இராகவன் கருப்பையா – கோறனி நச்சிலின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் 4 கட்ட மீட்புத் திட்டத்தை பிரதமர் மஹியாடின் அறிவித்துள்ள போதிலும் ‘ஹெர்ட் இம்யூணிட்டி’ எனப்படும் கூட்டெதிர்ப்பு சக்தியை அடையும் காலம் எப்போது வரும் என்று உறுதியாகக் கூற முடியாது.
ஏனெனில் கடந்த சில வாரங்களாக தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் நாடளாவிய நிலையில் துரிதப்படுத்தப்பட்டுள்ள போதிலும் நாட்டின் மக்கள் தொகையில் இன்னும் 6 விழுக்காட்டினருக்குக் கூட 2 தடுப்பூசிகளும் போட்டு முடிக்கப்படவில்லை.
சம்பந்தப்பட்ட அமைச்சர் கைரி ஜமாலுடின் நம்பிக்கையூட்டும் அறிவிப்புகளை அவ்வப்போது செய்து வருகிற போதிலும் நாடு பாதுகாப்பு எல்லையைத் தொடுவதற்கு இன்னும் கொஞ்ச காலம் பிடிக்கும் என்றே தெரிகிறது.
எனவே அரசாங்கம் விதித்துள்ள நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டு மேலும் அதிகமான சுய பாதுகாப்பு நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவேண்டியது அவசியமாகும்.
உதாரணத்திற்கு அன்றாடம் இலட்சக்கணக்கானோரின் கைக்கு கை மாறும் பணத்தினால் நோய்க் கிருமி அதி வேகத்தில் பரவ வாய்ப்பிருக்கிறது என்பதனை நிறைய பேர் இன்னும் உணர்ந்திருக்கவில்லை.
கோறனி நச்சில் ஆங்காங்கே பயணிப்பதற்கு மனிதர்களைத்தான் ஒரு வாகனமாகப் பயன்படுத்துகிறது. எனவே நமது புழக்கத்தில் உள்ள நோட்டுகளும் சில்லறை காசுகளும் அதற்கு உதவியாக செயல்பட வாய்ப்பிருக்கிறது எனும் உண்மையை நாம் நிராகரித்துவிட முடியாது.
கடந்த ஆண்டு முழு முடக்கத்தில் இருந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைப் போல் இல்லாமல் இவ்வாண்டு 120 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வழக்கம் போல செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பணப் புழக்கமும் இம்முறை மிக அதிக அளவில் உள்ளது அப்பட்டமாகத் தெரிகிறது.
நம் வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமான ஒரு அம்சமாக விளங்கும் பணத்தினால் தம் உயிருக்கே ஆபத்து வராமல் இருப்பதை உறுதி செய்துக் கொள்வது நமது கடமையாகும்.
எனவே முடிந்த அளவு பணத்தைத் தொடாமலேயே நம் நடவடிக்கைகளை மேற்கொள்வது பாதுகாப்பாக இருக்கும் என்பது மருத்துவ வல்லுநர்களின் கருத்தாகும்.
‘ஸ்மார்ட் ஃபோன்’ எனப்படும் திறன் பேசிகளை பயன்படுத்துவோர் கட்டணங்களை செலுத்துவதற்கு ‘இ-வாலட்’ அல்லது ‘பூஸ்ட்’ எனப்படும் மின்னியல் பணப்பையை உபயோகப்படுத்தலாம்.
இல்லையெனில் பொருளகங்கள் வழங்கும் ‘க்ரெடிட் கார்ட்’ எனப்படும் கடன் பற்று அட்டை அல்லது ‘ஏ.டி.எம். கார்ட்’ எனப்படும் பணப் பற்று அட்டை போன்ற மின்னியல் அட்டைகளை பயன்படுத்துவது பாதுகாப்பாக இருக்கும் என்பது மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையாகும்.
இம்மாதிரியான பணப் பட்டுவாடா நடைமுறைகளைக் கையாள்வதன் வழி ஒரு சல்லி காசைக்கூட கையில் தொடாமல் பரிவர்த்தனை செய்யலாம்.
பணம் உள்பட, நோய்த் தொற்றுடைய ஒருவர் எதனைத் தொட்டாலும் அந்தப் பொருளின் மீது 72 மணி நேரம் வரையில் கூட கிருமி உயிர் வாழ வாய்ப்பிருக்கிறது என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
திறன் பேசி அல்லது மின்னியல் அட்டை போன்ற வசதிகள் இல்லாதவர்கள் எந்த ஒரு அந்நியப் பொருளையும் தொட்ட பிறகு உடனே ‘செணிட்டைஸர்’ எனப்படும் கைத்தூய்மி அல்லது சவர்க்காரத்தினால் கைகளை நன்றாகக் கழுவி சுத்தப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.
அது மட்டுமின்றி வீடு திரும்பியவுடன் குடும்ப உறுப்பினர்கள் யாரையும் தொடுவதற்கு முன் குளித்து உடைகளை மாற்ற வேண்டுமாய் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
நோய்க்கிருமி சுவாசக் குழாய் வழியாகத்தான் ஒருவரின் உடம்பினுள் நுழைகிறது என்றபடியால் நம் முகத்தைத் தொடுவதற்கு முன் மேற்கொண்ட நடைமுறைகளை நாம் கடைபிடிப்பது மிகவும் அவசியமாகும்.
இதற்கெல்லாம் அப்பாற்பட்டு கூடல் இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு முடிந்த அளவு வீட்டினுள்ளேயே இருப்பதுதான் இந்நோயின் தொற்றைத் துண்டிப்பதற்கான சிறந்த வழி என்பது நம் அனைவருக்குமே தெரிந்த ஒரு விசயம்.