சர்ச்சைக்குரிய வாசகங்கள் இருப்பதாகக் கூறி கறுப்புக் கொடி பிரச்சாரத்திற்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுக்கவிருப்பது வருத்தத்தை அளிக்கிறது. பெண்டெரா ஹித்தாம் (#benderahitam) என்பது சமூக ஊடகங்களில் பரவிவரும் ஒரு பிரச்சார இயக்கமாகும். மக்கள் இதை ஒரு தளமாகப் பயன்படுத்தி இந்த கோவிட் 19 ஐ அரசாங்கம் கையாளும் விதத்தில் உள்ள அதிருப்தியைத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த சமூக வலைத்தள பிரச்சாரத்தில் #பெண்டெரஹித்தாம் , # லவான் ஆகிய இரண்டும் அதிகமாக மக்களால் பகிரப்படும் தளங்களாக விளங்குகின்றன. மலேசிய வரலாற்றில் என்றுமே இல்லாத வகையில் ஏறக்குறைய 250,000 பகிர்வுகள் நடந்துள்ளன
மக்கள் முன்வைப்பதெல்லாம் 3 கோரிக்கைகள் மட்டுமே
- நடப்பு பிரதமர் பதவி விலக வேண்டும்
- நாடாளுமன்றம் கூட்டப்படவேண்டும்
- அவசரக்காலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்
ஜனநாயகம் என்பது வெறும் தேர்தல் மட்டுமல்ல, மக்கள் குரல்களையும் குறைகளைக் கேட்பதுவும் கூட ஜனநாயகம்தான்.
அதை அவர்கள் தங்களின் கற்பனைக்கேற்ப வடிவமைத்துத் தெரிந்த வழியில் வெளிப்படுத்துவதைப் புறந்தள்ளிவிட்டு அல்லது குற்றம் எனக் கூறி நடவடிக்கை எடுக்க முற்படுவது ஜனநாயகமல்ல. மேலும் மக்கள் குரலாக ஒலிக்கும் நாடாளுமன்றம் செயல்படாமல் இருக்கும் இத்தருணத்தில் இப்படிச் செய்வது கண்டிக்கத்தக்கது.
இந்த பெரிக்காத்தன் அரசு முறையாக மக்கள் குறை கேட்டு நேர்மையான ஆட்சி ஒன்றை வழங்கவில்லை என்பதில் மக்கள் உணர்ந்துள்ள படியால் அவர்கள் விருப்பப்படி . குறியீடு அல்லது சின்னங்களைப் பயன் படுத்தி நடப்பு அரசாங்கத்திற்கெதிராக அவர்களின் குறைகளை வெளிப்படுத்துவது ஒன்றும் குற்றமல்ல.
மக்களின் கஷ்ட நஷ்டங்களைக் கேட்டு உடனடி தீர்வு காண வேண்டியது ஒரு அரசின் கடமையாகும். சுருங்கக்கூறின் பெரிக்காத்தான் அரசு மக்களின் சுமையை அறிந்திராமலும் அவர்களின் வலியைக் கண்டும் காணாமலும் இருக்கின்றது.
அரசாங்க ஊடகங்கள் மக்களின் குறைகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காததால் சமூக வலைத்தளங்களே மக்களின் சிறந்த தேர்வாக அமைகிறது.
பாக்கதான் ஹராப்பான் ஆட்சிக் காலத்தில் இன பாகுபாட்டை ஒழிப்பதற்கான சர்வதேச சம்மேளனத்திற்கே எதிராக ( ICERD) ஆர்ப்பாட்டங்களை நடத்த , ஜனநாயக உரிமை என்ற அடிப்படையில் எந்த வித காவல்துறை இடையூறுமின்றி அனுமதிக்கப்பட்டது.
இன உணர்ச்சிகளைத் தூண்ட வேண்டும் என்ற நோக்கிலும் பாக்காத்தான் ஹராப்பான் ஆட்சிக்கு எதிராக மக்களைத் தூண்ட வேண்டும் என்ற நோக்கிலும் அந்த ஆர்ப்பாட்டங்களிருந்தன என்றாலும் ஜனநாயக உரிமை என்ற பேரில் அவை அனுமதிக்கப்பட்டன.
பாக்காதான் ஹாரப்பான் ஆட்சியிலிருந்ததை விட ,இப்பொழுது இந்தகோவிட் 19 ஆல் மக்கள் வெகுவாக பாதிப்பிற்குள்ளாகி இருக்கின்றார்கள்.
இன்றைய சவால்களாக பசிக் கொடுமை, தடுப்பூசி குத்துவதில் தாமதம், நோய்த்தொற்றால் அதிகமான இறப்புகள், அடிக்கடி மாறும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP), அதை மீறும் மக்களுக்கு ஒரு விதமாகவும் ஆளும் அரசியல்வாதிகளுக்கு வேறு விதமாகவும் நடவடிக்கை எடுக்கும் செயல்,,பொருளாதார கெடுபிடிகள்,வெளி நாட்டு நேரடி முதலீடு பாதியாய் குறைந்திருத்தல் , கோவிட் 19 நேர்வுகளைக் குறைக்க வழிதெரியாத தடுமாறும் அரசு ஆகியவை இருக்கின்றன.
இந்த தருணத்தில் காவல் துறையினர் குற்றச் செயல்கள், ஊழல் தடுப்பு, இனத் துவேஷம் ஆகியவற்றிற்கெதிராக நடவடிக்கைகள் எடுப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
கருப்புக் கொடியோ வெள்ளைக் கொடியோ ,அதுவும் ஜனநாயகத்தின் வெளிப்பாடே என்பதைக் காவல் துறையினர் உணரவேண்டும்
மக்களின் நியாயமான குறைகளிலும் ,தேசிய பாதுகாப்பிற்கு மிரட்டலாக விளங்கும் இன மத பிரச்சனைகளைத் தூண்டும் அரசியல் வாதிகள், இணையதள ஆக்கிரமிப்பாளர்களின் (CYBERTROOPERS) செயல்களிலும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து காவல் துறையினர் செயல்பட வேண்டும்.