இராகவன் கருப்பையா தனது தந்தையை நினைவு கூறுகிறார் -ஆர்
‘அப்பா, கடவுள் தந்த வரமல்ல – வரமாகவே வந்த கடவுள்’ எனும் வாசகத்தில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்துள்ளதை பல காலக்கட்டங்களில் நாம் அனைவருமே உணர்ந்துள்ளோம்.
தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இருந்து கடந்த 1940ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் அம்மா ராஜம்மாவுடன் மலேசியா வந்தவர்தான் என் அப்பா எம்.எஸ்.கருப்பையா.
எஸ்.எஸ்.ரஜுலா எனும் பயணிகள் கப்பலின் வழி நாகப்பட்டினத்தில் இருந்து பினாங் துறைமுகம் வந்தடைய ஒரு வாரத்திற்கும் மேலானது என பிற்காலத்தில் அப்பா சொல்லக் கேட்டிருக்கிறோம்.
தமிழ் நாட்டிலிருந்து ஏற்கெனவே இங்கு புலம்பெயர்ந்திருந்த சில நண்பர்களின் உதவியால் தலைநகரில் உள்ள எச்.எஸ்.பி.சி. பொருளகத்தில் மாதம் 25 ரிங்கிட் சம்பளத்திற்கு சாதாரண ஊழியராக வேலையில் அமர்ந்தார் என் அப்பா.
குறைவான ஊதியமாக இருந்தாலும் நிலையான வருமானம். அதனாலோ என்னவோ அடுத்தடுத்து 8 குழந்தைகள்! எனினும் அந்தக் காலத்தில் நிறைய பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வது நம் சமூகத்தினருக்கு அபூர்வமான ஒரு விசயமில்லை.
தமிழை மட்டுமே மூலதனமாகக் கொண்டு தமது பணியைத் தொடங்கிய என் அப்பா, வேலையில் அமர்ந்த பிறகுதான் படிப்படியாக மலாய் மொழியையும் ஆங்கிலத்தையும் பேசக் கற்றுக்கொண்டார்.
மழைக்குக் கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கியிராத அம்மா முழு நேர குடும்பத்தலைவி. ஆதலால் மாதம் 25 ரிங்கிட்டைக் கொண்டே 10 பேர் கொண்ட குடும்பத்தை தனியாகவே நின்று காக்க வேண்டிய நிருபந்தம் அப்பாவுக்கு.
அந்த சமயத்தில் அவருக்கு இருந்த ஒரே கெட்டப் பழக்கம் ‘222 மார்க்’ பீடி மட்டுமே. அதற்கும் கூட மாதமொன்றுக்கு சுமார் 2 ரிங்கிட் மட்டும்தான் செலவு செய்வார்.
தமது 8 பிள்ளைகளுக்கும் கல்வியின் அவசியத்தை எப்போதும் வலியுறுத்தி வந்த அப்பா, நிலைமையை சமாளிப்பதற்கு பல வேளைகளில் பிறரிடம் கடன் வாங்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டார்.
அந்தக் காலத்தில் வட்டி தொழில் புரிந்த சீக்கியர்களிடம் பெற்ற கடன்களை அடைப்பதற்கு மாதக் கடைசியில் மொத்த சம்பளத்தையும் அவர்களிடம் கொடுத்துவிட்டு பிறகு அவர்களிடமே மீண்டும் கடன் வாங்கி வீட்டுக்கு வேண்டிய சாமான்களை வாங்கி வந்த கதைகள் எல்லாமே மறக்க முடியாத நினைவுகள் இன்றுவரையில்.
தீபாவளி ‘ஷோப்பிங்’ எனும் ஒரு குதூகலத்திற்கு அப்பா யாரிடமாவது கடன் வாங்கி வரும் அந்த கடைசி நாள் வரையில் காத்திருந்த காலங்கள் எல்லாமே ஒரு அலாதியான அனுபவம்தான்.
அதே போல்தான் தைப்பூசமும் கூட. பணமில்லையேல் பத்துமலையும் இல்லை எங்களுக்கு. கோயிலுக்கு எங்களை அழைத்துச் செல்ல இயலாமல் பல வேளைகளில் மனமுடைந்து காணப்படுவார் அப்பா.
பள்ளிக்கூடத்திற்கு அன்றாடம் எனக்கு 5 காசு கொடுப்பது வழக்கம். ஒரு நாள் அதனை மறந்துவிட்டு வேலைக்குச் சென்ற அவர், நான் பட்டினியாகிவிடுவேனோ எனும் பதற்றத்தில் வேலையிலிருந்து சிறிது நேரம் விடுப்பு எடுத்து தமது சைக்கிளில் என் பள்ளிக்கு விரைந்து வந்து அந்த 5 காசைக் கொடுத்துச் சென்றதை இன்றும் மறக்க முடியாது.
அந்த சமயத்தில் நாங்கள் குடியிருந்த கிராமத்தில் மின்சாரமோ குடிநீர் வசதியோ இல்லை. குளிப்பதற்கு கிணற்று நீர் என்ற போதிலும் குடிப்பதற்கும் சமையலுக்கும் தேவையான குழாய் நீர் கிடைக்குமிடம் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவு.
எனினும் ஒரு காண்டாக் கம்பின் இரு மருங்கலும் 2 பெரிய டின்களில் குடி நீர் நிரப்பி தமது தோலில் சுமந்து கால் நடையாகவே அன்றாடம் காலை 6 மணிக்கு தண்ணீர் கொண்டு வருவது அப்பாவுக்கு பழகிப்போன ஒன்று.
வாழ்நாள் முழுவதையும் பிள்ளைகளின் நலனுக்காகவே அர்ப்பணித்த அப்பா தமக்கென விரும்பியது ஒன்றுமில்லை.
நோயென்றால் என்னவென்றுத் தெரியாமல் ஒரு நாளும் மருத்துவமனை சென்றிராத அப்பா ஒரு நாள் காலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார்.
நான் ஒரு நல்ல வேலையில் அமர்ந்து ஓரிரு மாதங்களிலேயே மரணமடைந்த அப்பாவை இன்னும் கொஞ்சம் நாள்களுக்கு சிறப்பாக கவனிக்க முடியாமல் போயிற்றே என வாழ்நாள் முழுவதும் வருத்துகிறது என் மனம்!