கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டுவரும் 3 நமிடம் 42 விணாடிகளிலான ஒரு காணொலியைக் கண்டு சிரிப்பதா வெறுப்பதா வெட்கப்படுவதா கோபப்படுவதா என்றே தெரியவில்லை.
முன்னாள் மனிதவள அமைச்சர் குலசேகரனும் இந்நாள் மனிதவள அமைச்சர் சரவணனும் அந்த காணொலியில் நன்றாகவே கூத்தடிக்கின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
நம் சமுகத்தை பெருமளவில் பாதித்துள்ள ஒரு விவகாரம் தொட்டு அவ்விருவரும் காணொலியில் சர்ச்சை செய்து வெளியிட்டுள்ளது வெறும் மலிவு அரசியல் விளம்பரம் என்றே நமக்கு எண்ணத் தோன்றுகிறது.
தடுப்புக்காவல் மரணங்கள் குறித்து அமைச்சரவையில் சரவணன் பேசவிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ள தமிழ் தினசரி ஒன்றை சுட்டிக்காட்டி குலசேகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
‘அமைச்சரவை கூடும் வரை ஏன் காத்திருக்க வேண்டும்? இது முக்கியமான விவகாரம் என்பதால் இன்றே பிரதமரை சந்தித்து இதற்கு ஒரு தீர்வு காணவேண்டும்.’
‘அதோடு காவல்துறைக்கு எதிரான விசாரணை ஆணையம் அமைப்பது குறித்தும் தடுப்புக்காவல் மையங்களில் மறைக்காணி செயல்படுவது குறித்தும் உடனடியாக பிரதமரிடம் பேசவேண்டும்’, என்றும் குலசேகரன் அரைகூவல் விடுத்துள்ளார்.
அதற்கு சற்று காரசாரமாக பதிலுரைக்கும் சரவணன், ‘அமைச்சரவையில் பேசினால்தான் இதர அமைச்சர்களுக்கும் நம் சமுதாயத்தின் பிரச்னைகள் என்னவென்று தெரியும். உடனடி தீர்வு பிறப்பதற்கான வாய்ப்பிருக்கிறது’ என்றார்.
‘உங்கள் பேச்சைக்கேட்டு பிரதமரை நான் தனியாக சந்தித்தால் மற்றவர்களுக்கு அதுபற்றி தெரியாது.’
‘சரி நான் சொல்கிறேன், நீங்கள் போய்வாருங்கள்’ என்று அவர் சொல்ல வாய்ப்பிருக்கிறது.’
‘அவர் சொன்னாரா சொல்லவில்லையா என்று எனக்குத் தெரியாமல் போய்விடும்.’
‘அதனால்தான் அறிவுள்ள அமைச்சர்கள் முக்கியமான சமுதாயப் பிரச்னைகளை அமைச்சரவையில் பேசுவார்கள்.’
‘அமைச்சரவையில் பேசினால்தான் அதிகாரப்பூர்வமாக பதிவாகும். குசுனியில் பேசினால் எங்கும் பதிவாகாது’
‘அதுசரி, நீங்கள் அமைச்சராக இருந்தபோது காவல்துறை மீதான விசாரணை அணையம் பற்றியெல்லாம் ஏன் பேசவில்லை, அல்லது ரகசியமாகக் கேட்டேன் என்று சொல்வீர்களா’?
‘சும்மா எரிச்சலூட்டாதீர்கள். அடுத்த முறை நேரடியாக என்னிடம் பேசுங்கள்’, என்று சரவணன் தனது வாதத்தை சற்று முரட்டுத்தனமாக முடித்தார்.
ஆக இதுதான் நமது தலைவர்களின் லட்சணம் என்பதை நினைத்தால் மிகவும் கவலையாகத்தான் உள்ளது.
சமுதாயத்திற்காக போராடும் அமைச்சர்கள் இப்படிதான் பேசிக்கொள்வார்களா? சந்தி சிரிக்கும் அளவுக்கு தெருச்சண்டை போலல்லவா இருக்கிறது!
இவர்களை காணொலி ‘ஹீரோ’க்கள் என்றழைத்தால் அது மிகையில்லை.
64 ஆண்டுகால ம.இ.கா. தலைவர்கள் மட்டுமின்றி 2 ஆண்டுகால பக்காத்தானின் இந்தியத் தலைவர்களாளும் இந்த சமுதாயத்திற்கு ஒரு பிரயோஜனமும் இல்லை என்பது கசப்பான உண்மை.
நட்டாற்றில் துடுப்பற்ற படகைப் போலதான் இன்னமும் தொடர்கிறது நமது தலைவிதி.
இந்நிலையில் இனிமேலாவது விமோசனம் கிடைக்காதா என ஏங்கித் தவிக்கும் நமது சமுகத்தினருக்கு இப்படிப்பட்ட தலைவர்களின் ‘தெருச்சண்டை’ எல்லாம் ஒரு பின்னடைவுதான் என்பதில் ஐயமில்லை.
சரவணனுக்கு குலசேகரன் எரிச்சலூட்டினாரா அல்லது குலசேகரனுக்கு சரவணன் எரிச்சலூட்டினாரா என்று நமக்குத் தெரியாது, ஆனால் இவ்விருவருமே ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் எரிச்சலூட்டி வெறுப்பை வளர்த்துகொண்டார்கள் என்பதுவே நிதர்சன உண்மை.