மலேசியாவில் உணவகம் ஒன்றில் வேலை செய்த போது தாம் துன்புறுத்தப்பட்டதாக இந்திய பிரஜை ஒருவர் அந்நாட்டுத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி கடந்த ஒரு வார காலமாக சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருவது தெரிந்ததே.
தமிழகத்தின் கலைஞர் தொலைக்காட்சியில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற ஓரு சமூக நிகழ்ச்சியில் வேலாயுதம் எனும் அந்நபர் பரபரப்பாக அம்பலப்படுத்திய அந்தத் தகவல்கள் தமிழ்நாட்லும் இங்கும் அதிகமானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்தப் புகாரை மொழிபெயர்த்து அதற்கேற்றவாறு நடவடிக்கையில் இறங்கிய நமது காவல்துறையினரை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.
பெட்டாலிங் ஜெயாவில் அமைந்துள்ள அந்த உணவகத்தில் களமிறங்கிய காவல் துறை அதிகாரிகளின் துரித நடவடிக்கை மலேசியாவில் வேலை செய்யும் இலட்சக்கணக்கான இந்தியப் பிரஜைகளுக்கு ஒரு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கும் என்பது உறுதி.
வேலாயுதம் விவரித்தத் தகவல்களில் 100% உண்மை இருக்குமா என நம்மால் உறுதிப்படுத்த இயலாது என்ற போதிலும் ஆங்காங்கே அவ்வப்போது இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது குறித்து நாம் கேள்விப்படாமல் இல்லை.
சம்பந்தப்பட்ட அந்த உணவகத்தில் பணிபரியும் 2 இந்தியத் தொழிலாளர்களை காவல் துறையினர் மீட்டதோடு அதன் நிர்வாகிகளில் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக எற்கெனவே போதைப்பொருள் தொடர்பான குற்றப்பதிவுகள் இருப்பதாக காவல் துறையினர் உறுதிப்படுத்தியது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
ஒரு சில தினங்களுக்கு முன் பெட்டாலிங் ஜெயா மாவட்ட மன்ற அதிகாரிகளோடு மனித வளத்துறை மற்றும் உள்துறையமைச்சின் அதிகாரிகளும் அந்த உணவகத்தில் சோதனை செய்தனர் என்று நம்பப்படுகிறது.
தமிழகத்திலிருந்து இங்கு வேலை செய்ய வரும் தொழிலாளர்களை பல வேளைகளில் சம்பந்தப்பட்ட ஏஜெண்டுகளே ஏமாற்றியுள்ள செய்திகள் கடந்த காலங்களில் உள்நாட்டு பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
உதாரணத்திற்கு தச்சு வேலைக்கு ஆள் தேவை என்று அழைத்துவரப்பட்ட வேலாயுதம் உணவகத்தில் சேர்க்கப்பட்டார்.
இதே போல எண்ணிலடங்காத் தொழிலாளர்கள் நகர்ப்புறங்களுக்கு வெளியே மிக தூரமானப்பகுதிகளில் சம்பந்தமில்லாதத் துறைகளில் மாட்டிக்கொண்ட அவலங்களும் நடந்துள்ளதாகத் தெரிகிறது.
சுற்றுப் பயணிகளுக்கான விசாவில் நாட்டினுள் நுழைந்து பிறகு சட்டவிரோதமாக வேலை செய்வோர் மட்டுமின்றி முறையான பத்திரங்களைக் கொண்டவர்கள் கூட பல வேளைகளில் கொடுமையான முதலாளிகளிடம் மாட்டிக் கொண்டு அவதிப்பட்டிருக்கின்றனர்.
வேலாயுதத்தின் அனுபவமும் இதனையே பறைசாற்றுவதைப் போல் உள்ளது.
சுற்றுப் பயணிகளைப் போல நாட்டினுள் நுழைந்து சட்டவிரோதமாக வேலை செய்வோர் குடிநுழைவுத்துறை அதிகாரிகளிடம் மாட்டிக்கொள்வதைத் தவிர்ப்பதற்கு வெளியே வரமுடியாமல் சொல்லொன்னாத் துயரை அனுபவிக்கின்றனர்.
இந்த சூழ்நிலையைத்தான் பல முதலாளிகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கினறனர் என்பதுவே நிதர்சனம்.
ஆக இதுபோன்றக் கொடுமைகளுக்கு இலக்காகி வாய்த்திறக்க முடியாமல் மௌனத்தில் வேதனை அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்தியத் தொழிலாளர்களை காப்பாற்றுவதற்கான காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை தக்க சமயத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
மலேசியாவில் அயல்நாட்டுத் தொழிலாளர்கள் நடத்தப்படும் விதம் குறித்து அண்மைய காலமாக வெளிநாட்டு ஊடகங்களில் எதிர்மறையான செய்திகள் வெளிவந்த வண்ணமாக இருப்பது இதற்கொரு காரணமாகக் கூட இருக்கலாம்.
ஆகக் கடைசியாக இரண்டொரு தினங்களுக்கு முன் ‘சண்டே மிரர்’ எனும் பிரிட்டிஷ் பத்திரிகை ஜொகூரில் உள்ள ஒரூ மின்னியல் தொழிற்சாலையில் பணிபுரியும் அன்னியத் தொழிலாளர்களின் அவலம் பற்றி செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
எது எப்படியோ சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் மௌனத்தைத் துணைக்கழைத்து நாடளாவிய நிலையில் ஆங்காங்கே அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் நாட்டுத் தொழிலாளர்கள், குறிப்பாக உணவக ஊழியர்களுக்கு வேலாயுதத்தின் வழி ஒரு புதிய விடியல் பிறந்துள்ளது என்று துணிச்சலாகக் குறிப்பிடலாம்.
அதே சமயத்தில் முறையான ஆவணங்கள் இல்லாலமல் சட்டவிரோதமாக இங்கு வேலை செய்வோர் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்பதையும் உணரவேண்டும்.