கி. சீலதாஸ் – வரும் ஜூலை மாத முதல் நாள் சீன மக்கள் குடியரசு தமது கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடும். பலவிதமான சிக்கல்கள், துயர்கள், உயிர் இழப்புகள் எனத் தொடர்ந்து பரவும் கோவிட்-19 தொற்றுநோய் உலகை வருத்திக் கொண்டிருக்கும் இவ்வேளை சீனாவின் அணுகுமுறை எப்படியிருக்கும் என்பதைக் காண உலகம் காத்திருக்கிறது எனலாம்.
சீனா ஒரு வல்லரசு மட்டுமல்ல அது பொருளாதாரச் செழுமை கொண்டிருக்கும் நாடு. எனவே, உலக நடவடிக்கைகளில் தனது செல்வாக்கைப் பரப்பவும், பொருளாதாரப் பலத்தை வெளிப்படுத்தவும், பயன்படுத்தவும் தயங்காது. அப்படிப்பட்ட ஒரு தகுதியை, நிரந்தரமாக்கிக் கொள்ளவும் அது தயங்காது என்றும் உறுதியாகிவிட்டது என்று கூட சொல்லலாம். சீனா ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினர். எனவே, அது தமது நலனை, தம் மக்களின் நலனை மட்டும் கருத்திற்கொண்டு செயல்படுவது அது விரும்பும் உலகத் தலைமைத்துவ தகுதிக்கு உதவாது என்பது திண்ணம்.
சீனா கோவிட்-19 குறித்த எல்லா தகவல்களையும் உலக மன்றத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் எனும் கோரிக்கையை உதறித்தள்ளக்கூடாது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா சிறப்புடன் கொண்டாடப்படுவதைத் தடுக்கும் விஷ கிருமியாக கோவிட்-19 அமைந்துவிட்டது என்பதும் சிந்தையைக் கிளரும் உண்மையாகும். அந்தத் தொற்றுநோய் 2019ஆம் ஆண்டு சீன மாநிலமான வூஹானில் தோன்றி உலகெங்கும் பரவி பல கொடுமைகளுக்குக் காரணியாகிவிட்டது என்பதை மறுக்க முடியாது.
எனவே, உலகமே துயரில் மூழ்கி கிடக்கும்போது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவின் சிறப்பு குன்றிவிட்டது என்றால் மிகையாகாது.
ஆரம்பத்தில் இந்தக் கோவிட்-19 காட்டு விலங்குகளை மனிதர்கள் உட்கொண்டதால் ஏற்பட்டது என்று சொல்லப்பட்டது. ஆதாரப்பூர்வமான தடயங்கள் கிடைப்பது அரிதாக இருந்தன. பல விஞ்ஞானிகள் கோவிட்-19 மனிதனால் அல்லது ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்பதை ஏற்க மறுத்தனர். அதே வேளையில், இந்திய விஞ்ஞானிகள் சிலர் கோவிட்-19 ஆய்வகத்தில் ஏற்பட்ட கசிவால் வடிவம் கண்டது என்றனர்.
அமெரிக்க விஞ்ஞானிகள் சிலர் இந்திய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பைச் சாடினர். அவர்கள் இந்திய விஞ்ஞானிகள் விளம்பர வேட்டைக்காரர்கள் என்றும் பழித்தனர், தூற்றினர்.
கோவிட்-19 மனிதனால், மனிதனின் தவறால் அல்லது ஒரு விபத்தின் காரணமாக உருவாகியதா என்பதல்ல கேள்வி. அது எங்கே முதன் முதலில் தோன்றியது? அதைத் தடுக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் போதுமானவையா? கோவிட்-19 தன்னகத்தே கொண்டிருக்கும் ஆபத்தான விளைவுகளைச் சிரத்தையுடன், உடனடியாக வெளிப்படுத்தியதா சீனா என்ற கேள்விக்கு இன்றுவரை ஏற்றுக்கொள்ளத்தக்க விளக்கம் கிடைத்ததாகத் தெரியவில்லை.
இது ஒரு புறமிருக்க, சீனா கோவிட்-19 பற்றிய உண்மையை மறைக்கிறது, தெளிவான தடயங்களை வழங்க தயங்குகிறது என்ற குற்றச்சாட்டும் பரவியது. சீன அதிகாரிகள் விளக்கம் தருவதை விடுத்து தம்மைக் குறை கூறுவோர் மீது சீரிப் பாய்ந்தது. விளக்கம் வரவில்லை, வில்லங்கமான கண்டனங்கள்தான் வந்தன.
சட்டப்படி பார்க்கும்போது கோவிட்-19 பரவுவதற்குச் சீனாதான் காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டால் பாதிப்புற்ற நாடுகள் இழப்பீடு கோர வழியுண்டு. இதை சீனா உணர்ந்திருக்கும். எனவே, தம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு நியாயமற்றவை என்று அது சொல்வதையும் நாம் கவனிக்க வேண்டும். அதே சமயத்தில் தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட வேண்டுமாயின் சீனா ஆழமான, தெளிவான விசாரணைக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
உலக சுகாதார இயக்கம் கோரிய தகவல்களை சீனா இதுவரை நல்கவில்லை என்றும் அந்தத் தொற்றுநோய் குறித்த தனது கண்டுபிடிப்புகளைச் சீனா பகிர்ந்து கொண்டதா என்பதும் தெளிவாகவில்லை. மொத்தத்தில் சீனா முழு ஆதரவு நல்கவில்லை, நல்க மறுக்கிறது என்ற குற்றச்சாட்டும் இருக்கவே செய்கின்றன.
அப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமானவையா என்று கேட்கலாம். இப்பொழுது தேவைப்படுவது தடயங்கள் – அதாவது கோவிட்-19 தோன்றுவதற்கான காரணம், காரணங்கள் யாவை? அது பரவுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானவையா? பலன் தர தக்கவையா? பலன் தந்தனவா? என்பன போன்ற கேள்விகள் எழுவதைத் தடுக்க முடியாது என்பது மட்டுமல்ல அவற்றிற்கான விடைகளை சீனா தர வேண்டும். விடைகளைக் காண்பதற்குச் சீனா உதவ வேண்டும். தன் பொறுப்பை ஒரு போதும் தட்டிக்கழிக்கக்கூடாது. அதுமட்டுமல்ல, நியாயமான விசாரணைக்குத் தடையாக இருக்கக்கூடாது.
இத்தருணத்தில் சீனா பொறுப்பு மிகுந்த நிலையில் இருப்பதாகவே உலகம் நினைக்கிறது. அது தவறான கருத்தன்று. கோவிட்-19 தொடர்பான இந்திய விஞ்ஞானிகள் வெளியிட்ட கருத்தை ஏற்க மறுத்த புகழ்வாய்ந்த அமெரிக்க விஞ்ஞானிகள், இந்திய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளில் நியாயம் இருப்பதாக இப்பொழுது ஒப்புக்கொண்டதையும் உலகம் கவனிக்கிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் சீன அதிபர் ஷி ஜின்பிங், வுஹான் நகரில் பயணத்தை மேற்கொண்டுள்ளார். சீனா அந்தப் பயணத்தைப் பெரிதுபடுத்தவில்லை என்றபோதிலும் சிலர் இந்தப் பயணத்தில் முக்கியத்துவம் இணைக்கின்றனர். இதைப் பற்றி பிற நாடுகள் அதாவது சீனாவுடனான நட்பு பழுது ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் செயல்படுவதும் ஆச்சரியமே.
இச்சமயத்தில் மற்றுமொரு நிகழ்வைக் கவனிக்க வேண்டியுள்ளது. ஜிசெவன் (G7) எனப்படும் குழுமம் – கனடா, பிரான்ஸ், ஜெர்மன், இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட அமைப்பு சமீபத்தில் நடந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளில் கோவிட்-19 குறித்த விசாரணை தொடர வேண்டும் என்றும் அதற்கு சீனா ஒத்துழைக்க வேண்டுமெனவும் முடிவெடுத்துள்ளன.
வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் இந்த ஏழு நாடுகளில் பெரும்பான்மையானவை காலனித்துவ ஆக்கிரமிக்க வழி கண்டவை. அந்த வரலாற்று உண்மையை மாற்றி எழுத முடியாது என்றபோதிலும் சிந்தனையில், செயல்களில் திருத்தம் காணலாம் அல்லவா?
உலக சுகாதார அமைப்பு கோரிய தகவல்களைச் சீனா வழங்க வேண்டும். விசாரணை நடத்த உதவ வேண்டும் என்ற தீர்மானங்கள் சீனாவை இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது எனலாம். கோவிட்-19இன் மூலம் என்ன? இயல்பானதா அல்லது மனிதனால் சிருஷ்டிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கான விடையிலிருந்துதான் கோவிட்-19 குறித்த சீனாவின் பொறுப்பை நிர்ணயிக்க முடியும்.
ஜூலை முதல் நாள் சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும்போது மனித குலம் கேட்கும் கேள்விகளுக்குச் சீனாவிடமிருந்து தெளிவான பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாமா? கோவிட்-19 குறித்த திருப்திகரமான தகவல்களை வழங்கும் பொறுப்பு சீனாவுக்கு உண்டு என்பதை அது ஒரு காலம் மறக்கக்கூடாது.