இயங்கலை வழியாக கல்வி பயில தம்மிடம் மடிக்கணினி ஒன்று இல்லாததை ஒரு குறையாகவே தான் கருதவில்லை என்று கூறுகிறார் இவ்வாண்டின் எஸ்.பி.எம். தேரவில் 8ஏ எடுத்து சாதனை புரிந்துள்ள பிரவீனா சந்திரன்.
கடந்த வருடம் மார்ச் மாதத்திலிருந்து கோறனி நச்சிலின் கோரப்பிடியல் சிக்கி ஆண்டு முழுவதும் 5 மாதங்கள் கூட முழுமையாகக் கல்வியைத் தொடர இயலாமல் நம் மாணவர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியது வேதனையான ஒரு விசயம்தான்.
இந்த சூழலில் இயங்கலை வழியாக கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது நிறைய மாணவர்கள், குறிப்பாக வசதி குறைவான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கணினி போன்ற சாதனங்களின் துணையின்றி இன்னமும் அவதிப்படுகின்றனர்.
எனினும் இந்த குறைபாட்டை பொருள்படுத்தாமல் தம்மிடமிருந்த ஒரு பழைய கைபேசியைக் கொண்டே சமாளித்ததாகக் கூறுகிறார் தலைநகருக்கு வெளியே ஸ்ரீ கெம்பாங்கில் வசிக்கும் பிரவீனா.
நம்மிடம் இல்லாததைப் பற்றி சிந்திக்காமல் இருப்பதைக் கொண்டு இலக்கின் மீது உள்ள குறி தவராமல் செயல்பட்டால் நம்முடைய வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று கூறும் பிரவினா 3 பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் கடைகுட்டியாவார்.
கடந்த சில ஆண்டுகளாக பக்கவாத நோயினால் அவதிப்படும் தந்தை சந்திரன், வேலையிழந்து வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.
அம்மா பமிளா ஜுன் அண்டை வீட்டாரின் பிள்ளைகளை பராமரிக்கும் ‘பேபிசிட்டர்’ பணிகளை மேற்கொண்டுள்ளார்.
பிரவினாவின் அண்ணன் மாதேஷும் அக்கா தாட்சாயினியும் தனியார் உயர் கல்வி நிலையங்களில் பட்டப்படிப்பு பயின்று வருகின்றனர்.
இயங்கலை வழியாக கல்வி பயில்வது சற்று சிறமமான ஒன்றுதான். வீட்டுப்பாடங்களை கைபேசியிலேயே செய்து ஆசிரியர்களுக்கு அனுப்புவது மிகவும் சவால்மிக்கது. இருந்தாலும் எனக்கு வேறு வழியில்லை. குடும்ப சூழலை கருத்தில் கொண்டு சமாளித்துக் கொண்டேன் என்கிறார் இந்த ஸ்ரீ கெம்பாங்ஙான் இடைநிலைப் பள்ளி மாணவி.
‘வைஃபை’ எனப்படும் அருகலை தொடர்பில் அடிக்கடி துண்டிப்பு ஏற்படும் போதெல்லாம் மன உளைச்சலாகத்தான் இருக்கும். எனினும் இதுபோன்ற பிரச்னைகள் எல்லாம் நமது குறிக்கோலுக்கு இடையூறு என்று எண்ணிவிடக் கூடாது.
இடையிடையே நடமாட்டக்கட்டுப்பாடு இல்லாத வேளையில் ஒருசில மாதங்கள் பள்ளி செல்ல வாய்ப்பு கிடைத்த போது, தெரியாத விசயங்களை ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
தன்னம்பிக்கை எனும் நெருப்புப் பொறியை மனித மனம் தாங்கி நின்றால்
எண்ணியது எண்ணியவாறு நடக்கும்,
இடையூறுகள் எரிந்து சாம்பலாகும் என்று சூளுரைக்கும் பிரவீனா தனது வெற்றிக்கு பெரும் உந்துதலாக செயல்பட்ட பெற்றோருக்கும் ஆசிரியர்களும் நன்றிக்கடன் பட்டுள்ளதாக கூறினார்.
மனித வளத்துறையில் தனது பட்டப்படிப்பை மேற்கொள்ள இலக்கு கொண்டுள்ள பிரவீனா உபகாரச் சம்பளத்திற்கு விண்ணப்பிக்கப் போவதாகக் குறிப்பிட்டார்.