயக்கங்கள் நம் சமுகத்திற்கு பயனாக இயங்காவிட்டாலும் பரவாயில்லை, பாதகமான காரியங்களை செய்யாமல் இருந்தாலே போதும்.