கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஒரு வார காலத்தில் குணமடைந்துவிடுவார்கள் என்றும், அரிதாகவே அவர்களுக்கு நீண்டகால அறிகுறிகள் இருக்கும் எனவும் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
லண்டனின் கிங்ஸ் கல்லூரி விஞ்ஞானிகள், குறைவான எண்ணிக்கையிலானவர்களுக்கு நீண்டகால உடல்நல பாதிப்பு இருந்தாலும் அந்த எண்ணிக்கை மிகக் குறைவே என்கின்றனர்.
தலைவலி மற்றும் உடல் சோர்வுதான் பொதுவாகக் காணப்பட்ட அறிகுறிகள்.
குழந்தைகள் நலன் மற்றும் குழந்தைகள் உடல் நலம் குறித்த நிபுணர்கள், இந்த தரவு மருத்துவர்கள் கிளினிக்கில் கண்ட நோயாளிகளிலிருந்து எடுக்கப்பட்டது என்கின்றனர்.
பெரியவர்களை விட, கொரோனா வைரஸின் தாக்கம் குழந்தைகளுக்கு குறைவாகவே உள்ளது.
தொற்று ஏற்படும் பலருக்கு அறிகுறிகள் தெரிவதில்லை. அவ்வாறே இருந்தாலும் அது மிதமான அறிகுறிகளாகவே உள்ளன.
லேன்செட் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் உடல்நலம் சார்ந்த ஆய்வு, குழந்தைகளை எவ்வாறு கொரோனா வைரஸ் தாக்குகிறது என்றும் பிற மூச்சு தொடர்பான நோய்களைக் காட்டிலும் இது எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் ஆராய்ந்தது. இதற்காக பிரிட்டனின் Zoe Covid Study செயலியில் பெற்றோர்கள் அளித்த தரவுகள் ஆய்வு செய்யப்பட்டன.
செப்டம்பர் 2020 முதல் பிப்ரவரி 2021 வரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு அறிகுறிகள் கொண்ட ஐந்து முதல் 17 வயதுடைய குழந்தைகள் 1734 பேரை இந்த ஆய்வு ஆராய்ந்தது.
கொரோனா பாதித்த குழந்தைகள், 20-ல் ஒன்று அல்லது அதற்கும் குறைவான எண்ணிக்கையில் இருந்தவர்களுக்கு 4 வாரங்கள் அல்லது அதற்கு மேல் அறிகுறிகள் இருந்தன. 50 பேரில் ஒருவருக்கு 8 வாரங்களுக்கு மேல் வைரஸ் அறிகுறிகள் இருந்தன.
சராசரியாக 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை விட, சற்று வயது அதிகமான குழந்தைகள் சற்று அதிகமான உடல் நல குறைவுகள் இருந்தன.
12-17 வயதிலான குழந்தைகள் ஒரு வாரத்தில் குணமடைந்தால் அதை விட வயது குறைவான குழந்தைகள் ஐந்து நாட்களில் குணமடைந்தனர்.
தலைவலியும் உடல் சோர்வும் அதிகம் தென்பட்ட அறிகுறிகள். பிற அறிகுறிகள், தொண்டை கரகரப்பு, வாசனை தெரியாமல் இருத்தல் ஆகியவை.
வலிப்பு போன்ற நரம்பு ரீதியான பிரச்னை யாருக்கும் தென்படவில்லை.
அதேபோன்று இந்த குழு அறிகுறிகள் கொண்ட அதேசமயம் கொரோனா ‘நெகடிவ்’ என வந்த குழந்தைகளையும் பரிசோதித்தது.
அதில் 1734 குழந்தைகளில் 15 பேருக்கு மட்டுமே குறைந்தது 28 நாட்கள் அறிகுறிகள் தென்பட்டன.
இந்த ஆய்வில் ஈடுபட்ட மருத்துவர்களில் ஒருவரான எம்மா டன்கன், கோவிட் 19க்கு பிறகு குழந்தைகளுக்கு நீண்டநாள் பட்ட உடல்நல பாதிப்புகள் வரலாம். இருப்பினும் அந்த எண்ணிக்கை குறைவே. அதேபோன்று நாட்கள் போக அவர்கள் குணமடைந்துவிடுவர் என்பதுதான் இந்த ஆய்வு சொல்லும் செய்தி என்கிறார்.
“மேலும் பிற நோய்களாலும் குழந்தைகளுக்கு நீண்டநாட்களுக்கு உடல்நலபாதிப்புகள் இருக்கலாம் எனவே கோவிட் 19 தோற்றோ அல்லது நீடித்த நோய் உள்ள குழந்தைகளையோ நன்றாக கவனித்து கொள்ள வேண்டும்,” என்கிறார் எம்மா.
நீங்கள் உங்கள் குழந்தைகள் நலன் குறித்து கவலையடைந்தால் முதலில் மருத்துவரிடம் சென்று அறிகுறிகள் குறித்து விளக்குங்கள் என்கிறார் இந்த அய்வில் ஈடுபட்ட மூத்த மருத்துவர் மைகேல் அப்சார்ட். ஏனென்றால் அது வேறு பிரச்னையாகவும் இருக்கலாம் என்று தெரிவிக்கிறார் அவர்.
இந்த ஆய்வு மருத்துவர்கள் தங்களின் கிளினிக்கில் கண்ட குழந்தைகளை பொறுத்து மேற்கொள்ளப்பட்டது என்று இந்த ஆய்வில் ஈடுபடாத குழந்தைகள் மருத்துவம் மற்றும் குழந்தைகள் நலனுக்கான ராயல் கல்லூரியின் தொற்று நோய் பிரிவு தலைவர் மருத்துவர் விட்டேக்கர் தெரிவித்துள்ளார்.
(நன்றி Tamil webdunia)