இராகவன் கருப்பையா- பத்திரிகைகள் வாயிலாகவோ புலனத்தின் வழியிலோ அல்லது நேரடியாகவோ உதவி நாடுவோரில் ஒரு சிலர் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகியிருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல் இப்போது அம்பலமாகியுள்ளது.
மற்ற வேளைகளில் இது போன்றக் கேவலமான சம்பவங்கள் ஆங்காங்கே அவ்வப்போது நிகழ்ந்துள்ள போதிலும் தற்போதைய நோய்த் தொற்றுக் காலத்தை சில கயவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பது மிகவும் வேதனையான விசயம்.
வேலையிழந்து, வருமானமின்றி, ஒரு வேளை உணவுக்குக் கூட வழியின்றி தங்களுடைய இல்லங்களுக்கு முன் வெள்ளைக் கொடியேற்றி உதவி நாடும் பெண்கள், குறிப்பாக கணவன் துணையில்லாத தாய்மார்கள் இத்தகையக் கொடுமைகளுக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிகிறது.
பினேங் மாநிலத்தில் இத்தகையத் தொல்லைக்கு ஆளான ஒரு குடும்ப மாது மிகவும் ஆங்காரமாக தனது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கும் காணொலி ஒன்று கடந்த ஒரு வார காலமாக சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
உதவி நாடிச் செல்லும் இடங்களில் ஒரு சிலரின் போக்கு பாலியல் எண்ணத்தைக் கொண்ட அசிங்கமான நோக்கமாகவே உள்ளது என குற்றஞ்சாட்டிய அவர் இம்மாதிரியானத் தொல்லைகள் தொடர்ந்தால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளப் போதாதாவும் மிரட்டினார்.
அப்படி ஒரு அசம்பாவிதம் நடந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பது எனும் கேள்வியும் நம்மிடையே எழத்தான் செய்கிறது.
இத்தகைய காம வெறியர்களை நீதியின் முன் நிறுத்த முறையான சட்டம் இன்னும் இயற்றப்படாத வரையில் இதுபோன்ற குற்றச் செயல்களுக்கும் முடிவிருக்காது.
பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலோர் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவில்லாமலும் பாதுகாப்புக் கருதியும் இம்மாதிரியான சம்பவங்களை காவல் துறையில் புகார் செய்வதில்லை.
கடந்த ஆண்டுத் தொடக்கத்தில் கிளேங் வட்டாரத்திலும் இதே போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தனது கணவர் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு படுத்தப் படுக்கையாக இருப்பதால் புலனம் வழி உதவி நாடிய ஒரு குடும்பப் பெண்ணை தொலைபேசியில் அழைத்த சில அடாவடிப் பேர்வழிகள் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக நம்பப்படுகிறது.
சில போக்கிரிகள் இரவு நேரத்தில் மது போதையில் வீட்டுக் கதவைத் தட்டி தங்களுடன் வெளியே வருமாறு அழைத்ததாகவும் அம்மாது சில அரசு சாரா இயக்கங்களின் உறுப்பினர்களிடம் விவரித்துள்ளார்.
ஆக இதே போல இன்னும் எத்தனைப் பேர் தங்களுடைய கசப்பான அனுபவங்களை வெளியே சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் விழிநீரை பலியாக்கி வீட்டுக்குள்ளேயே அழுது கொண்டிருக்கிறார்கள் என்று தெரியாது.
இது குறித்து கருத்துரைத்த பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி ராணி பட்டு, எந்த சூழ்நிலையிலும் யாரும் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று குறிப்பிட்டார்.
பெண்கள் உரிமை போராட்டவாதியுமான அவர், இத்தகைய குற்றங்களை புரிவோரை தண்டிப்பதற்கு சட்டமொன்றை இயற்றுவதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய காலம் கனிந்துவிட்டது என்று கூறினார்.
அதன் தொடர்பான மசோதா இன்னமும் சட்டத்துறை அலுவலகத்தின் பார்வையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆதரவற்றப் பெண்களின் உரிமையை பாதுகாப்பதோடு அவர்களுக்கு ஓரளவு பாதுகாப்பையும் கொடுக்கக் கூடிய இது போன்ற சட்டங்களுக்கு ஏன் முன்னுரிமை வழங்கப்படுவதில்லை என்று தெளிவாகத் தெரியவில்லை.
அப்படியே அதற்கான சட்டங்கள் இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் துணிச்சலாக வெளியே வந்து புகாரளித்து நீதி கிடைப்பதற்கு வகை செய்வதற்கான வழிமுறைகளும் இருக்க வேண்டும்.
இல்லையெனில் பெரும்பாலானப் பெண்களுக்கு, குறிப்பாக குடும்ப ஆதரவு இல்லாதவர்களுக்கு இத்தகைய சட்டங்கள் இருந்தும் இல்லாததைப் போல பயனற்றதாகவே போய்விடும்.